குமாரர்கள் மூலம் ஆரோன் அடைந்த நிந்தனை.
குமாரர்கள் மூலம் ஆரோன் அடைந்த நிந்தனை.
கடவுள் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து வெளியே கொண்டுவர ஆரோனை பயன்படுத்தினார்.
இவன்தான் மோசேயினுடைய வாயாகத் திகழ்ந்தான்.
மோசேயோடு கூட பார்வோனோடு பேச்சுவார்த்தை நடத்தியவன்
இவன்தான் .
இஸ்ரவேல் ஜனங்களுடைய முதல் பிரதான ஆசாரியன்.
ஆசரிப்பு கூடாரம் உருவாக்கப்பட்ட பிறகு இவன்தான் முதன்முதலாக இஸ்ரவேல் ஜனங்களுக்காக பலியை செலுத்தியவன்.
ஆசரிப்புக் கூடாரத்தில் அத்தனை பொருட்களும் பரிசுத்தமாக்கப்பட்டு முதல் முதல் தேவனுக்கு பலிகளை செலுத்திய போது தேவனுடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்பட்டது.
கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.
லேவியராகமம் 9:24
அந்த நாள் ஆரோனுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக முடிந்திருக்க வேண்டியது.
மற்ற ஜனங்களோடு சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நாளாக
இருந்திருக்க வேண்டியது.
ஆனால் அந்த நாளில் தான் ஆரோனின் இரண்டு குமாரர்களும் கர்த்தருடைய சந்நிதியில் மடிந்து போனார்கள்.
தேவன் கட்டளையிடாத வேறொரு நெருப்பை கர்த்தருக்கு செலுத்தினபடியினால் கர்த்தரின் சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை எரித்து போட்டது.
இந்த நிகழ்வை பார்த்து ஆரோன் பேசாமல் மௌனம்
காத்தான். லேவி10:3
லட்சக்கணக்கான தன் ஜனங்கள் முன்பாக தன்னுடைய இரண்டு குமாரர்களும் கர்த்தரால் தண்டிக்கப்பட்ட நிகழ்வு அவனுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது.
தன்னுடைய குமாரர்களின் தவறுக்கு, மீறுதலுக்கு அவன் எவ்வளவேனும் பொறுப்பானவன் அல்ல.
அவர்கள் பாவத்திற்கு ஆரோனை எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாது.
ஆனாலும் மோசேக்கு அடுத்தபடியாக தலைவனாக இருந்த அவனுக்கு இவ்வளவு பெரிய அவமானம்
அவனுடைய குமாரர்களால் ஏற்பட்டது.
அதுமாத்திரமல்ல
திரும்பப்பெற முடியாத இழப்பை சந்தித்தான்.
தன் குமாரர்களுடைய மறைவு எவ்வளவு வலியை ஏற்படுத்தி இருக்கும்.
இன்றைக்கும் தேவனால் பயன்படுத்தப்படுகின்ற, தேவனுக்காக உண்மையாக வாழ்கின்ற ஊழியக்காரர்கள், விசுவாசிகள் மத்தியில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
அவர்கள் அடிக்கடி தேவனை நோக்கி கேட்கின்ற கேள்வி "ஏன் ஆண்டவரே" என்பதுதான்.
"நான் உமக்கு உண்மையாக வாழ்ந்தேனே, ஊழியம் செய்கிறேனே என் குடும்பத்தில் ஏன் பிள்ளைகளால் இவ்வளவு பெரிய அவமானம்?, ஏன் இந்த இழப்பு?"என்று அவர்கள் கேட்காத நாளே இருக்க முடியாது.
ஆனால் அதற்கான பதில் இந்த உலகத்தில் அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது.
அந்த பதிலை நித்தியத்தில் தான் அவர்கள் பெற முடியும்.
கிறிஸ்தவ சமுதாயத்தில் தங்கள் பிள்ளைகளால் தங்களுக்கு ஏற்படுகின்ற நிந்தனைகள் யாரால் புரிந்து கொள்ள முடியும்?
அன்றைக்கு ஆரோன் சபை முன்பாக மௌனம் காத்தது போல் இந்த வகைப் பாடுகளை அனுபவிக்கும் தேவனுடைய பிள்ளைகள் மௌனம் காப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.