Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோபுவின் புத்தகம்* Expository Commentary on the Book of Job. *வேதபாடம் – 16
*உங்கள் சிந்தனைக்கு.*

*யோபுவின் புத்தகம்*
Expository Commentary on the Book of Job.

*வேதபாடம் – 16*
இந்தப் புத்தகத்தின் 13-ஆம் அதிகாரத்தில் பலவிதமான இறையியல் கோட்பாடுகளை கூறிய யோபு, 14-ஆம் அதிகாரத்தில் மனிதனின் பலவீனத்தையும், பாவ நிலையையும், வாழ்க்கையின் நிலையாமையையும் எடுத்துரைப்பதோடு, மரணத்திற்கு அப்பால் தேவனிடமிருந்து வரும் நம்பிக்கையை ஏக்கத்துடன் எதிர்நோக்கும் விசுவாசியின் இருதயத்தையும் வெளிப்படுத்துகிறார்.

இந்த அதிகாரம், பழைய ஏற்பாட்டில் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நோக்கிச் சுட்டிக்காட்டும் முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் இந்த நம்பிக்கை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டாலும், அதன் ஒளிக்கீற்றை யோபுவின் வார்த்தைகளில் நாம் காண முடிகிறது.
அவைகளைக் குறித்து இப்பொழுது தியானிக்கலாம்.

1. *மனிதனின் குறுகிய, துன்பம் நிறைந்த வாழ்க்கை* (14:1–2)
வேதம் நமக்கு உணர்த்தும் பாடம்:
சத்தியம்:
மனித வாழ்க்கை நிரந்தரமானதல்ல.
இந்த உலக வாழ்க்கை துன்பமும் நிலையற்ற தன்மையும் கொண்டது.
"ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனிதன் கொஞ்ச நாளுள்ளவனும், துக்கத்தினால் நிறைந்தவனுமாயிருக்கிறான்" என்ற யோபுவின் வார்த்தைகள் மனித வாழ்க்கையின் உண்மையான நிலையையே வெளிப்படுத்துகின்றன.
2. *மனிதன் தன் வாழ்ந்த நாட்களைக் குறித்து தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவன்* (14:3)
மனிதன் தேவனுடைய பார்வைக்கு மறைவானவன் அல்ல. ஒருநாள் அவன் தன் வாழ்க்கையைக் குறித்து தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவன்.
3. *மனிதன் பிறக்கும் போதே பாவியாகப் பிறக்கின்ற பாவ சுபாவம்* (14:4)
மனிதன் தன்னைத்தானே பரிசுத்தமாக்க முடியாது என்பது இங்கு வேதம் நமக்கு உணர்த்தும் பாடம்.
ஒரு அசுத்தமானவனிடமிருந்து சுத்தமானவன் பிறக்க முடியாது. இதுவே மனிதனின் பாவ சுபாவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த உண்மையை பின்னர் தாவீது (சங்கீதம் 51:5) மற்றும் பவுல் (ரோமர் 5:12) இன்னும் தெளிவாக விளக்குகின்றனர்.
4. *நம்முடைய வாழ்நாட்கள் தீர்மானிக்கப்பட்ட ஒன்று* (14:5)
மனிதனின் ஆயுளும், வாழ்க்கையின் எல்லைகளும் தேவனால் நிர்ணயிக்கப்பட்டவை.
அவருடைய அனுமதி இல்லாமல் ஒருவனாலும் தன் வாழ்நாளை நீட்டிக்க முடியாது.
5. *மனிதனின் மரணம் ஏற்படுத்தும் விளைவை மேற்கொள்ள* *முடியாத இயலாமை* (14:7–12)
வெட்டப்பட்ட மரத்திற்குக்கூட மீண்டும் துளிர்க்கும் நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் மனிதன் மரித்தால் என்ன ஆகும்? என்ற கேள்வியை யோபு எழுப்புகிறார்.
மரணத்திற்கு முன்பாக மனிதன் எவ்வளவு இயலாமையுள்ளவன் என்பதை இந்தப் பகுதி மிகவும் அழகாக எடுத்துரைக்கிறது.
6. *மரணத்திற்குப் பிறகு உள்ள நிலைமையைக் குறித்துள்ள மனிதனின் தவிப்பு (14:13–15)*
இப்படியாக மனிதனுடைய இயலாமையையும், நிலையற்ற தன்மையையும், குறுகிய வாழ்க்கையையும் அழகாக விளக்குகின்ற இந்த அதிகாரத்தில், இறுதியில் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்ற மனிதனின் இருதயத்தை நாம் பார்க்கிறோம்.
"நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து வைத்து, எனக்கொரு காலக்குறியை நியமித்து, பின்னர் என்னை நினைப்பீரானால் நலமாயிருக்கும்" (14:13) என்று யோபு ஏக்கத்தோடு கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து,
"மனுஷன் செத்தபின்பு பிழைப்பானோ?" (14:14)
என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறார்.
அதே நேரத்தில்,
"நீர் கூப்பிடுவீர்; நான் உமக்குப் பதில் சொல்வேன்" (14:15)
என்று தேவன் தன்னை மீண்டும் அழைப்பார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்.
இதுவே பழைய ஏற்பாட்டில் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நோக்கிச் சுட்டிக்காட்டும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நம்பிக்கை யோபு 19:25–27-ல் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.
இறுதியில்,
"கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்; நிலத்தின் மண்ணை வெள்ளம் அடித்துப்போகும்; இவ்வாறே ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்." (யோபு 14:19)
என்று தேவனை நோக்கி தனது வேதனையையும் கேள்வியையும் யோபு முன்வைக்கிறார்.
ஆனால் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. மரணத்திற்குப் பின்பு ஒரு மகிமையான வாழ்க்கை இருக்கிறது என்பது நமக்கு உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (1 கொரிந்தியர் 15; 1 தெசலோனிக்கேயர் 4:13–18).

அந்த முழுமையான வெளிப்பாடு யோபுவுக்கு வழங்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கான ஏக்கமும், நம்பிக்கையும் அவருடைய வார்த்தைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன.
எனவே, யோபு 14-ஆம் அதிகாரம் மனிதனின் பாவநிலை, குறுகிய வாழ்க்கை, மரணத்தின் உண்மை, தேவனுடைய இறையாண்மை மற்றும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஆகியவற்றை ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு அற்புதமான அதிகாரமாகும்.
எந்தக் காலத்திற்கும், எந்த நேரத்திற்கும், எந்தச் சூழ்நிலைக்கும் தியானிக்க வேண்டிய ஒரு அருமையான அதிகாரம்.