Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

ஊழிய அழைப்பு என்பது முழு நேர பணியாளர்களுக்குரிய தனிப்பட்ட சொத்து அல்ல

உங்கள் சிந்தனைக்கு:

ஊழிய அழைப்பு என்பது முழு நேர பணியாளர்களுக்குரிய தனிப்பட்ட சொத்து அல்ல


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு மிகப்பெரிய பணியை நிறைவேற்றும்படியாக இந்த உலகத்திற்கு பிதாவினால் அனுப்பப்பட்டார்.

அதற்காகத் தமக்குள்ள மகிமையை சிறிது காலம் இழந்து இந்த உலகத்தில் மனித உருவில் வெளிப்பட்டார்.

தான் வாழ்ந்த 33 1/2 ஆண்டு காலத்தில் அவருடைய ஒரே நோக்கம் பிதா தனக்கு நியமித்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதுதான். அந்தப் பணியை முடித்து இறுதியில் சொன்ன வார்த்தை இது.

"நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்ததன் மூலம், பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்."
யோவான் 17:4

இயேசு கிறிஸ்துவை தன்னுடைய கடவுளாக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு விசுவாசியும் இறுதி நாளில் இந்த வார்த்தையைச் சொல்ல அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு விசுவாசிக்கும் இரண்டு மிகப்பெரிய தேவனுடைய பணிகளைக் கடவுள் வைத்திருக்கிறார்.
1. அவரை மகிமைப்படுத்தும் படியான வாழ்க்கை வாழ வேண்டும். Witness
2. ஒவ்வொரு விசுவாசியும் தேவன் முன்குறித்த பணியை நிறைவேற்றி முடிக்க வேண்டும். Ministry

பெரும்பான்மையான விசுவாசிகள் தேவனை மகிமைப்படுத்தும் படியான வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் தேவன் வைத்த பணியை, முன் குறித்த திட்டத்தை நிறைவேற்றுகிறார்களா என்பது கேள்விக்குரிய காரியமாக இருக்கிறது.

ஊழியத்தின் அழைப்பு என்பது ஒரு தவறான புரிதலில் இன்றைக்கு சபைகளில் காணப்படுகின்றது.

ஊழிய அழைப்பு என்பது ஏதோ முழு நேர பணியாளர்களுக்குரிய தனிப்பட்ட சொத்தாக இன்று சபைகளில் உணரப்படுகிறது.

இது அடிப்படை வேத சத்தியங்களுக்கு எதிரானது.
ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு மிகப் பெரிய பொறுப்பைக் கடமையை. அழைப்பை, ஊழியத்தை வைத்திருக்கிறார் என்கிற உணர்வு அவசியம்.
இதை விசுவாசிகளுக்குப் போதிக்க போதகர்கள் தவறவிடக் கூடாது.

இதைச் சொன்னால் சபை நடத்தாதவர்கள் சொல்கின்ற அறிவுரை என்று சொல்கிறவர்கள் மீது கல்லெறிவது வழக்கமாகப் போய்விட்டது.

வேதத்தின் படியான சரியான சத்தியத்தை சொல்வதற்கு வேதத்தைப் படிக்கின்ற எல்லோருக்கும்உரிமை உண்டு.
இந்த வேத புத்தகம் முழு நேர பணியாளர்களுக்கென்று மட்டும் எழுதப்படவில்லை.
நல்ல கருத்தை எவர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிந்தனை என்றைக்கு வருகிறதோ அன்றைக்கு கிறிஸ்தவத்தில் மறுமலர்ச்சி ஆரம்பமாகிறது என்று அர்த்தம்.

வேதத்தில் தாவீதைப் பற்றிப் பார்க்கும்பொழுது
அவனைப் பற்றி வேதம் இப்படி குறிப்பிடுகிறது.


"தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தான்".அப்போ 13:36.

அவன் ஒரு ஆசாரியன் அல்ல. ஒரு அரசன்.
இன்றைக்கு உள்ள நடைமுறையின் படி செல்ல வேண்டும் என்றால் அவன் உலக வேலை பார்த்தவன்.
இஸ்ரவேல் ஜனங்களைக் கானானுக்கு அழைத்துச் சென்றவன் யோசுவா. ஆசாரியன் அல்ல.

உலகின் இறுதி காலத்தைப் பற்றித் தெளிவாகத் தீர்க்கதரிசனம் சொன்ன தானியேல் ஒரு ஆசாரியன் அல்ல.
இவர்கள் எல்லோரும் தேவனுடைய திட்டத்தில் முன் குறிக்கப்பட்டவர்கள்.

முதல் முதலில் நற்செய்தியை புறயின மக்களுக்குக் கொண்டு சென்றது பெயர் குறிப்பிடப்படாத விசுவாசிகளே.
இது போன்ற பல நிகழ்வுகள் வேதத்தில் உண்டு. எனவே ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் மிகப்பெரிய அழைப்பை, அதாவது இன்றைக்கு முழு நேர பணியாளர் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இணையான அழைப்பைத் தேவன் வைத்திருக்கிறார்.

அந்த அழைப்பு சபைக்குள்ளும் இருக்கலாம்,
சபையைத்தாண்டியும் இருக்கலாம். எனவே விசுவாசிகள் இந்தச் சத்தியத்தை நன்கு புரிந்து தேவனிடத்தில் தனக்குள்ள ஊழியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதைப் பெற்றுக் கொள்ளத் தவறும்பொழுது இயேசு கிறிஸ்து சொன்ன அந்த வார்த்தையை நாம் சொல்லக்கூடிய தகுதியை இழந்து விடுவோம்.

விசுவாசிகளின் ஊழியம் என்பது ஏதோ சபைக்குத் தசமபாகம் கொடுத்துவிட்டு ஆராதனையில் பங்கு பெறுவது மட்டுமல்ல.

Our race and ministry are different.

விசுவாசிகளுடைய ஓட்டப்பந்தயத்தின் பரிசை இழக்கச் செய்யும் சக்திகளுக்கு விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு விசுவாசியும்
தேவனிடத்தில் போராடி தனக்கெனத் தேவன் வைத்துள்ள அழைப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அழைப்பு, ஊழியம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஒவ்வொரு விசுவாசிக்கும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தும். சபையில் போதகரோடு 100 விசுவாசிகள் இருந்தால் அந்த 100 விசுவாசிகளும் ஏதாவது ஒரு தேவனுடைய பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுதான் தேவனுடைய சித்தம்.
விசுவாசிகளைத் தங்கள் ஊழியத்தை நிறைவேற்ற இயலாத சப்பாணிகளாக தேவன்அழைக்கவில்லை.
அவர்களை மான்கால்களைப் போல் ஓடுகின்ற நபர்களாக அழைத்திருக்கிறார்.
எனவே விசுவாசிகளுக்கு அவர்களது ஓட்டமும் அவசியம் ஊழியமும் அவசியம்.
என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24
இந்த வார்த்தையை நிறைவேற்ற ஒவ்வொரு விசுவாசியும் அழைக்கப்பட்டு இருக்கிறான்.