Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*யோபுவின் புத்தகம் — வேத பாடம் 30*
*உங்கள் சிந்தனைக்கு!*

*யோபுவின் புத்தகம் — வேத பாடம் 30*

கடவுள் பாடுகளை எதன் அடிப்படையில் அனுமதிப்பார்?
யோபு 34:23
இந்த வசனத்திற்கு பல வகையான மொழிபெயர்ப்புகள் உள்ளன. அவற்றில் இரண்டு மொழிபெயர்ப்புகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1. பவர் மொழிபெயர்ப்பு:
“ *மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்* .”

— யோபு 34:23
2. கத்தோலிக்க மொழிபெயர்ப்பு:
“வலியோரை நொறுக்குவதற்கு அவர் ஆய்ந்தறிவு செய்யத் தேவையில்லை; அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.”

*நான் பவர் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருத்தைத் தியானிக்க விரும்புகிறேன்.*
இந்த வசனத்திற்கு ஆதாரமாக பவுல் கூறிய வார்த்தைகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:
“தேவன் நம்முடைய ஆவிக்குரிய நிலையை அறிந்தவராக இருக்கிறார். *நாம் தாங்க முடியாதபடி சோதிக்கப்படுவதற்கு* *அவர் இடங்கொடுப்பதில்லை* ; சோதனையோடுகூட அதைத் தாங்கிக்கொள்ளும் வழியையும் அவர் ஏற்படுத்துகிறார்.”

— 1 கொரிந்தியர் 10:13
கடவுள் எல்லோருக்கும் எல்லாவிதமான சோதனைகளையும் சகிக்க அனுமதிக்க மாட்டார். *நம்முடைய ஆவிக்குரிய வலிமை, திராணி ஆகியவற்றின் அடிப்படையிலேயே* *சோதனைகளின் தன்மை இருக்கும்* .
*ஆவிக்குரிய வாழ்க்கையில் குழந்தையாக இருப்பவர்களுக்கு, வாலிபர்களுக்குரிய* *சோதனையை கடவுள்*
அனுமதிக்க மாட்டார். ஆவிக்குரிய வாழ்க்கையில் வாலிபராக இருப்பவர்களுக்கு, ஆவிக்குரிய முதியவர்களுக்குரிய சோதனையை அனுமதிக்க மாட்டார்.
*நம்முடைய சோதனையின் தன்மை, நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைப்* *பொறுத்தே இருக்கும்; வயதைப் பொறுத்தது அல்ல.*
*நான் வயதாக இருப்பதினாலேயே, நான் ஆவிக்குள் வளர்ந்திருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. ஆவிக்குரிய* *வளர்ச்சி என்பது வேறு; சரீர முதிர்ச்சி* *என்பது* *வேறு* . *இவை இரண்டு வெவ்வேறு கோணங்கள்.*

யோபுவின் வாழ்க்கையில் அவனைப்போல் அடுத்தடுத்து மிகவும் கடினமான சோதனைகளையும் பாடுகளையும் சகித்தவர்கள் வேதத்தில் வெகு வெகு சிலரே.
*கடவுளும் அவனுடைய ஆவிக்குரிய வலிமையையும் சக்தியையும் அறிந்திருந்தார். அதனால்தான் இவ்வளவு பெரிய* *சோதனையை கடவுள் அவன் வாழ்க்கையில் அனுமதித்தார்.*
எல்லாரும் அவனைக் கைவிட்ட நிலையிலும், சரீரம் ஒத்துழைக்காத சூழ்நிலையிலும், ஆதரவாக இருக்க வேண்டிய மனிதர்கள் அவனைக் குற்றம் சாட்டியபோதிலும், இக்கட்டான சூழ்நிலையில் அவனை ஆறுதல்படுத்த வேண்டிய மனைவியும் அவனுடைய பாடுகளைத் தவறாகப் புரிந்துகொண்ட நிலையிலும், யோபு கர்த்தரை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தான்.
இது அவனுடைய ஆவிக்குரிய வலிமையைக் காட்டுகிறது.
அதற்குக் காரணம், அவன் கடவுளால் நற்சாட்சி பெற்றவன். கடவுள் அவனுடைய நற்சாட்சியைக் குறித்து இரண்டு தடவை கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், குறைவான பாடுகளை அனுபவிப்பவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலவீனமானவர்கள் என்ற கருத்தும் தவறானது.
கடவுள் தம்முடைய நோக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய திராணியை அடிப்படையாகக் கொண்டு, சோதனைகளைச் சகிக்க அனுமதிப்பார்.
ஒரு விசுவாசி எந்த அளவுக்கு சோதனைகளைச் சகிக்க முடியும், எந்த நிமிடம் வரை அவன் தாக்குப்பிடிக்க முடியும் என்பதைத் திட்டமாக அறிந்தவர் நம்முடைய தேவன் மட்டுமே.
நாம் வேண்டுமானால், “என்னால் இந்தச் சோதனையைச் சகிக்க முடியவில்லை” என்று புலம்பலாம்.

ஆனால், நம்முடைய எதுவரைக்கும் சோதனையை அனுமதிக்கலாம் என்கிற மதிப்பீட்டை அறிந்தவர் கடவுள்.

பாடுகளைச் சகிப்பவர்கள் பாக்கியவான்கள்.

ஒருவன் அதிகமான பாடுகளைச் சகித்தால், அவன் உண்மையில் ஆவிக்குரிய பலம் உடையவன் என்று தான் அர்த்தம்.
யோபுவின் நண்பர்களைப் போல, பாடுகளை அனுபவிப்பவர்கள் பாவத்தினால்தான் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தீர்ப்புச் சொல்லாமல், நாம் நம்மை நிதானப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாடுகளைச் சகிக்கிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய இரண்டு காரியங்கள்:
1. இந்தப் பாடுகள் என்னுடைய ஆவிக்குரிய திராணிக்கு உள்ளாக இருக்கிறது என்ற புரிதல்.
2. கடவுள் ஒரு நோக்கத்தோடு பாடுகளை அனுமதிக்கிறார் என்ற புரிதல்.
இந்த இரண்டு வகையான புரிதல்களையும் சரியாக அறிந்துகொண்ட மனிதன், பாடுகளின் மேல் நிச்சயமாக வெற்றி கொள்வான்.