யோசேப்பின் ஆடைகள் களையப்பட்ட இரண்டு நிகழ்வுகள்
உங்கள் சிந்தனைக்கு:
யோசேப்பின் ஆடைகள் களையப்பட்ட இரண்டு நிகழ்வுகள்
யோசேப்பின் வாழ்க்கையில் இரண்டு நிகழ்வுகள் மிக முக்கியமானது.
அந்த இரண்டு நிகழ்வுகளும் அவனுடைய உயர்வோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.
யோசேப்பு தன் தகப்பனுடைய வயதான காலத்தில்(91) அவனுடைய அன்பு மனைவியான ராகேல் மூலமாகப் பிறந்தவன். வயதான காலத்தில் பிறந்த காரணத்தால் என்னவோ அவனுக்குப் பலவிதமான வர்ணங்களை உடைய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தான் யாக்கோபு.
இது அவனுடைய மற்ற பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை.
அவர்கள் பொறாமை கொண்டு அவனுடைய ஆடைகளைக் களைந்து அதில் ஆட்டின் இரத்தத்தைதெளித்து தகப்பனுக்கு அனுப்பி அவன் மிருகங்களால் கொலை செய்யப்பட்டதாக நம்பச் செய்தார்கள்.
இது, அவர் ஆடையை இழந்தது முதல் நிகழ்வு.
அதற்குப் பிறகு போத்திபார் வீட்டில் நல்ல உயர்ந்த நிலையில் இருக்கும்போது அவனுடைய மனைவியின் ஆசைக்கு யேசேப்பு இணங்கிப் போகாததால் அவளுடைய சூழ்ச்சியால் அவனுடைய ஆடையைப் பிடுங்கிக் கொண்டாள். விளைவுச் சிறைச்சாலை.
இரண்டு தடவை தன் ஆடைகளை இழந்தான். இரண்டு தடவையும் படுகுழியிலும், சிறைச்சாலையிலும் தள்ளப்பட்டான்.
ஆனால் அந்தச் சிறைச்சாலையில் இருந்துதான் அவனுக்கு மிகப்பெரிய உயர்வு வந்தது.
ஆம் பார்வோனுக்கு அடுத்த இடம் அவனுக்கு அளிக்கப்பட்டது. அவனுக்கு மென்பட்டு உடை அணிவிக்கப்பட்டது. அவனுக்கு ராஜாவால் உயர்ந்த ஆடை கொடுக்கப்பட்டது.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
எந்த வகையில் நாம் அவமானப்படுத்தப்படுகிறோமோ அதே வழியில் கடவுள் நம்மை உயர்த்துவார்.
எப்போதுமே தேவன் நம்மை அவமானப்படுத்தி சிறுமைப்படுத்துகிறவர் அல்ல. நாம் எவற்றை இழக்கிறோமோ, அதற்கு ஈடாக எதிர்பாராத ஒரு மிகப்பெரிய உயர்வைத் தேவன் நமக்கு அளிப்பார்.
இரண்டு தடவை உடைகளை இழந்தாலும் யோசேப்பு தன் உத்தமத்தை இழக்கவில்லை. பரிசுத்தத்தை இழக்கவில்லை. கர்த்தரை இழக்கவில்லை. விளைவு இறுதியாக அவனுக்கு ராஜாவினால் ஆடை அணிவிக்கப்பட்டது. இது தேவன் செய்யும் காரியம். நாம் எதை இழக்கிறோமோ அவைகள் ஆசீர்வாதத்திற்கான கருவிகளாய் மாறும்.
நமக்கு மிகப்பெரிய இலாபத்தைத் தேவன் கொடுப்பார். தேவனுக்காக இழக்கின்ற கஷ்டங்கள் பின்னால் சிறந்த ஆசீர்வாதங்களாக மாறும். நம்முடைய தற்காலிக இழப்புகள் பின்நாட்களில் நிரந்தர ஆசீர்வாதங்களாக மாறும்.
எசேக்கியல் சண்முகவேல்