மோசேயை ஏன் தேவன் கொல்ல முயன்றார் ?
உங்கள் சிந்தனைக்கு:
மோசேயை ஏன் தேவன் கொல்ல முயன்றார் என்பது புரியாத புதிர்
வேதத்தில் சில பகுதிகளை நாம் புரிந்து கொள்ள முடியாது.
எவ்வளவு விளக்கங்கள் சொல்லப்பட்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாத பகுதிகள் உண்டு.
அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் மோசேயை ஆண்டவர் கொல்ல நினைத்த காரியம்.
அதுவும் இந்தக் காரியம் எப்பொழுது நடந்தது என்றால் ஆண்டவர் மோசேயோடு விவாதம் பண்ணி மூன்று அற்புதங்களை அடையாளங்களாகக் காண்பித்து வாக்குத்தத்தங்களை கொடுத்தும் அதை ஏற்க மறுத்து, இறுதியாக அவருடைய வாயாக ஆரோனை நியமித்து அவரை, இஸ்ரவேலரை நடத்தும்படியான ஒரு பொறுப்பை ஒப்புக் கொடுத்தபிறகு இந்தக் காரியம் நடைபெற்றதாகப் பார்க்கலாம்.
ஏன் இந்தக் காரியம் நடந்தது? அதுவும் மோசேயை அவ்வளவு தூரம் வற்புறுத்தி இஸ்ரவேலரை நடத்தக்கூடிய ஒரு பணியைக் கொடுத்தபிறகு இந்த ஒரு காரியத்தை ஏன் தேவன் செய்ய நினைத்தார்?
இதற்கு இரண்டு வகையான விளக்கங்கள் சொல்லப்படுகிறது.
முதல் காரணம் என்னவென்றால் தன்னுடைய மகனுக்கு விருத்தசேதனம் செய்யாமல் இருந்த காரணத்தால் தேவன் அவனைத் தண்டிக்கும்படியாக அவரைக் கொல்ல நினைத்ததாகச் சொல்கிறார்கள்.
அதைப் புரிந்து கொண்டு அவர் மனைவி தன் மகனுக்கு விருத்தசேதனம் பண்ணி தன் கணவனைக் காப்பாற்றியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கருத்து.
இன்னொரு கருத்து அவருடைய மனைவி தன் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுவதை விரும்பாத காரணத்தினால் கர்த்தர் மோசேயை கொல்ல நினைத்தபொழுது தன் தவற்றை உணர்ந்து தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இன்னொரு கருத்து.
இதில் புரிந்து கொள்ள முடியாத காரியம் என்னவென்றால் புதரின் மத்தியில் தோன்றிய தேவனை நோக்கி மோசே வந்தபோது உன் பாதரட்சயை கழற்றி போடு இது புண்ணிய பூமி என்று அவரை எச்சரித்த தேவன் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்பதற்காக நீண்ட விவாதம் நடத்திய தேவன் இந்தக் காரியத்தைக் குறித்து ஏன் மோசேயோடு நேரடியாகப் பேசிச் சொல்லி இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.
இதற்கான விடையை நாம் பரலோகத்தில் மட்டும்தான் பெற்றுக்கொள்ள முடியும். மறைக்கப்பட்டவைகள் தேவனுக்கே தெரியும். இதைக் குறித்து நாம் அதிகமாக விவாதம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்லது.
இதில் கற்றுக்கொள்ளக்கூடிய
காரியம் என்னவென்றால் விருத்தசேதனம் பண்ணின யூதர்களை வழிநடத்தக்கூடிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட மோசே தன்னுடைய குடும்பத்தில் தன் பிள்ளைகளுக்கு
விருத்தசேதனம் பண்ணாமல் இருப்பது தலைமை பண்புக்குச் சரியில்லை என்று தேவன் கருதி இந்தக் காரியத்தை எச்சரிப்பாகச் செய்திருக்கலாம்
1திமோ3:4