இறையியல் கல்வி
உங்கள் சிந்தனைக்கு:
இறையியல் கல்வி அவசியம் என்றும், அது ஒன்றுதான் தேவனை அறிந்து கொள்ளும் வழி என்றும் அநேக ஊழியர்கள்சாதிக்கிறார்கள்
ஆனால் அவர்களில் எத்தனை பேர் தங்கள் சபையில் உள்ள விசுவாசிகளை, ஆர்வமுள்ள நபர்களை, இறையியல் கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறையியல் கல்வியை படிக்க ஊக்குவிக்கிறார்கள்? பெரும்பாலான தலைவர்கள் நினைக்கிற காரியம் என்னவென்றால் இறையியல் கல்வி என்பது ஒரு சபை நடத்தும் போதகர்களுக்கும் மேய்ப்பர்களுக்கும் ,முழு நேர ஊழியக்காரர்களாக ஊழியம் செய்கிறவர்களுக்கு மட்டுமே தேவை, விசுவாசிகளுக்கு அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள்.
இதைவிட அப்பட்டமான ஒரு அபத்தமான வாதம் இருக்க முடியாது.
வேதம் என்பது எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. அது முழு நேர பணியாளருக்கு மட்டும் எழுதப்பட்டுள்ளது அல்ல.
Theology என்றால் இறைவனைப் பற்றிய அறிவு என்று அர்த்தம்.
அப்படி இருக்க இறையியல் கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவான காரியம்.
ஒவ்வொரு திருச்சபையும் இறையியல் கல்லூரியாக மாற வேண்டும்.
ஒவ்வொரு விசுவாசியும் அதன் மாணாக்கனாக மாற வேண்டும். இதுதான் தேவனுடைய பார்வையில் அவருடைய சித்தம்.
அப்படி எல்லா மாணவர்களையும் இறையியல் கல்லூரிக்கு அனுப்ப முடியாதவர்கள் தாங்கள் பெற்ற இறையியல் கல்வியை விசுவாசிகளுக்கு போதித்து அவர்களை தன் சபையிலேயே இறையியல் படித்தவர்களாக மாற்ற வேண்டும்.
விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குகின்ற போதகர்கள், தலைவர்கள் விசுவாசிகளை இந்த இறையியல் பாட போதனைக்கு வழி நடத்த வேண்டும்.
ஒரு போதகர் தன்னையும் தன் சபையையும் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி தன் கீழ் உள்ள விசுவாசிகளை அடிப்படை இறையியல் உபதேசங்களுக்கு நேராக வழிநடத்துவதுதான்.
தன் மகனையும் மகளையும் மட்டும் இறையியல் கல்லூரிக்கு அனுப்புவதும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பதும் போன்ற காரியங்கள் வடிகட்டின சுயநலம்.
இறையியல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விசுவாசிகளிடம் தோன்றும்ஆர்வத்தை தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது.
சிறிய சபைகளை குறித்து நான் சொல்லவில்லை. 500 பேர் ஆயிரம் பேர் கூடுகின்ற சபையை நடத்தும் போதகர்கள் இந்த மனநிலைக்கு வராவிட்டால் அவர்கள் போதிக்கின்ற பிரசங்கமும் கிறிஸ்தவம் மாய்மாலமே.
இறையியல் கல்வியை எந்த சபை தன்னுடைய விசுவாசிகளுக்கு பொதுவுடமையாக மாற்றுகிறதோ அந்த சபை தான் தவறான உபதேசங்களை எதிர்த்து நிற்க ஆயத்தமான சபை.
சபையின் இறுதி காலத்தில் தவறான உபதேசங்கள் வெள்ளம் போல பெருகி வருகின்ற இந்த நேரத்தில் விசுவாசிகளுக்கு இப்படிப்பட்ட கல்வி முறையை போதிக்காத போதகர்களை ஒருபோதும் சிறந்த மேய்ப்பர்களாக கருத முடியாது.