Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பரிசுத்த வேதாகமத்தை நாம் ஏன் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்?
*உங்கள் சிந்தனைக்கு!*

*பரிசுத்த வேதாகமத்தை நாம் ஏன் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்?*

*அதற்கான காரணம் என்ன? வேதத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு எவை மிகவும் அவசியம்?*

“Even though the Bible was written for us, it wasn’t written to us. When we take our Western, modern culture and impose it on the text, we’re putting in meaning that wasn’t there, and we’re missing the meaning that the text has.”

— Dr. John H. Walton

*“ *வேதாகமம் நமக்காக எழுதப்பட்டது; ஆனால் அது* *நேரடியாக நம்மை நோக்கி எழுதப்படவில்லை. நம்முடைய* *மேற்கத்திய, நவீன கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு அதை வேதாகமப் பகுதிகளின்* *மீது திணிக்கும்போது, அந்த உரையில் இல்லாத* *ஒரு பொருளை நாம் அதற்குள் புகுத்துகிறோம். அதே* *நேரத்தில், அந்த உரை உண்மையில் கொண்டிருக்கும் பொருளையும்* *நாம் தவறவிடுகிறோம்.”*

— டாக்டர் ஜான் எச். வால்டன்

**“சில சமயங்களில் மக்கள் வேதாகமத்தினால் விரக்தியடைகிறார்கள். ஏனெனில், அவர்கள் வாசிக்கும் கடினமான உருவகப் பேச்சுகளும், படிமங்களும், அக்காலப் பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு அந்நியமாகத் தோன்றுகின்றன. ஆனால் அவற்றை நாம் விளக்கும்போது, வேதாகமத்தின் உரை உண்மையில் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதைப் புதிய கோணத்திலும், புத்துணர்ச்சியுடனும் புரிந்துகொள்ளும் வகையில் அந்த உரையைத் திறந்து காட்டுகிறோம்.

இறுதியில், வேதாகமத்தில் உள்ள அனைத்தும் குறிப்பிட்ட காலங்களிலும் கலாச்சாரச் சூழல்களிலும் எழுதப்பட்டவையே. எனவே, அதில் உள்ள அனைத்தும் எல்லாக் காலங்களுக்கும் உரியதாக இருந்தாலும், அதில் உள்ள அனைத்தும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் நேரடியாகப் பொருந்தக்கூடியவை அல்ல. ஒரு வேதாகமப் பகுதி முதலில் எந்தச் சூழ்நிலையை நோக்கி எழுதப்பட்டது என்பதை நாம் எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு நம்பிக்கையுடன் அதன் செய்தியை இன்றைய பொருத்தமான சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்த முடியும்.”**

— டாக்டர் கிரெய்க் எஸ். கீனர்

வேதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள எப்படிப்பட்ட அறிவு நமக்குத் தேவை?

1. *மூல மொழிகளைப் பற்றிய அடிப்படை அறிவு*

வேதம் எழுதப்பட்ட மூல மொழிகளான எபிரேய, கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளைப் பற்றிய அடிப்படைப் புரிதல் தேவை.

2. *வரலாற்று, கலாச்சார மற்றும் சமூகப் பின்னணி*

ஒவ்வொரு புத்தகமும், அதிலுள்ள ஒவ்வொரு வசனமும் எழுதப்பட்ட காலத்தின் கலாச்சார, வரலாற்று மற்றும் சமூகப் பின்னணியைப் பற்றிய அடிப்படை அறிவு தேவை.

3. *முழு வேதாகமத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதல்*

Biblical Theology — முழு வேதாகமத்தையும் ஒரு தொடர்ச்சியான வெளிப்பாடாகப் புரிந்துகொள்ளுதல்.

4. *இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்*

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் இவற்றின் அடிப்படை நோக்கங்களைப் பற்றிய புரிதல் தேவை.

5. *வேதவிளக்கவியல் (Hermeneutics)*

ஒரு வசனத்தை அதன் சூழலுக்கு ஏற்ப எவ்வாறு விளக்க வேண்டும் என்ற அறிவு தேவை.

6. *இலக்கிய வகைகளைப் பற்றிய அறிவு (Literary Genres)*

வேதாகமத்தில் உள்ள எல்லாப் பகுதிகளையும் ஒரே விதமாக வாசிக்கவோ விளக்கவோ முடியாது.

7. *உடன்படிக்கைகள் பற்றிய அறிவு (Biblical Covenants* )

நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது மற்றும் புதிய உடன்படிக்கை போன்றவை வேதாகமக் கதையின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும்.

8. *பழைய ஏற்பாடு–புதிய ஏற்பாடு தொடர்பு*

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

9. *வார்த்தைகளின் பொருளைச் சூழலின்படி அறிதல்*

ஒரே எபிரேய அல்லது கிரேக்க வார்த்தைக்கு எல்லா இடங்களிலும் ஒரே பொருள் இருக்க வேண்டியதில்லை. எனவே, அகராதியில் உள்ள பொருளை நேரடியாக ஒரு வசனத்தின் மீது திணிக்காமல், அந்த வசனத்தின் சூழலே அதன் பொருளைத் தீர்மானிக்க வேண்டும்.

10. *மொழிபெயர்ப்புகளின் தன்மையைப் புரிந்துகொள்ளுதல்*

அனைத்து மொழிபெயர்ப்புகளும் ஒரே முறையில் உருவாக்கப்படவில்லை:

(சொல்லுக்குச் சொல்

கருத்துக்குக் கருத்து

எளிய / விளக்கமான மொழிபெயர்ப்பு)

இவற்றை அறிந்து, ஒரு முக்கியமான வசனத்தைப் பல மொழிபெயர்ப்புகளில் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

11. *சபை வரலாறு மற்றும் இறையியல் வரலாறு*

ஆரம்பகால சபை முதல் இன்று வரை, கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வசனத்தை எவ்வாறு புரிந்துகொண்டார்கள்? தவறான போதனைகள் எவ்வாறு தோன்றின? என்பதை அறிந்துகொள்வது வேதவிளக்கத்தில் பாதுகாப்பளிக்கும்.

12. *கிறிஸ்தவ அடிப்படை இறையியல் (Systematic Theology* )

தேவன், மனிதன், பாவம், இரட்சிப்பு, பரிசுத்த ஆவி, சபை, தேவதூதர்கள், இறுதிக்காலம் போன்ற அடிப்படைப் போதனைகளை ஒழுங்காக அறிந்துகொள்ள வேண்டும்.

13. *ஆவிக்குரிய மனப்பான்மை*

அறிவு மட்டும் போதாது. வேதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள:

ஜெபம்

பணிவு

சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல்

பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாடுதல்

தனிப்பட்ட கருத்தை வேதத்தின் மீது திணிக்காத மனப்பான்மை

ஆகியவை அவசியம்.



இதில் மிகவும் முக்கியமான இரண்டு விஷயங்கள்:





1. *வேதத்தை அதன் சூழலுக்கு ஏற்ப விளக்குதல்.*

2. *முழு வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஒரு வசனத்தைப் புரிந்துகொள்ளுதல்.*

*இவைகள் இல்லையென்றால், மூல மொழி அறிவு இருந்தாலும் ஒரு வசனத்தைத் தவறாக* *விளக்கும் வாய்ப்பு உள்ளது.*

வேதத்தைப் போதிக்கிறவருக்கு இவற்றைப் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் அவசியம். இவை அனைத்தையும் ஆழ்ந்து கற்றுக்கொண்ட பிறகுதான் வேதத்தைத் தியானிக்க வேண்டும் அல்லது போதிக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இவற்றைப் பற்றிய ஆனா, ஆவன்னா பாடமாவது அவசியம் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

*இன்று ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு உபதேசத்தைத் தலையில் தூக்கிக் கொண்டாடுகிறது* . *தாங்கள் போதிப்பதுதான் வேதம் என்று உரிமை கொண்டாடுகிறது.* *அதற்கு மாறாகப் போதிப்பவர்களை வேதப் புரட்டர்கள் என்று பழி சுமத்துகிறது* . *அதுமட்டுமல்லாமல், அவர்கள் கிறிஸ்தவர்களே இல்லை என்று பட்டமும்* *கட்டிவிடுகிறது.*

சபையின் நற்செய்திப் பணிக்காக ஜெபிப்பது எவ்வளவு அவசியமோ, நற்செய்திப் பணிகள் மூலம் சபைக்கு வந்தவர்களைச் சரியான உபதேசத்தின் மூலம் உருவாக்குவதும் மிகவும் அவசியம்.

*விசுவாசிகளே! உங்கள் உள்ளத்தில் இப்படிப்பட்ட சிந்தனையோடு நல்ல* *போதகர்கள் தமிழ்நாட்டில் எழும்ப ஜெபியுங்கள். அது* *சபையைப் பாதுகாக்கும்.*