*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 14* *Expository Commentary on the Book of Nehemiah*
*உங்கள் சிந்தனைக்கு*
*
*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 14*
*Expository Commentary on the Book of Nehemiah*
*தியானிக்க வேண்டிய வேத பகுதி: நெகேமியா 8:3*
*இளம் வாலிபர்கள் 'Bible study' ஐ அதிகம் விரும்பாமல்* *இருப்பதற்கு என்ன காரணம்?*
" எஸ்ரா காலமே தொடங்கி மத்தியானம் வரை, புருஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக நியாயப்பிரமாணத்தை வாசித்து விளக்கினார். சகல ஜனங்களும் அந்த நியாயப்பிரமாணப் புத்தகத்திற்குக் கவனமாக செவிகொடுத்தார்கள்."
நெகேமியா 8:3-இன் அடிப்படையில், சுமார் ஆறு மணி நேரங்கள் தொடர்ந்து வேத வசனங்கள் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டதாக பார்க்கலாம். அதன் விளைவாக, ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை கேட்டபோது அழுதார்கள் (நெகேமியா 8:9). தங்களது பாவ வாழ்க்கையை உணர்ந்து, மனந்திரும்ப வேண்டிய ஆழ்ந்த பாவ உணர்வு அவர்களை ஆட்கொண்டு, அதற்காக வருந்தி அழுதார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
இப்படியாக ஒரு நீண்ட வேத போதனை, அவர்களுடைய உள்ளங்களையும் முழு சமுதாயத்தையும் மாற்றியது.
இயேசு கிறிஸ்துவும் தாம் பூமியில் இருந்த நாட்களில் “போதகர்” என்று பல இடங்களில் அழைக்கப்பட்டார். அவரது மலைப்பிரசங்கம் மிகவும் ஆழமானதும் நீளமானதும் ஆகும்.
அப்போஸ்தலர் 20:7–11-இல், பவுல் இரவு முழுவதும் போதித்ததாக நாம் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில் பவுலைப் போன்ற ஒரு சிறந்த போதகர் வேறு யாரும் இருக்க முடியாது.
இவைகளை எல்லாம் நான் குறிப்பிடுவதன் காரணம், இந்த கடைசி காலங்களில் வேத போதனைகள் எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான்.
*மறுபடியும் பிறந்த ஒருவருக்கு அவசியமாகக் கொடுக்கப்பட* *வேண்டிய கல்வி வேத போதனையே. குறிப்பாக வாலிபர்களுக்கு,* *சபைத் தலைவர்கள் வழங்க வேண்டிய மிக முக்கியமான* *கல்வி இது தான். வாலிபர்களை* வேதத்தை சுவைக்கத் தூண்ட வேண்டும்.
ஞாயிறு ஆராதனைகளில் வாலிபர்கள் எவ்வளவு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு வேத போதனையிலும் அவர்கள் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் காட்டும்படி செய்ய இன்றைய சபைத் தலைவர்கள் தவறி விட்டார்கள். அதனால் தான், வாலிபர்களுக்கு வேத போதனை என்பது கசப்பான மருந்தாக தோன்றுகிறது.
பவுல் இரவெல்லாம் போதித்தார் என்று சொல்லப்படுவதன் அர்த்தம், அவர் அந்த அளவுக்கு வேதத்தை எளிமையாகவும் ரசிக்கத்தக்கவாறும், விசுவாசிகள் கேட்கும் படியாக ஆர்வத்தோடு போதித்தார் என்பதாகும்.
ஒரு பழத்தின் சுவையை அறிந்தவனே அதன் சிறப்பை கூற முடியும். அதுபோல, வேத போதனைகளை ரசித்து ருசித்தவனே மற்றவர்களுக்கு ரசனையான வேத அறிவை அளிக்க முடியும்.
ஞாயிறு ஆராதனைகளில் ஒரு மணி நேரப் பிரசங்கத்தை கேட்டு பழகியுள்ள வாலிபர்களுக்கு, இரண்டு அல்லது மூன்று மணி நேர வேத போதனைகள் வேப்பங்காயைப் போல தோன்றுகிறது. ஆனால், ஒவ்வொரு சபையும் *வாரத்தில் ஒரு நாளாவது, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செல்லக்கூடிய சிறப்பான வேத போதனையை கிரமமாக நடத்தினால், வாலிபர்கள் அதை பாகற்காயைப் போல கசப்பாக நினைக்க மாட்டார்கள்.*
இன்றைக்கு வாலிபர்கள் வேத போதனையை விரும்பாமல் இருப்பதற்கும், அதை புறக்கணிப்பதற்கும், சபைத் தலைவர்களே 90 சதவீதம் பொறுப்பு ஏற்க வேண்டும்.
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்றபடி, ஒரு போதகர் தனது சபையில் ஒழுங்காகவும் ஆழமாகவும் வேதத்தை போதித்தால், அந்த சபையின் வாலிபர்கள் வேதத்தில் தேர்ந்தவர்களாக வளர்வார்கள்.
இன்றைக்கு *இறையியல் கல்வி என்பது முழுநேர ஊழியர்களுக்கே தேவையானது என்ற தவறான எண்ணம் விசுவாசிகள் மத்தியில் உருவாகியுள்ளது* . அந்த எண்ணத்தை போதகர்கள் முதலில் மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு சபையும் தங்களுடைய மக்களுக்கு முறையாகவும் ஆழமாகவும் இறையியல் பாடங்களை போதிக்க வேண்டும். ஆராதனைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே, வேத போதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். *ஒவ்வொரு சபையையும் ஓரளவுக்கு இறையியல் கல்லூரியிலாக* *மாற்ற முயற்சிக்க வேண்டும்.*
அதுவே சமநிலை.
இந்த சமநிலையை காக்கத் தவறியதால்தான், இன்றைக்கு வேதபாடங்களுக்கு மதிப்பு குறைந்துள்ளது. வாலிபர்கள் வேதத்தை புறக்கணிக்கிறார்கள்; அதன் அருமையை அறியாமல் வளர்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான நிலை.
அன்றைய தினத்தில் எஸ்ரா அளித்த வேத போதனை ஒரு முழு சமுதாயத்தையே மாற்றியது. பவுலின் போதனைகள் சபைகளை ஒழுங்கிலும் உபதேச கட்டுப்பாட்டிலும் வைத்தது.
இன்றைய நிலைமை என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆகையால், வேத போதனைகளை போதகர்கள் புறக்கணிக்கக் கூடாது. இரவு *ஜெப கூட்டங்களைப் போல, இரவு வேதபாடங்களும் நடைபெற வேண்டும். அப்படிப்பட்ட வேதபாடங்களை* நடத்தும் சபைகள் நிச்சயமாக பாக்கியமானவை.
சபைகள் வேதத்திற்கு கொடுக்க வேண்டிய இடத்தை புறக்கணிப்பதால்தான், சபையின் வளர்ச்சி ஆழமற்றதாக இருக்கிறது.
*இன்றைக்கு ஒவ்வொரு போதகரும், சபை மேய்ப்பரும், எஸ்ராவைப் போலவும் பவுலைப் போலவும் மாற வேண்டும். அப்படியாக மாறாவிட்டால், சபைக்கு சிறப்பான எதிர்காலம் இருக்காது.*