என்னத்தை குடிப்போம்? என்னத்தை புசிப்போம்?
உங்கள் சிந்தனைக்கு:
என்னத்தை குடிப்போம்? என்னத்தை புசிப்போம்?
"What shall we eat?"
'What shall we drink?"
இந்தக் கேள்விதான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது இலக்கான கானானை அடைய முடியாமல் செய்தது.
400 ஆண்டுகளாக அடிமைத்தனத்திலிருந்து ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் பார்வோன் கையிலிருந்து தங்களை விடுதலையாக்கின தேவன் அவர்களுடைய அடிப்படையான உலக தேவைகளை சந்திப்பார் என்ற நம்பிக்கை இல்லாமல் போனதுதான் அவர்களுடைய வீழ்ச்சிக்கு காரணம்.
இந்தத் தேவைகளுக்காக அவர்கள் விண்ணப்பித்திருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் அவர்களுடைய விண்ணப்பத்தில் தேவன் பிரியமாக இருந்து பதில் கொடுத்திருப்பார்.
ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுத்து கலகம் செய்ய ஆரம்பித்தார்கள்.
தேவன் தம்முடைய பிள்ளைகளுடைய அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறார். அவைகளை நிறைவேற்ற அவர் ஆயத்தமாக இருக்கிறார்.
ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுப்பு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தார்கள். விளைவு வனாந்தரத்தில் மடிந்து போனார்கள்.
அதுபோல நாமும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை தொடங்கும் பொழுது என்ன்த்தை குடிப்போம்? என்னத்தை உடுத்துவோம்? என்னத்தை உண்போம்? போன்ற கவலைகளை உதறி வைத்துவிட்டு தேவன் பார்த்துக் கொள்வார் என்கிற விசுவாசத்தோடு தேவனுடைய நீதியையும் அவருடைய ராஜ்ய விரிவாக்கத்தையும் விரும்பி அதில் ஈடுபடும் போது நமக்குத் தேவையான ஆசீர்வாதங்கள் நம்மை தேடி ஓடிவரும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உலக தேவைகளை முன்னிறுத்தி அவைகளுக்காக நாம் இயேசுவை பின்பற்றுவோம் என்றால் நம்மை போல பரிதாபமான மனிதர்கள் வேறு எவரும் இந்த உலகில் இருக்க முடியாது.
1980ம் ஆண்டு இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்ட போது வேதத்தோடும் ஒரு பெட்டியோடும் கிளம்பினேன். என்னத்தைக் குடிப்போம் என்னத்தை புசிப்போம் என்கிற சிந்தனை இல்லாமல் தேவனுடைய நீதியை மட்டும் தேடின காரணத்தால் இந்த நாள் வரையிலும் என்னுடைய அடிப்படை தேவைகளை சந்திப்பதற்கு அவர் போதுமானவராய் இருந்தார் என்பதற்கு நானும் ஒரு சாட்சி.
கர்த்தர் மகிமைப்படுவாராக.
படிக்க,யாத் 17:1-7,
எண்ணா20:2,13, 21:6