Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோபுவின் புத்தகம் — வேத பாடம் 29
*உங்கள் சிந்தனைக்கு!*

யோபுவின் புத்தகம் — வேத பாடம் 29

*Job’s Formula for a Holy Life — யோபுவின்* *பரிசுத்த வாழ்க்கைக்கான பார்முலா*

ஏனோக்கு தேவனோடு வாழ்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டான்.
நோவா நீதிமானாக வாழ்ந்தான்.
ஆபேலை நீதிமான் என்று வேதம் குறிப்பிடுகிறது. எபி. 11:4.
ஆபிரகாம் யோபுவின் காலத்திற்குப் பின்பு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
யோபு தன்னைப் பற்றி எவ்வளவு நன்மையான காரியங்களைப் பேசி இருந்தாலும், அதில் முக்கியமாக அவன் தனிப்பட்ட ஒழுக்கத்தைக் குறித்து கூறிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்க, இன்றைக்கும் அவசியமான, தேவையான ஒரு வாக்கியமாக நாம் பார்க்க வேண்டும்.
இந்தப் புத்தகத்தின் 31ஆம் அதிகாரத்தில் *அவன் கூறிய இரண்டு வார்த்தைகள்* இன்றைக்கும் நமக்கு சவாலாக விளங்குகின்றன.
“ *கன்னிப்பெண் எவளையும் நோக்காதிருக்க என் கண்களோடு நான் ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.” — 31:1*
“பெண்ணில் என் மனம் மயங்கியிருந்திருந்தால், பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்...” — 31:9
இதை 3000 ஆண்டுகளுக்குப் பின்பு வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,
“ *ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே* *விபசாரம் செய்தாயிற்று* .” — மத்தேயு 5:28
என்று கூறிய இந்தக் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கடவுளுடைய வார்த்தைகள் எழுத்துப்பூர்வமாக வெளிப்படாத அந்தக் காலகட்டத்தில், பரிசுத்தத்தைப் பற்றிய போதனைகள், தனிப்பட்ட ஒழுக்கங்களைப் பற்றிய காரியங்கள் அதிகமாக வலியுறுத்திச் சொல்லப்படாத காலத்தில், *பெண்களை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதைப் பற்றிய யோபுவின் இந்தக்* *கருத்து நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.*
இன்றைக்கு சபைகளில் ஆயிரக்கணக்கான செய்திகளைக் கேட்கிறோம். நம்முடைய சரீர நன்மைகளுக்காகப் பேசப்படுகின்ற அநேக செய்திகள் உண்டு. ஆனால் தனிப்பட்ட உள்ளார்ந்த பரிசுத்தத்தை குறித்து பேசப்படுகின்ற செய்திகள் மிக மிகக் குறைவு.
அதுவும் நம்முடைய கண்களுக்கு சிறை போட முடியாமல் தவிக்கின்ற *இந்த நவீன உலகத்தில், கண்களுக்கு காவல் வைக்கின்ற, கண்களோடு உடன்படிக்கை செய்கின்ற* *அவசியத்தை வலியுறுத்துகின்ற இந்த செய்திகள்* *நமக்கு எவ்வளவு* *அவசியம்* .
*கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய எல்லாவற்றையும் நாம் முகநூல், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ்* , *ஆயிரக்கணக்கான சமூக வலைதளங்கள் மூலமாக இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்* .
*40* *ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்து மறைந்து பார்க்கப் பயப்பட்ட காரியங்கள், நம்முடைய* *கைகளில் இலவசமாகத் தவழ்கிறது.*
*இந்த ஆபாச இலவசங்கள் எட்டு வயது சிறுவன் முதல் 80 வயது கிழவன் வரைக்கும் சென்றடைகிறது.*
*சமுதாய சீர்கேட்டில் உச்சகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதில்* நாம் எளிதில் தப்பித்துக்கொள்ள முடியாது.
நமக்கு என்று ஒரு பக்தி வைராக்கியம், ஒரு முயற்சி, கர்த்தருக்குப் பயப்படுகின்ற சிந்தனை, தேவனைத் தேடுகின்ற அனுபவங்கள், வசனத்தைத் தியானிக்கக்கூடிய சிந்தனைகள் — இவைகளால் மட்டுமே இந்தச் சுனாமியை நாம் வெற்றிகொள்ள முடியும்.
எவ்வளவு விசுவாசிகள், ஊழியர்கள் கர்த்தருக்காக வெளியில் சாதிக்கின்றவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் இதில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது கர்த்தருக்கு மட்டுமே வெளிச்சம்.
*வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் நம் கண்களோடு உடன்படிக்கை செய்துகொள்ள* *வேண்டிய காலம் இது.*
*உலக மக்களைக் காட்டிலும் ஊழியக்காரர்கள், விசுவாசிகள் இந்த விஷயத்தில் மேம்பட்டவர்கள் என்று* *நாம் ஒருபோதும் உறுதியாகக் கூற முடியாது.*
யோபு மிகவும் வசதியான காலத்திலும் பரிசுத்தமாக வாழ்ந்தான். கடுமையான வேதனையிலும் சரீரத் தாக்கத்திலும் அந்தச் சிந்தனையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தான்.
பாவத்திற்கான முதல் படி இச்சை.

மரணத்திற்கான முதல் படி பாவம்.

*Lust is the first step toward sin.*

*Sin is the first step toward death.* — *Wiersbe* .

கடவுள் நியாயத்தீர்ப்பு நாளில் நம்முடைய செயல்களும், சிந்தனையில் ஏற்படுகின்ற பாவங்களும் இரண்டும் தண்டனைக்கு உள்ளாக்கப்படும். எபி. 4:12–13.

விபச்சாரப் பாவம் என்பது சிந்தனையில் இருந்து முதலில் ஆரம்பிக்கிறது. அந்தச் சிந்தனையைக் கட்டுப்படுத்துவதற்கு யோபு கூறிய இந்த அறிவுரை மிகவும் அவசியம்.
இன்றைக்கு நாம் எதற்குக் கடிவாளம் தேவையில்லையோ, *நம்முடைய கண்களுக்கு கடிவாளம் கட்டாயம்* அவசியம்.

*நாவுக்குக் கடிவாளம் போடாவிட்டால் அது ஏற்படுத்தும் விளைவுகளைவிட, கண்களுக்குக்* *கடிவாளம் போடாததால் ஏற்படுகின்ற விளைவைச் சமாளிப்பது, மேற்கொள்வது* , *ஈடுகட்டுவது மிகவும் கடினம்.*
நம்முடைய ஒழுக்கம் கேள்விக்குறியாக்கப்பட்டால், அதிலிருந்து மீண்டு வருவது மிகக் கடினம். அதற்கான ஒரே மருந்து, இன்றைய காலகட்டத்தில் *நம்முடைய கண்களுக்குக்* *கடிவாளம்* போட்டு, அதனோடு உடன்படிக்கை செய்துகொள்வது.
யோபுவின் ஃபார்முலா இக்காலத்திற்கு மிகவும் அவசியம்.
*யோசேப்புக்கும் தானியேலுக்கும் பரிசுத்த வாழ்க்கையில் முன்னோடியாக இருந்த யோபுவின் அர்ப்பணிப்பை* *பின்பற்றுவது இன்றைய காலத்தின் அவசியத்* *தேவை* ..
கடவுளுடைய பணியில்
எசேக்கியேல் சண்முகவேல்.