*யோபுவின் புத்தகம் வேத படம் 19*
*உங்கள் சிந்தனைக்கு.*
*யோபுவின் புத்தகம் வேத படம் 19*
"துன்பப்படுத்துகிற ஆலோசனைக்காரர்கள்"
யோபுவின் இழப்புகள், பாடுகள், வலிகள் ஆகியவற்றை உணராமல், அவன் செய்த பாவத்தின் நிமித்தமே அவனுக்கு இந்தப் பாடுகள் வந்தன என்று தீர்ப்பளித்த நண்பர்களை யோபு "துன்பப்படுத்துகிற ஆலோசனைக்காரர்கள்" ( *Miserable Comforters – யோபு 16:2* ) என்று அழைக்கிறான்.
இன்றைக்கு நம்முடைய வட்டாரத்திலும் இப்படிப்பட்ட துன்பப்படுத்துகிற ஆலோசனைக்காரர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக Christian Counselling Ministry என்ற பெயரில் செயல்படுகிற சிலரை நான் பார்த்திருக்கிறேன். *வாழ்க்கையில் எந்தத் துன்பத்தையும், பாடுகளையும், வேதனைகளையும், வலிகளையும்* , *இழப்புகளையும், பிரிவுகளையும் சந்திக்காமல், தாங்கள் கற்றுக்கொண்ட* *புத்தக அறிவின் அடிப்படையில் மட்டும் ஆலோசனை கூறுகிற* *இப்படிப்பட்ட நபர்களை ஆவிக்குரியவர்கள் எச்சரிக்கையோடு அணுக வேண்டும்* .
நம்முடைய எல்லாப் பாடுகளுக்கும் பரிபூரண ஆறுதல் அளிப்பவர் சகலவித ஆறுதலின் தேவனாகிய கடவுள் மட்டுமே. மனிதர்கள் நமக்காக ஜெபிக்கலாம், நம்மோடு கண்ணீர் சிந்தலாம், நம்மை உற்சாகப்படுத்தலாம். ஆனால் நம்முடைய உள்ளத்தின் ஆழமான வேதனையை முழுமையாக அறிந்து ஆறுதல் அளிக்கிறவர் தேவன் ஒருவரே.
பொதுவாக, பாடுகளின் வழியாக நடந்தவர்கள், அதே பாதையில் செல்பவர்களின் வலியை அதிகமாக உணர முடியும். அதனால் அவர்களுடைய வார்த்தைகளில் இரக்கமும், பரிவும், பொறுமையும் அதிகமாக வெளிப்படும். அதே நேரத்தில், தேவன் அளிக்கும் ஞானமும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலும் இருந்தால், அந்த அனுபவம் இல்லாதவர்களும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.
*துன்பப்படுத்துகிற ஆலோசனைக்காரர்களைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள நமக்கு* *தேவன் அளித்துள்ள ஒரு பொக்கிஷம்தான் யோபுவின்* *புத்தகம்* . கிறிஸ்தவ ஆலோசனை ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் முதலில் யோபுவின் புத்தகத்தை ஆழமாகப் படித்து, அதன் ஆவிக்குரிய உண்மைகளைப் புரிந்துகொண்டு, அதன் வெளிச்சத்தில் துன்பத்தின் வழியாகச் செல்பவர்களுக்கு ஆறுதல் கூறினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
" *ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பார்கள். அதுபோல, புத்தக அறிவு மட்டும்* *போதாது* . அனுபவம், இரக்கம், ஜெபம், தேவனுடைய ஞானம் ஆகியவையும் இணைந்திருக்க வேண்டும். இல்லையெனில், பாடுகளின் வழியாகச் செல்பவர்களின் மனவேதனையை உணராமல் கூறப்படும் ஆலோசனைகள் பல நேரங்களில் அவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல் பாரமாகவே மாறிவிடும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் நம்மைப் போலவே பாடுகளையும், சோதனைகளையும் அனுபவித்தார். பிதாவுக்கு நூறு சதவீதம் கீழ்ப்படிந்தபடியினால், உபத்திரவப்படுகிற மக்களின் உபத்திரத்தை அந்நிய காரியமாக எண்ணாமல், அதை உணருகிறவராக இன்றைக்கும் நமக்கும் பிதாவுக்கும் இடையில் ஒரே நடுவராக இருக்கிறார்.
*ஆகையால், நாம் எல்லோரிடமும் ஆறுதலுக்காக ஓடி அலைகிற மனநிலையை விட்டு விட வேண்டும்* . *எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், எவ்வளவு அனுபவமிக்க ஊழியக்காரராக* *இருந்தாலும்* , *பாடுகளின் வழியாகச் செல்பவர்களின் வலியை முழுமையாக உணர முடியாது.* அவர்கள் நமக்காக பாரத்தோடு ஜெபிக்கலாம்; அது தேவன் கொடுத்த ஒரு ஆசீர்வாதம். ஆனால் மனித ஆறுதல் எல்லைக்குட்பட்டது; தேவனுடைய ஆறுதல் மட்டுமே பரிபூரணமானது.
*விசுவாசிகளே, ஆறுதலுக்காக எங்கும் ஓடி ஓடி திரியாதீர்கள்.*
*உங்கள் மனபாரங்களை தேவனுடைய சமூகத்தில் கொட்டித் தீர்த்துவிடுங்கள்* . *தேவன் தம்முடைய வசனத்தின் மூலமாகப் பேசும் வார்த்தைகளும், அவர் அளிக்கும் ஆறுதலும்,* வேறு *எதனுடனும் ஒப்பிட முடியாதவை.*
அதே நேரத்தில், விசுவாசிகளாகிய நாமும் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போது மிகவும் நாணயமாகவும், உண்மையாகவும், தாழ்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாம் ஏதோ உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் போல எண்ணிக்கொண்டு, பாடுகளின் வழியாகச் செல்பவர்களை கீழ் நிலையில் வைத்து ஆலோசனை கூறுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஜெபத்தோடும், தேவபயத்தோடும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடும் இருக்க வேண்டும்.
*ஆலோசனை ஊழியத்தில் "ஊழியர்கள்" மற்றும் "விசுவாசிகள்" என்ற பிரிவினையை அதிகப்படுத்தக்* *கூடாது* .
தேவன் தம்முடைய சபையில் பலருக்குப் பலவித கிருபைகளை அளித்திருக்கிறார். முதிர்ந்த ஆவிக்குரிய அனுபவமுள்ள விசுவாசிகளும், தேவன் கொடுத்த ஞானத்தினால் மற்றவர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க முடியும். எனவே சபைகள் *இப்படிப்பட்ட விசுவாசிகளை அடையாளம் கண்டு, ஆலோசனை ஊழியத்தில் பயன்படுத்துவதை* *ஊக்குவிக்க வேண்டும்* .
*அதேபோல், "என்னிடம்தான் எல்லோரும் ஆலோசனை கேட்க வேண்டும்" என்ற மனநிலையும்* *மாற வேண்டும். கிறிஸ்துவின்* *சரீரத்தில் ஒவ்வொருவருக்கும் தேவன் வெவ்வேறு கிருபைகளைக் கொடுத்திருக்கிறார். ஒருவருக்கொருவர்* *பாரங்களைச் சுமப்பதற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.*
தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தம்முடைய கிருபையையும், ஞானத்தையும், இரக்கமுள்ள இதயத்தையும் அளித்து, காயப்படுத்துகிற ஆலோசனைக்காரர்களாக அல்லாமல், கிறிஸ்துவின் ஆறுதலை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கிற ஊழியக்காரர்களாக நம்மை மாற்றுவாராக.