*சங்கீதங்கள்* *வேத பாடம் 7*
*உங்கள் சிந்தனைக்கு.*
*சங்கீதங்கள்*
*வேத பாடம் 7*
தியான பகுதி: சங்கீதம் 3 (2)
சங்கீத புத்தகத்தில் வருகின்ற முதல் ஜெபம் இந்த சங்கீதத்தில்தான் வருகிறது.
சங்கீதம் 1 முதல் 41 வரை உள்ள சங்கீதங்களில், 1, 10, 33 ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்தும் தாவீது எழுதிய சங்கீதங்கள் என்று கருதப்படுகிறது.
இந்த மூன்றாவது சங்கீதம்தான் தாவீதின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கப்படுகின்ற முதல் சங்கீதம்.
சங்கீதம் 3:1 — இந்த சங்கீதத்தை தாவீது எழுதும்பொழுது, தன்னுடைய எதிரிகள் எவ்வளவு பெருகிவிட்டார்கள், தன்னை எதிர்ப்போர் அநேகர் என்று சொல்லியே ஆரம்பிக்கிறான்.
இந்த அளவுக்கு அவன் எதிரிகளால் சூழப்படுவதற்கு முக்கிய காரணம் அவனுடைய பாவமே. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
*நமக்கு எதிரிகள் இரண்டு வகையில் தோன்றலாம். ஒன்று, கர்த்தர் நம்முடைய விசுவாசத்தைச் சோதிப்பதற்காக எதிரிகளை எழுப்புவார். இன்னொரு வகை, நம்முடைய பாவங்களின் நிமித்தம் நம்முடைய* *எதிரிகளைப் பெருகப்பண்ணுவார்.*
*தாவீதுக்கு வந்த இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம் பத்சேபாளிடம் நடந்த தவறான காரியம்தான். கடவுள்* *தாவீதைத் தண்டிப்பதற்கு எதிரியை வேறு எங்கிருந்தும் கொண்டு* *வரவில்லை; அவனுடைய குடும்பத்திலிருந்தே அவனுக்கு விரோதமாக* *எதிரிகளை உருவாக்கினார்.*
*தாவீதுக்கு அப்சலோம் மீது தனிப்பட்ட ஒரு பாசம் இருந்தது.* *அதனால்தான் அந்தப் பாசமுள்ள மகனைக் கொண்டே கடவுள் அவனை தண்டிக்கிறார். அவன் மரித்தபோது* இவ்வாறு புலம்புகிறான்:
“ராஜா மிகவும் கலங்கி, வாசலின் மேலறைக்குப் போய் அழுதான்; அவன் போகையில்: என் குமாரனாகிய அப்சலோமே! *அப்சலோமே, என் குமாரனே, என் குமாரனே! நான் உனக்குப் பதிலாகச் செத்திருந்தால் நலமாயிருக்கும்;* *அப்சலோமே, என் குமாரனே, என் குமாரனே! என்றான்.”*
2 சாமுவேல் 18:33
*விபச்சாரப் பாவம் என்பது விசுவாசிகளின் வாழ்க்கையில் மிகவும் கொடிய பாவம். அதை விசுவாசிகள் எளிதாகக் கடந்து* *செல்லக்கூடாது. எவ்வளவு பெரிய ஊழியக்காரராக இருந்தாலும், இந்தப் பாவத்தைச் செய்துவிட்டு அதன்* *தண்டனையிலிருந்து தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று* *கனவிலும் நினைத்துக்கொள்ள முடியாது.*
சிலருக்கு விபச்சாரப் பாவத்தினால் வரக்கூடிய தண்டனை வெளிப்படையாக எல்லோரும் காணக்கூடிய அளவுக்கு இருக்கும். சிலருக்கு மட்டும் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தாவீதின் பாவத்தை கடவுள் மன்னித்துவிட்டார். ஆனால், தன் குடும்பத்தில் அவன் சந்தித்த அவமானங்கள், சிந்தனைகள், இழப்புகள் ஆகியவை மிகுந்த ஆழமானவை. 2 சாமுவேல் 12 முதல் 14 அதிகாரங்களை நாம் படித்துப் பார்த்தால் இது நமக்குத் தெளிவாகப் புரியும்.
ஆனாலும், தாவீது எந்த இடத்தில் விழுந்தானோ, அந்த இடத்தில் கர்த்தரோடு ஒப்புரவாகி மீண்டும் எழுந்தான்.
*ஒரு விசுவாசிக்கு மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படலாம்.* “ *இதோடு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை முடிந்துவிட்டது* ” *என்று எண்ணக்கூடிய அளவுக்கு தோல்வி அவ்வளவு ஆழமானதாக இருக்கலாம். ஆனாலும், கடவுளிடத்தில் திரளான இரக்கமும்* *கிருபையும் இருக்கிறது.*
*போர்க்களத்தில் வடுக்கள் இல்லாத போர்வீரனைப் பார்க்க முடியாது. அதுபோல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மிகவும் பரிதாபமான* *தோல்விகள் நேர்ந்தாலும், கடவுள் நம்மைத் தூக்கி நிறுத்த முடியும்.*
அந்த நம்பிக்கையோடுதான் அவன் இவ்வாறு பாடுகிறான்:
“எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், நான் பயப்படமாட்டேன்.”
சங்கீதம் 3:6
*சாத்தான் நம்மீது ஏவுகின்ற குற்றச்சாட்டுகள் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், கடவுள் அவற்றை மாற்றி நமக்கு புதிய வாழ்வை அளிப்பதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார்.*
எனவே, இறுதியில் இவ்வாறாக எழுதி சங்கீதத்தை தாவீது முடிக்கிறார்:
“யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்கள்மேல் இருப்பதாக.”
சங்கீதம் 3
உணர்த்தும் பாடங்கள்
1. கடவுளுடைய மனதுக்கு ஏற்றவனாகக் காணப்பட்ட தாவீதுகூட மிகப்பெரிய விபச்சாரப் பாவத்தில் விழுந்திருக்கும்பொழுது, “நிற்கிறேன்” என்று சொல்கிற நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2. பாவத்தின் நிமித்தம் கடவுள் நமக்குக் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பும்பொழுது, கடவுள் நம்மைப் புதுப்பிக்கப் போதுமானவராக இருக்கிறார்.
3. கூடுமானவரை கடவுளால் தண்டனை பெறாமல் வாழ்கின்ற வாழ்க்கையைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.