Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

விசுவாசிகள் முழு நேர பணியாளராக ஆகவில்லையே என்று கலங்க வேண்டாம், வருத்தப்பட வேண்டாம்
உங்கள் சிந்தனைக்கு:


விசுவாசிகள் முழு நேர பணியாளராக ஆகவில்லையே என்று கலங்க வேண்டாம், வருத்தப்பட வேண்டாம்.

நாம் மறுபடியும் பிறக்கும்போது சமநிலையில்(with equal status) இருக்கிறோம்.
ஆனால் பல்வேறு நிலைகளில்(with different calling) உழியம் செய்ய
அழைக்கப்பட்டிருக்கிறோம்.
அதில் முழு நேரம், பகுதி நேரம் என்கிற பாகுபாடு தேவனிடத்தில் கிடையாது.

தேவனுக்கு முன்பாக நாம் எல்லோரும் வெவ்வேறு நிலைகளில் ஊழியம் செய்ய, கிறிஸ்துவுடன் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் .

அழைப்பில் எந்தவித மேன்மையும் இல்லை.
அந்த அழைப்பில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம், எப்படிஉண்மையாக இருக்கிறோம், எப்படி கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறோம் என்பதை வைத்துத்தான் நமக்கு ஆண்டவர் பரிசுகளை வழங்குவார்.
பரிசுகள் வழங்குவதில் முழு நேரஊழியர்களுக்கு ஒரு வித அளவீடும் விசுவாசிகளுக்கு ஒருவித அளவீடும் என்பது கிடையாது.
தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல.

நாம் அழைக்கப்பட்ட அழைப்பில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் விண்ணுலகில் நமக்குரிய இடங்கள் கிடைக்கும்.

எனவே விசுவாசிகள் முழு நேர ஊழியத்திற்கு வரவில்லையே என்று மற்றவரைப் பார்த்து ஏங்க வேண்டிய அவசியம் இல்லை.

மறுபடியும் பிறந்த எல்லா தேவனுடைய பிள்ளைகளுக்கும் தேவன் ஏதோ ஒரு வரத்தையும், அழைப்பையும் கொடுத்திருப்பார்.
அந்த வரத்தையும், அந்த அழைப்பையும் நாம் எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய பரிசுகள் பரலோகத்தில் காணப்படும்.

ஒரு தாலந்தை பெற்றவன் அதை எப்படி பயன்படுத்துகிறானோ அதன் அடிப்படையிலேயே அவன் கர்த்தரால் கனம் பெறுவான்.
பலவிதமான கிருபைகளையும் மிகப்பெரிய அழைப்பையும் பெற்றிருந்தாலும் அந்த அழைப்பில் ஒருவன் எப்படி உழைக்கிறான், பரிசுத்தமாக இருக்கிறான், நேர்மையாக இருக்கிறான் என்பதின் அடிப்படையிலேதான் பரிசுகள் வழங்கப்படும்.
ஒரு விசுவாசி முழு நேர பணியாளனாக மாறவில்லையே என்கிற கவலை வேண்டாம்.
நான் மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில் உலர்ந்து ஒரு அரசாங்க வேலையை 28 வயதில் பெற்றேன். ஆனாலும் அந்த வேலையை விட்டுவிட்டு ஊழியத்திற்கு வர, மிஷனரி ஊழியதிற்க்கு வர மிகவும் விருப்பப்பட்டேன் ஆனால் கர்த்தர் எதையும் வாய்க்கப் பண்ணவில்லை.
முழு நேர பணியாளர்களைப் பார்த்து அண்ணாந்து பார்த்துப் பிரமித்து அவர்களைப் போல் நான் மாறவில்லையே என்று ஏங்கிய காலங்கள் உண்டு. ஒரு காலகட்டத்தில் நான் நிச்சயப்படுத்திக் கொண்டேன் என்னுடைய அழைப்பு என்பது அரசாங்க பணியில் உண்மையாக உத்தமமாக நேர்மையாகக் கர்த்தருக்கு சாட்சியாகக் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உலக மக்களுக்கு நான் கிறிஸ்தவனாக என்னைநிலைநிறுத்தி கொள்வதுதான்.
அதுதான் என்னுடைய மிகப்பெரிய ஊழியம்.
அலுவலகத்தில் என் மேஜையில் எப்பொழுதும் ஒரு வேத புத்தகம் எல்லோருக்கும் தெரியும்படி இருக்கும்.
நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய இருக்கையில் அமரும்போது நெடுமுழங்கால் இட்டு ஜெபித்து விட்டுப் பிறகு சிறிது நேரம் வேதத்தைப் படித்து விட்டுத் தான் என் வேலையை தொடங்குவேன். அந்த அறையில் பொதுமக்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் அதைப் பார்ப்பார்கள் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
என்னுடைய இடத்தில் தேவ வசனம் பொருந்திய காலண்டர் இருக்கும். நேர்மையாக உண்மையாக இருந்ததினால் என்னை யாரும் கேள்வி கேட்க முடியவில்லை.
அலுவலகங்களில் இந்து மத சம்பந்த பண்டிகை நாட்களில் முழு அலுவலகமே கலந்து கொண்டாலும் நான் என்னுடைய இருப்பிடத்தில்தான் இருப்பேன். எவ்வளவோ நெருக்கடிகள் வந்தாலும் நான் இந்த நிலையிலிருந்து மாறவில்லை. ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக.
என்னுடைய 32 வருட அலுவலகப் பணியில் மிகவும் ஆண்டவருக்காக வைராக்கியமாக இருந்தேன். ஐஏஎஸ் அதிகாரியே கலந்து கொண்டாலும் பண்டிகை கொண்டாட்டங்களில்நான் என் இடத்தில்தான் நான் இருந்திருக்கிறேன்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் உலக மக்களுக்கு என்னோடு பழகியவர்களுக்கும் இது மிகப்பெரிய சாட்சி.
இந்தச் சாட்சியை நான் முழுநேரப் பணியில் ஈடுபட்டிருந்தால் உலக மக்களுக்குக் காட்டி இருக்க முடியுமா என்றால், அது முடியாது.
இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் சாட்சியாக வாழ அழைக்கப்பட்டவர்கள் விசுவாசிகள்தான்.
எல்லோருமே முழு நேர பணியாளர்களாக மாறிவிட்டால் உலக மக்களுக்குச் சாட்சியாக இருப்பவர் யார்?
இன்றைக்கு 90 சதவீதம் கிறிஸ்தவம் உயிரோடு இருப்பதற்கு காரணம் விசுவாசிகள் ஜீவனுள்ள சாட்சிகளாக அவர்கள் வாழ்கின்ற இடங்களில் இருப்பதினால்தான்.
சாட்சியைப் பற்றி உள்ள காரியங்களில் முழு நேர பணியாளரைவிட விசுவாசிகளுக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பு இருக்கிறது.
எனவே பெரிய ஊழியக்காரனை பார்த்துப் பொறாமைப்பட வேண்டாம்.
அவர்கள் விசுவாசிகளைப் பார்த்துதான் பொறாமை பட வேண்டும். ஏனென்றால் உலக மக்கள் மத்தியில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் சாட்சியாக வாழக்கூடியவாய்ப்பு முழுநேரப் பணியாளர்களுக்கு இல்லை
ஆனால் விசுவாசிகளுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு விசுவாசி உலக வாழ்க்கையில் சாட்சியாக வாழ்வதே மிகப்பெரிய அவனுக்குள்ள அழைப்பு

விசுவாசிகள் தங்களை தாழ்வாகவும் நினைக்க அவசியம் இல்லை.
நமது அழைப்பை நாம் சரியாக நிறைவேற்றும்பொழுது நமக்குரிய பரிசைகடவுள் நிச்சயமாக அளிப்பார்

“இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக் குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது; 23 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்”
1கொரி 3:21,22


எசேக்கியேல் சண்முகவேல்.