யாபேஸின் கதறல் விண்ணப்பம்.
*உங்கள் சிந்தனைக்கு.*
ஒன்று நாளாகமம் புத்தகம் அல்லது ஒன்று குறிப்பேடுகள் புத்தகம்.
வேத பாடம் இரண்டு.
யாபேஸின் கதறல் விண்ணப்பம்.
"யாபேஸ் இஸ்ரயேலின் இறைவனிடம் கதறி அழுது, “நீர் என்னை ஆசீர்வதியும், எனது எல்லையையும் விரிவுபடுத்தும்! உமது கரம் என்னோடிருந்து தீமையிலிருந்து காப்பாற்றட்டும். அப்போது எனது வேதனை நீங்கும்” என வேண்டிக்கொண்டான். இறைவன் அவன் வேண்டுதலுக்குப் பதில் கொடுத்தார்.
1 நாளாகமம் 4:10
.
இந்தப் புத்தகத்தில் முதல் 9 அதிகாரம் வரலாறு ஆதாமில் ஆரம்பித்துப் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்தவர்களுடைய பட்டியலோடு முடிகிறது.
இந்தப் பட்டியலில் சுமார் 900 முதல் 1000 நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூதர்கள் எந்த அளவுக்குத் தங்களுடைய பாரம்பரிய வரலாறுகளை ஞாபகப்படுத்தி குறித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒன்பது அதிகாரங்களும் ஒரு சான்று.
இத்தனை பெயர்களின் மத்தியில் யாபேஸ் என்கிற பெயரும் வருகிறது.
இவன் யூதா வம்சத்தை சேர்ந்தவன். ஆனால் இவன் மேசியா பிறந்த தாவீது வம்சத்தில் நேரடியாகப் பிறந்ததாகத் தெரியவில்லை.
தாவீதின் நேரடி வம்ச வரிசையில் யாபேசின் பெயர் இல்லை.
அவன் யூதா கோத்திரத்தின் பெரிய சந்ததிப் பட்டியலில் ஒருவராக வருகின்றான், ஆனால் தாவீதின் நேரடி முன்னோராக இவனை வேதாகமம் காட்டவில்லை.
தாவீதின் வம்சத்தில் நேரடியாக வராத இவன் பெயரை
ஏன் வேதத்தில் தேவன் எழுதி வைத்தார் என்று தெரியவில்லை . இவன் தேவனிடம் தெரிவித்த ஐந்து விருப்பங்களையும் தேவன் உடனடியாக நிறைவேற்றினார் என்று பார்க்கிறோம்.
அந்த ஐந்து விண்ணப்பங்கள்.
1.தன்னை ஆசீர்வதிக்க வேண்டும்.
2.தன் எல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும்.
3.தேவனுடைய கரம் தன்னோடு இருக்க வேண்டும்.
4.தீங்கு தன்னை அணுகக் கூடாது.
5.தீங்கு தன்னை துக்கப்படுத்தக் கூடாது.
வரலாற்றில் எந்த நிகழ்வுகளைக் குறிப்பிடப்பட வேண்டும், எந்த நிகழ்வுகளை ஒதுக்கி விட வேண்டும் என்பதெல்லாம் தேவனுடைய இறையாண்மை சார்ந்தது.
யாபேசின் ஜெபத்தை கடவுள் கேட்டதற்கு முக்கிய காரணம் அவன் கடவுள் விண்ணப்பங்களைக் கேட்பதற்கு தகுதி உள்ளவனாக இருந்திருப்பான் என்பதுதான்.
யாபேஸ் மேசியா வரக்கூடிய வம்சத் தொடரில் வராவிட்டாலும் இவனுடைய பெயரைத் தேவன் வேதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏதோ ஒரு சிறப்பான காரியம் இந்தத் தேவ மனிதரிடம் காணப்பட்டிருக்க வேண்டும்.
அதனால்தான் தேவன் மறக்காமல் இவனுடைய பெயரை வேத புத்தகத்தில் குறிப்பிட்டு அவனை ஆசிர்வதித்திருக்கிறார்.
மேலெழுந்து வாரியாகப் பார்க்கும்பொழுது ஒரு காரியம் நமக்குத் தெரியும்.
ஒரு சாதாரண மனிதன் துன்பத்தால் பாதிக்கப்பட்டாலும் அவன் சோர்ந்து போகாமல் தேவனை நாடினால் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும் என்கிற சத்தியத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய சத்தியம் என்னவென்றால்
இந்த ஜெபத்தில்
என்னை ஆசீர்வதியும், எனது எல்லையையும் விரிவுபடுத்தும்! உமது கரம் என்னோடிருக்கட்டும் எனது வேதனை நீங்குட்டும் என்று கதறி அழுததாக இலகு இலங்கை மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 நாளாகமம் 4:10.
மன்றாடினான் என்று கத்தோலிக்க மொழிபெயர்ப்பு கூறுகிறது
(நமது பவர் மொழிபெயர்ப்பில் கதறி அழுததாகக் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.)
நாம் இந்த விண்ணப்பத்தை ஆவிக்குரிய பார்வையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடவுள் நம்முடைய ஊழியங்களை ஆசீர்வதிக்க வேண்டும். ஊழியத்தின் எல்லைகளை விரிவாக்க வேண்டும்.
பிசாசின் தந்திரங்களை மேற்கொள்ள வேண்டும்.
பிசாசின் சோதனைகளால் நாம் சோர்ந்து போகாதபடி பாதுகாக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட
ஆவிக்குரிய விண்ணப்பங்களை நாம் கண்ணீரோடு மன்றாட்டோடும் ஏறெடுக்கும்பொழுது நிச்சயமாக அதைக் கேட்டுத் தேவன் நமக்கு ஜெயம் அளிப்பார்.
யாபேசின் ஜெபம் சுருக்கமாக இருந்தாலும் மிகச்சிறந்த எல்லாராலும் விரும்பப்படத் தக்க ஜெபமாகக் காணப்படுகிறது.
எசேக்கியல் சண்முகவேல்.
கைபேசி எண் 9444447744