Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

வேதத்தில் முதல் காதல் தம்பதி
உங்கள் சிந்தனைக்கு:

வேதத்தில் முதல் காதல் தம்பதி

வேதத்தில் முதல் காதல் தம்பதி யாரென்றால் யாக்கோபும் ராகேலும்தான்.

அந்த உறவு ஒரு உணர்ச்சிகரமான அன்பு நிறைந்த, அதே வேளையில்‌ சோகம்
நிறைந்த உறவாகும்.
ஆபிரகாம் தன் மகனுக்குப் பெண் தேட தன் வேலைக்காரனை அனுப்பி ரெபேக்காளை
தேர்ந்தெடுத்தான். ஆனால் யாக்கோபு தன் மனைவியைத் தேடி தன் மாமன் வீட்டுக்குப் போகும்போது மாமன் மகளை முதல் முதலாக அவன் சந்தித்தான்.

முதல் சந்திப்பிலேயே அவளை முத்தம் செய்து அழுது தான், அவளுடைய தகப்பனுடைய மருமகன் என்று அறிமுகம் செய்தான்.

"Love at first sight".

அன்று ஆரம்பித்த அந்த அன்பு கடைசி மட்டும் யாக்கோபை விட்டு நீங்கவே இல்லை.

லேயாள் நிர்பந்தத்தின் நிமித்தமாக அவனுக்குக் கொடுக்கப்பட்டாள் .
ஆனாலும் தான் காதலித்த ராகேலுக்காக இரவும் பகலும் 7 வருடங்கள் உழைத்தான்.

யாக்கோபின் பார்வையில் ராகேல் தான் முதல் மனைவி. அதனால்தான் என்னவோ யோசேப்பின் இரண்டு பிள்ளைகளில் ஒன்றான எப்பீராயிமுக்கு குடும்பத்தின் பிறப்புரிமை கொடுத்தான் போலும்‌. திருமண சடங்குகள் முறையில் வேண்டுமானால் அவள் இரண்டாவது மனைவியாக இருக்கலாம். அவளைத் தன் மனதளவில் முதல் மனைவியாக ‌ உள்ளத்தில் ஏற்றுக்கொண்டான்.
ஆனாலும் லேயாளை அவன் வெறுக்கவில்லை. ஆனால் அவளைக் காட்டிலும் ராகேல் மீது அதிக அன்பு கொண்டான். அதில் எந்தத் தவறும் கிடையாது. யாக்கோபுக்கு 3 பெண்கள் மூலமாகக் குழந்தைகள் பிறந்தாலும் தன் அன்பு மனைவி ராகேல் மூலம் ஒரு குழந்தையும் பெறவில்லை என்கிற ஒரு ஏக்கம் இருந்தது.
இறுதியில் மற்றவர்கள் மூலமாக 11 குழந்தைகள் பெற்ற பிறகு கடைசி இரண்டு குழந்தைகள் ராகேல் மூலமாக யாக்கோபுக்கு கிடைத்தது.
ஆனால் அதிலும் ஒரு சோகம் இரண்டாவது மகன் பென்யமீன் பிறக்கும்போது அவள் பிரசவத்திலேயே மரித்துப் போனாள்.

அந்தச் சோகத்தை அவன் கடைசி வரைக்கும் மறக்கவே இல்லை. அதனால் தான் கடைசி இரண்டு பிள்ளைகள்மீது அவனுக்கு அவ்வளவு பாசம். குறிப்பாக யோசேப்பு மீது. ஆனாலும் யோசேப்பு மிருகத்தினால் கொல்லப்பட்டான் என்று சொல்லப்பட்டபோது அவன் அடைந்த வருத்தத்தை ஆதியாகமம் புத்தகம் 37 :33-35ல் தெளிவாகப் பார்க்கலாம்.

அதற்குப் பிறகு அவனுடைய பாசம், தான் நேசித்த மனைவியின் இரண்டாவது மகனான பென்யமீன் மீது ஏற்பட்டது.
யோசேப்பு அவனை எகிப்து தேசத்திற்கு வரவழைக்க முயன்றபோது அவன் யோசேப்பை இழந்தது போல இவனையும் இழக்கவில்லை என்று சொன்ன காட்சி ஆதி 42 36 -38 ல்பார்க்கலாம்.

அவனுக்கு 12 ஆண் குழந்தைகள் இருந்தாலும் தன் அன்பு மனைவி ராகேல் மூலமாகப் பெற்றெடுத்த அந்த இரண்டு பிள்ளைகள்மீது அவ்வளவு பாசம். இதேப்போல் அன்பு மனைவியின் மீதும் பிள்ளைகள்மீதும் உள்ள நிகழ்வுகளை வேதத்தில் காண்பது மிக அரிது.
அவனுக்கு ராகேல் மீதும் அவளுடைய குழந்தைகள்மீதும் உள்ள பாசத்தை விவரிக்க முடியாது.
யாக்கோபு ராகேல் உறவு இன்றைய விசுவாசிகளுக்கு ஒரு சிறந்த மாதிரி. காதலித்த‌ மனைவிக்காக வாழ்ந்த யாக்கோபின் உறவும், வாழ்க்கையும், இரண்டாவது மனைவியாக வாழ்க்கையை தொடங்கி தன் கணவன்மீது காட்டின ராகேலினுடைய அன்பும் கணவன் மனைவி உறவுக்கு நாம் பின்பற்ற வேண்டிய நல்ல மாதிரி.