Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*யோபுவின் புத்தகம்* *Expository Commentary on the Book of Job* *வேதபாடம் – 13*
*உங்கள் சிந்தனைக்கு.*

*யோபுவின் புத்தகம்*
*Expository Commentary on the Book of Job*

*வேதபாடம் – 13*

*சோப்பார் – இரக்கமற்ற குற்றச்சாட்டின் குரல்* .

யோபுவின் துயரத்தை அறிந்து அவனுக்கு ஆறுதல் கூற வந்த மூன்று நண்பர்களில் இளையவனாகக் கருதப்படுபவன் சோப்பார். ஆனால், *அந்த மூவரில் மிகவும் கடுமையாகவும்* *இரக்கமற்ற விதத்திலும் யோபுவைக் குற்றஞ்சாட்டியவன்* *இவனே* .
எலிப்பாசும் பில்தாத்தும் யோபுவின் துன்பத்திற்கு காரணம் அவனுடைய பாவமே என்று மறைமுகமாகக் கூறினாலும், சோப்பார் அதைவிட மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறான்.
எலிப்பாசு யோபுவை நேரடியாக "நீ பாவி" என்று சொல்லவில்லை. தேவன் தண்டிக்கிறார்; ஆகையால் மனந்திரும்பு என்று அறிவுறுத்தினான்.
பில்தாத் (யோபு 8) இன்னும் ஒரு படி மேலே சென்று, "உன் பிள்ளைகள் பாவம் செய்ததினால்தான் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்" (யோபு 8:4) என்று யோபுவின் மனதை மிகவும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசினான். இருந்தாலும், யோபு தேவனைத் தேடினால் அவர் மீண்டும் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையையும் அவன் கொடுத்தான்.
ஆனால், சோப்பார் கூறிய வார்த்தைகள் மிகவும் கடுமையானவையாக இருந்தன.
1. *யோபுவை நேரடியாகக் குற்றவாளி என்று தீர்மானித்தான்*
"உன் அக்கிரமத்திற்குத் தக்கதைவிடக் குறைவாகவே தேவன் உன்னைத் தண்டித்திருக்கிறார்" (யோபு 11:6) என்று கூறி, யோபு குற்றமற்றவன் என்ற சாத்தியத்தையே முற்றிலும் நிராகரித்தான்.
2. *யோபுவின் மறைவான பாவங்களைக சுட்டிக்காட்டினான்*
"தேவன் உன் அக்கிரமங்களில் சிலவற்றை மறந்துவிட்டார் என்பதை அறிந்துகொள்" (யோபு 11:6) என்ற கருத்தின் மூலம், யோபுவிடம் வெளிப்படையாக அறிக்கையிடப்படாத பல பாவங்கள் இருக்கின்றன என்று குற்றம் சாட்டினான். உண்மை தெரியாமலேயே யோபுவின் உள்ளத்தைத் தீர்ப்பளிக்க முயன்றான்.
3. *யோபுவின் நீதியை ஏளனப்படுத்தினான்*
"வாயாடி நீதிமானாகக் கருதப்பட வேண்டுமா?" (யோபு 11:2–3) என்ற பொருளில் பேசுவதன் மூலம், யோபு தனது வார்த்தைகளால் மட்டுமே தன்னை நீதிமானாகக் காட்டிக்கொள்கிறான்; செயல்களில் அவன் அப்படியில்லை என்று குற்றஞ்சாட்டினான்.
இவ்வாறு, யோபு அனுபவித்த மரண வேதனைகளையும், பொருளாதார இழப்புகளையும், சரீர வேதனைகளையும் சிறிதும் உணராமல், தேவனுடைய நீதியை மட்டும் முன்னிறுத்தி, இரக்கமின்றி அவனைக் குற்றவாளியாக நிறுத்திப் பேசினான் சோப்பார்.
இன்றும் இதே மனநிலை கொண்டவர்களை நாம் சந்திக்கிறோம். *துன்பத்தின் பாதையை அறியாதவர்கள், ஆண்டவருக்காக* *எதையும் இழக்காதவர்கள், சுகபோக வாழ்க்கையில் வாழ்பவர்கள், சீடத்துவத்தின் விலையை அனுபவிக்காதவர்கள்—இவர்கள் பல* *நேரங்களில் பாடுகளின் வழியாக நடக்கும் தேவனுடைய பிள்ளைகளை* *எளிதாகக் குற்றம் சாட்டிவிடுகிறார்கள்* .
தங்களுடைய வெளிப்புற மார்க்கச் செயல்கள், காணிக்கைகள் அல்லது ஆசீர்வாதங்களையே நீதியின் அளவுகோலாகக் கருதி, துன்பப்படுகிறவர்களைத் தாழ்வாகப் பார்க்கிறார்கள். ஆனால் தேவனுடைய நீதி மட்டுமல்ல, அவருடைய இரக்கமும் கருணையும் அறிந்தவர்களே உண்மையான ஆறுதல் கூற முடியும்.
எனவே, உண்மையை அறியாமல் குற்றம் சாட்டுகிற "சோப்பார்" போன்றவர்களின் வார்த்தைகளால் மனம் தளராமல் இருக்க வேண்டும். அவர்களுடைய தீர்ப்புகளைவிட, தேவனுடைய தீர்ப்பே இறுதியானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கண்ணீரோடு விதைக்கிறவர்கள் சந்தோஷத்தோடு அறுப்பார்கள் (சங்கீதம் 126:5). பாடுகளின் பாதையில் ஆண்டவரோடு உண்மையாக நடப்பவர்களுக்கு அவர் நித்தியமும் நிலையான ஆசீர்வாதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
ஆகையால், போலியான ஆறுதலையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அடையாளம் கண்டு, அவற்றால் சோர்ந்து போகாமல், தேவனுடைய இரக்கத்தின் மேல் நம் நம்பிக்கையை நிலைநிறுத்துவோம்.