யோபுவின் புத்தகம் *Expository Commentary on the Book of Job. வேதபாடம் – 15
*உங்கள் சிந்தனைக்கு..*
*யோபுவின் புத்தகம்*
*Expository Commentary on the Book of Job.*
வேதபாடம் – 15.
இந்தப் பதிவில், யோபு கடவுளைப் பற்றிய இறையியலை எவ்வளவு ஆழமாகப் புரிந்திருந்தான் என்பதைப் பார்க்கலாம்.
கடவுளைப் பற்றிய புரிதல் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களிடமும், அறியாதவர்களிடமும், கடவுளை நம்பாதவர்களிடமும் கூட கடவுளைப் பற்றிய எண்ணங்கள் மாறுபடுகின்றன. எந்த மனிதனாலும் கடவுளைப் பற்றிய முழுமையான விளக்கத்தை அளிக்க முடியாது. ஆனால், கிறிஸ்தவ இறையியல் வேதாகமத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.
யோபு புத்தகத்தின் 13-ஆம் அதிகாரத்தில், யோபு கடவுளைப் பற்றிய பல ஆழமான உண்மைகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறான். அவன் மிகுந்த துன்பங்களின் வழியாகச் சென்றான். பொருளாதார இழப்புகளை மட்டுமல்ல, தன் பிள்ளைகளையும் இழந்தான். சரீர வேதனையாலும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். இருந்தபோதிலும், கடவுளைப் பற்றிய அவனுடைய சிந்தனைகள் குழப்பமானவையோ, வறட்டுத் தத்துவங்களோ அல்ல; மாறாக, சத்தியத்தையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன.
இந்த அதிகாரத்தில் காணப்படும் சில முக்கிய இறையியல் சத்தியங்கள்:
1. தேவனுடைய இறையாண்மை (The Sovereignty of God) – யோபு 13:3
யோபு மனிதர்களிடம் அல்ல, நேரடியாக தேவனிடமே தன் வழக்கைப் பேச விரும்புகிறான். தேவனே அனைத்திற்கும் மேலான இறையாண்மையுள்ளவர் என்பதை இது காட்டுகிறது.
2. உண்மையான இறையியலின் அவசியம் (True Theology) – யோபு 13:4–12
"காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்", "தேவனுக்காகப் பட்சபாதம் செய்வீர்களா?" என்று யோபு நண்பர்களைக் கண்டிக்கிறான்.
தேவனைப் பற்றி பொய்யாகப் பேசுவது, தேவனை மகிமைப்படுத்தாது. தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் வெளிப்படுத்தாமல், அவர் பாவிகளைத் தண்டிக்கிறவர் என்ற ஒரே கோணத்தில் மட்டும் பேசிய நண்பர்களின் இறையியலை யோபு நிராகரிக்கிறான்.
3. தேவனுடைய பாரபட்சமின்மை (God's Impartiality) – யோபு 13:8–10
தேவன் முகத்தாட்சணியம் பார்க்கிறவர் அல்ல. அவருக்காகப் பொய்யாகப் பேசுகிறவர்களையும் அவர் கண்டிப்பார்.
4. விசுவாசத்தின் நிலைத்தன்மை (Persevering Faith) – யோபு 13:15
"அவர் என்னைக் கொன்றாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்."
இது வேதாகமத்தில் காணப்படும் விசுவாசத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
5. இரட்சிப்பின் நம்பிக்கை (Assurance of Salvation) – யோபு 13:16
"இதுவே எனக்கு இரட்சிப்பாயிருக்கும்; பக்தியில்லாதவன் அவர் சந்நிதியில் வரமாட்டான்."
யோபு தன் சொந்த நீதியை அல்ல, தேவனிடத்தில் நிற்கும் நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறான்.
6. தேவனுடைய நீதித்தீர்ப்பு (Divine Judgment) – யோபு 13:18–23
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. ஒவ்வொரு மனிதனும் அவருக்கு முன்பாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள்.
7. மனிதனின் பலவீனம் (Human Frailty) – யோபு 13:25–28
மனிதன் காற்றில் பறக்கும் இலைபோலும், அழுகிப்போகும் பொருள்போலும் பலவீனமானவன் என்பதை யோபு உணர்த்துகிறான்.
8. பாவத்தின் விளைவுகள் (Consequences of Sin) – யோபு 13:26–27
தன் இளவயது பாவங்களைக்கூட தேவன் நினைவுகூருகிறாரோ என்று யோபு கேட்கிறான். இது தேவனுடைய பரிசுத்தத்தையும், பாவத்தின் தீவிரத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்த அதிகாரத்தின் மையச் செய்தி
"மனிதன் தேவனைப் பற்றி உண்மையாகப் பேச வேண்டும். தேவன் நீதியுள்ளவரும் இறையாண்மையுள்ளவரும் ஆவார். அவர் மௌனமாக இருந்தாலும், உண்மையான விசுவாசி அவர்மேல் உள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது."
இந்த அதிகாரத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க வசனம் யோபு 13:15 ஆகும். பல இறையியல் அறிஞர்கள் இதை "நிபந்தனையற்ற விசுவாசத்தின் உச்ச அறிக்கை" (The Supreme Declaration of Unconditional Faith) என்று குறிப்பிடுகின்றனர். இது யோபு புத்தகத்தின் மிக உயர்ந்த இறையியல் உச்சங்களில் ஒன்றாகும்.
வேதாகமத்தின் அடிப்படையில் இறையியலைக் கற்றுக்கொள்வது அவசியம். ஆனால் அதைவிட முக்கியமானது, அந்த இறையியல் நம் வாழ்க்கையில் நடைமுறையாக வெளிப்பட வேண்டும் என்பதே.
கல்லூரியில் கற்றுக்கொள்ளும் இறையியல் மட்டும் வாழ்க்கையை மாற்றாது. அந்த இறையியல் அனுபவப்பூர்வமாக நம் வாழ்க்கையில் செயல்பட வேண்டும்
Theoretical theology is of little value if it remains only in the mind. What we need is biblical theology lived out through practical Christian living
இன்றைய காலத்திலும் இறையியல் கல்லூரிகளில் படித்த பலர், அறியாமலேயே யோபுவின் நண்பர்களைப் போல மாறிவிடுகிறார்கள். அவர்களிடம் இறையியல் அறிவு இருக்கிறது; ஆனால் அந்த அறிவில் தேவனுடைய இரக்கமும், கிருபையும், அன்பும், உண்மையும் முழுமையாக வெளிப்படுவதில்லை. இது மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.
நமது நோக்கம் வெறுமனே இறையியலைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; யோபுவைப் போல அதை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவதும் ஆகும். யோபுவின் நண்பர்களைப் போல தேவனைத் தவறாக பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களாக அல்ல, சோதனைகளின் மத்தியிலும் தேவனை உண்மையாக அறிந்து அவரை சரியாக பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களாக நாம் மாற வேண்டும்.