யோபுவின் புத்தகம்* *Expository Commentary* *on the Book of Job* *வேதபாடம் – 12
*உங்கள் சிந்தனைக்கு.*
*யோபுவின் புத்தகம்*
*Expository Commentary* *on the Book of Job*
*வேதபாடம் – 12
"நான் ஏன் பிறந்தேன்?" — இந்தக் கேள்வியை வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்காதவர் யாரும் இருக்க முடியாது. வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் இந்தக் கேள்வி நம் உள்ளத்திலிருந்து கடவுளை நோக்கி எழுகிறது.
அது குறிப்பாக,
உலக மக்கள் முன்பாக நாம் எதற்கும் பயனற்றவர்களாகத் தோன்றும்போது,
நம்முடைய திட்டங்களும் முயற்சிகளும் முற்றிலும் தோல்வியடைந்து தரைமட்டமாகும்போது,
எந்த மருந்தாலும் குணமாகாத, தாங்க முடியாத உடல் வேதனையை அனுபவிக்கும்போது,
நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் பாடுகளுக்கும் காரணம் புரியாமல் தவிக்கும்போது,
பிறருக்குச் செய்த உதவிகளும் நன்மைகளும் மறக்கப்பட்டு, நன்றியற்றவர்களால் புறக்கணிக்கப்படும்போது,
இந்தக் கேள்வி நம் உள்ளத்தில் எழுவது இயல்பானதே.
இது கடவுளுக்கு எதிரான கலகக் குரல் அல்ல; மாறாக, மனிதனின் இயலாமையையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தும் ஒரு கதறலாகும்.
அப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் யோபு புத்தகத்தின் 10ஆம் அதிகாரத்தில் யோபு எழுப்புகிறார். " *நான் ஏன் பிறந்தேன்?" என்று வேதாகமத்தில் முதன்முதலில் கேட்பவர் யோபுவாக* *இருக்கலாம்* .
எல்லாமே நன்றாகச் சென்று கொண்டிருந்தது. யோபு தேவனுக்குப் பிரியமான நீதிமானாக வாழ்ந்தான். தன் பிள்ளைகள் அறியாமல் பாவம் செய்திருக்கலாம் என்று எண்ணி, அவர்களுக்காகப் பலியிட்டு தேவனிடம் பரிகாரம் வேண்டிக் கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று தனது பிள்ளைகளையும், செல்வங்களையும் இழந்தான். அதோடு, கடுமையான உடல் வேதனையாலும் பாதிக்கப்பட்டான்.
இந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல், "நான் ஏன் பிறந்தேன்?" என்று தேவனை நோக்கி கதறினான்.
இந்த அதிகாரத்தில் யோபு தன் நண்பர்களிடம் அல்ல, நேரடியாக தேவனிடமே தனது மனவேதனையை வெளிப்படுத்துகிறான். அவன் கூறும் சில வார்த்தைகள் மிகவும் வேதனையூட்டுபவையாக இருக்கின்றன.
" *தேவன் என்னைச் சிங்கம்போல் வேட்டையாடுகிறார்* ." (10:16)
"என் அக்கிரமத்தைக் கிண்டிக் கிளறி, என் பாவத்தை ஆராய்கிறார்." (10:6)
"என்னைத் தமது கைகளால் உருவாக்கிவிட்டு, இப்போது என்னை அழிக்கிறார்." (10:8)
"எனக்கு விரோதமாக புதிய சாட்சிகளை எழுப்பி, தமது கோபத்தை அதிகப்படுத்துகிறார்." (10:17)
*இறுதியில், "சிறிது இளைப்பாறும்படி என்னை விட்டுவிடும்" என்று தேவனிடம் வேண்டுகிறான் (10:20–21).*
இந்த அதிகாரத்தில் யோபு ஒரு நடுவரை மட்டுமல்ல, தன்னை *இந்த வேதனையிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒரு மீட்பரையும் ஏங்கத் தொடங்குகிறான்.* அந்த ஏக்கம் பின்னர், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" (19:25) என்ற மகத்தான விசுவாச அறிக்கையாக வெளிப்படுகிறது.
ஆனால் தேவன் உடனடியாக யோபுவுக்குப் பதிலளிக்கவில்லை.
ஏனெனில், யோபு அனுபவித்த துன்பங்கள் அவனுடைய பாவத்தின் விளைவு அல்ல; தேவனுடைய அனுமதியுடன் சாத்தான் ஏற்படுத்திய சோதனைகளே என்பதை தேவன் அறிந்திருந்தார். எனவே, யோபுவின் குற்றச்சாட்டுகளை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
அதேபோல, சில நேரங்களில் வேதனையில் நாம் பொறுமையின்றி தேவனை நோக்கி கேட்கும் கேள்விகளையும் அவர் நம் மீது கோபமாக எடுத்துக்கொள்வதில்லை.
ஏனெனில், அவர் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். அவர் நம்முடைய வார்த்தைகளைவிட, நம் இருதயத்தின் நோக்கத்தைப் பார்க்கிறார்.
யோபுவின் புலம்பலில் தேவனுக்கு எதிரான கசப்போ, வெறுப்போ, விசுவாசத் துறப்போ இல்லை. இருந்தது வேதனையால் உடைந்த ஒரு இதயத்தின் கதறல் மட்டுமே.
" **நான் ஏன் பிறந்தேன்?" என்று கண்ணீரோடு கேட்பவர்களுக்கு, "நீ* *ஏன் வாழ வேண்டும்?" என்பதற்கான பதிலை தேவன் தமது நேரத்தில் கொடுக்கிறார். அதுவே அவருடைய* *அளவற்ற கிருபையும் இரக்கமும் ஆகும்.*