*யோபுவின் புத்தகம் *Expository Commentary on the Book of Job. வேதபாடம் – 14
*உங்கள் சிந்தனைக்கு.*
*யோபுவின் புத்தகம்*
*Expository Commentary on the Book of Job.*
*வேதபாடம் – 14*
யோபுவைப் பற்றிய நம்முடைய மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவையா?
பொதுவாக, யோபுவைப் பற்றிய நம்முடைய பார்வை என்னவென்றால், தேவன் அனுமதித்த சோதனைகளால் சாத்தானினால் பாதிக்கப்பட்டு, தன் நீதியை நிலைநாட்டவும், விடுதலையை நாடவும் தேவனோடும் நண்பர்களோடும் போராடிய ஒரு மனிதன் என்பதே.
இதுவும் உண்மைதான். ஆனால், அதுவே யோபுவின் முழுமையான உருவம் அல்ல.
யோபுவைப் போல பல்வேறு இறையியல் சத்தியங்களை அறிந்த மனிதர்கள் பழைய ஏற்பாட்டில் மிகச் சிலரே.
1. இறையியலை ஆழமாகப் புரிந்துகொண்ட மனிதன்
அந்தக் காலத்தில் முறையான இறையியல் கல்வி கற்பிக்கப்படவில்லை என்றாலும், தேவனைப் பற்றிய உண்மையான இறையியலை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்களில் யோபு முன்னணியில் நிற்கிறார்.
அதனால்தான், அவருடைய நண்பர்கள் தங்கள் இறையியல் கருத்துக்களை முன்வைத்து யோபுவின் காயங்களை மேலும் ஆழப்படுத்தியபோதிலும், அவர்களுடைய வார்த்தைகளை தேவன் அங்கீகரிக்கவில்லை (யோபு 42:7).
யோபு ஒரு சிறந்த இறையியலாளர் (Theologian). குறிப்பாக தேவனைப் பற்றிய இறையியல் (Theology Proper) குறித்து ஆழமான புரிதலை உடையவர்.
பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மகத்துவம், பரிபூரண அதிகாரம், இறையாண்மை ஆகியவற்றை மிகவும் ஆழமாக எடுத்துரைத்தவர்களில் யோபு முக்கியமானவர். தேவன் சர்வவல்லவர், சர்வஞானி, சர்வாதிகாரி என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
அதே நேரத்தில், தேவனுடைய செயல்கள் மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவை என்பதையும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறார் (யோபு 38–42).
2. இயற்கையைப் பற்றிய ஆழமான சிந்தனையாளர்
மலைகள், கடல், மழை, மேகம், இடி, மின்னல், நட்சத்திரங்கள், விலங்குகள், பறவைகள் போன்ற இயற்கையின் அற்புதங்களை ஆச்சரியப்படத்தக்க அறிவுடனும் கவிதைநயத்துடனும் விவரிக்கிறார்.
3. படைப்பியலைப் பற்றிய தெளிவான பார்வை
பிரபஞ்சம் தற்செயலாக தோன்றியதல்ல; தேவனுடைய அளவற்ற ஞானத்தாலும் வல்லமையாலும் படைக்கப்பட்டது என்பதை உறுதியாக வெளிப்படுத்துகிறார்.
4. மனிதனைப் பற்றிய சிந்தனை (Anthropology)
யோபுவின் மனிதவியல் சிந்தனைகள் மிகவும் ஆழமானவை.
மனித வாழ்க்கை குறுகியது.
மனிதன் பலவீனமுள்ளவன்.
மனிதன் பாவ இயல்புடையவன்.
மனிதனால் தன்னைத் தானே நீதிமானாக்க முடியாது.
5. துன்பத்தைப் பற்றிய இறையியல்
யோபுவின் மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று துன்பத்தைப் பற்றிய அவரது பார்வையாகும்.
எல்லா துன்பமும் தனிப்பட்ட பாவத்தின் விளைவு அல்ல.
நீதிமான்களும் துன்பப்படலாம்.
துன்பத்தின் நோக்கம் மனிதனுக்கு உடனடியாகப் புரியாமல் இருக்கலாம்.
6. மீட்பரைப் பற்றிய உறுதியான நம்பிக்கை
"என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறார் (யோபு 19:25–27). இது பழைய ஏற்பாட்டிலேயே மீட்பரைப் பற்றிய மிகச் சிறந்த விசுவாச அறிக்கைகளில் ஒன்றாகும்.
7. உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கை
மரணத்திற்குப் பிறகும் தேவனை காணும் நம்பிக்கையை யோபு வெளிப்படுத்துகிறார். அவரது வார்த்தைகளில் உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் ஒளி தென்படுகிறது.
8. ஞானத்தைப் பற்றிய பார்வை
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானம்" (யோபு 28:28) என்று அவர் வலியுறுத்துகிறார். உண்மையான ஞானம் தேவபயத்திலிருந்தே பிறக்கிறது என்பதை எடுத்துரைக்கிறார்.
9. விசுவாசத்தின் முன்மாதிரி
எல்லாவற்றையும் இழந்தபோதும் தேவனை முழுமையாகக் கைவிடவில்லை. அவர் தேவனிடம் கேள்விகள் கேட்டார்; ஆனால் தேவனை மறுக்கவில்லை.
10. ஜெபிக்கிற மனிதர்
தன்னைத் துன்புறுத்திய நண்பர்களுக்காகவும் ஜெபித்தார். அவருடைய ஜெபத்தை தேவன் ஏற்றுக்கொண்டு அவர்களை மன்னித்தார் (யோபு 42:8–10).
சுருக்கமாகச் சொன்னால்
யோபு,
ஒரு இறையியலாளர் (Theologian)
ஒரு இயற்கை ஆய்வாளர் (Observer of Creation).
ஒரு ஞானி (Wise Man)
ஒரு கவிஞர் (Poet)
ஒரு தத்துவச் சிந்தனையாளர்
(Philosopher)
ஒரு விசுவாச வீரர் (Hero of Faith)
ஒரு துன்பத்தின் இறையியலாளர் (Theologian of Suffering)
ஒரு உயிருள்ள மீட்பரின் சாட்சியாளர் (Witness to the Living Redeemer)
இவ்வளவு சிறப்பம்சங்கள் ஒரே மனிதரிடம் ஒன்றிணைந்திருப்பதால்தான், யோபுவின் புத்தகம் பழைய ஏற்பாட்டின் மிகவும் ஆழமான இறையியல் நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க புதிய கருத்துப் புதையல்கள் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனைப் பிடித்த புகழ்பெற்ற காவல் அதிகாரி கே. விஜயகுமார் (K. Vijay Kumar), இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவராக இருந்தாலும், யோபுவின் புத்தகத்தை மிகவும் விரும்பி ரசித்துப் படிப்பதாகக் கூறியிருக்கிறார். அது இந்த நூலின் இலக்கிய, தத்துவ மற்றும் சிந்தனை ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல, யோபுவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில இயற்கை மற்றும் படைப்புக் குறிப்புகள் பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் விவாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் இந்த நூலின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
எனவே, இந்தப் புத்தகத்தை நல்ல வேத வியாக்கியானங்களின் உதவியுடன், நேரமெடுத்து ஆழமாகப் படிக்கும்போது, நம்முடைய ஆவிக்குரிய கண்கள் மேலும் பிரகாசிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இறுதியாக ஒரு சிந்தனை...
நம்முடைய இறையியல் கோட்பாடுகள் மற்றவர்களின் காயங்களை ஆற்றுபவையாகவும், அவர்களைப் பண்படுத்துபவையாகவும் இருக்க வேண்டும்.
இல்லையெனில், யோபு கூறுவதுபோல, நாம் "பயனற்ற மருத்துவர்கள்" (யோபு 13:4) ஆகிவிடுவோம்.
நம்முடைய இறையியலில் Sympathy (அனுதாபம்) மட்டுமல்ல, Empathy (பிறருடைய துயரத்தை உணர்ந்து அவர்களோடு இணைந்து உணரும் மனப்பான்மை)யும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் நம்முடைய இறையியல் உயிருள்ள இறையியலாக இருக்கும்; இல்லையெனில் அது வெறும் வாதமாக மட்டுமே மாறிவிடும்.