யோபுவின் புத்தகம் – வேத பாடம் 22
உங்கள் சிந்தனைக்கு..
யோபுவின் புத்தகம் – வேத பாடம் 22
இந்தப் புத்தகத்தின் 20-வது அதிகாரம் முழுவதும் யோபுவின் நண்பரான சோப்பார் பேசுகிறார். யோபு கூறியவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக, துன்மார்க்கர்கள் சிறிது காலம் செழித்தாலும், இறுதியில் தேவனுடைய நியாயத்தீர்ப்பைத் தவிர்க்க முடியாது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
*யோபு 20-ஆம் அதிகாரத்தின் மையக் கருத்து "துன்மார்க்கரின் தற்காலிக செழிப்பும், அவர்களின்* *நிச்சயமான அழிவும்" என்பதாகும். இந்த* அதிகாரத்தில் துன்மார்க்கரின் வளர்ச்சியையும், அவர்களின் முடிவையும் குறித்து வேதம் போதிக்கும் முக்கியமான சத்தியங்களை இப்போது சிந்திப்போம்.
1. *துன்மார்க்கரின் மகிழ்ச்சி தற்காலிகமானது* (20:4–11)
அவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்றாலும் அது நிரந்தரமல்ல. அவர்களுடைய மகிழ்ச்சி ஒரு கணநேரமே. இன்று உயரத்தில் இருப்பவர்கள், நாளை காணாமல் போகலாம். சோப்பார் கூறுவதுபோல், அவர்கள் "கனவைப்போல் மறைந்து போவார்கள்" (வசனம் 8). தேவனை விட்டு விலகி கிடைக்கும் எந்த வெற்றியும் நிலையானதல்ல.
2. *பாவத்தால் சேர்க்கப்பட்ட செல்வம் நிலைக்காது* (20:12–22)
பாவம் ஆரம்பத்தில் தேனைப்போல் இனிமையாகத் தோன்றலாம்; ஆனால் அதன் முடிவு விஷத்தைவிட கொடியதாக இருக்கும். அநியாயமாகச் சேர்த்த செல்வத்தை அவர்கள் அனுபவிக்க முடியாது. ஏழைகளை ஒடுக்கியும், பிறரை ஏமாற்றியும் சேர்த்த செல்வம் இறுதியில் அமைதியை அல்ல, அழிவையே உண்டாக்கும்.
3. *தேவனுடைய கோபத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் தப்பிக்க முடியாது (* 20:23–29)
அவர்கள் செழிப்பின் உச்சியில் இருக்கும்போதே தேவனுடைய கோபம் அவர்கள்மேல் வரும். மனிதர்களிடமிருந்து தப்பிக்கலாம்; ஆனால் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
*இந்த அதிகாரத்தின் சுருக்கமாக யோபு 20:29 இவ்வாறு* கூறுகிறது:
" *இதுவே துன்மார்க்கனுக்கு தேவனால் நியமிக்கப்பட்ட பங்கு* ; *தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்தரம்."*
இந்த வசனம், தேவனை நிராகரித்து வாழும் வாழ்க்கையின் இறுதி முடிவு எப்படிப்பட்டது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இந்த அதிகாரம் இன்றைய கிறிஸ்தவ உலகத்திற்கும் மிகப் பெரிய எச்சரிக்கையாக இருக்கிறது. பணத்திற்காக சத்தியத்தை விலைபேசுகிறவர்கள், உலக ஆதாயத்திற்காக இயேசுவை நிராகரிக்கிறவர்கள், பணம்தான் தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஒரே அடையாளம் என்று போதிக்கிறவர்கள், இந்த அதிகாரத்தின் வெளிச்சத்தில் தங்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இன்று கிறிஸ்தவ உலகத்தில் பணத்தால் உருவாகும் அலங்கோலங்கள் எண்ணிலடங்காதவை. "பண ஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராயிருக்கிறது" என்று 1 தீமோத்தேயு 6:10 எச்சரிக்கிறது.
சிலர், தேவனைச் சேவிப்பது செல்வந்தராகும் ஒரு வழி என்று கருதி கலப்படமான உபதேசங்களைப் போதிக்கிறார்கள் (1 தீமோத்தேயு 6:5). இவர்களைப் பற்றி பேதுரு, "பொருளாசையினாலே வஞ்சக வார்த்தைகளினால் உங்களை வியாபாரம் பண்ணுவார்கள்" என்று எச்சரிக்கிறார் (2 பேதுரு 2:3). யூதாவும் பாலேயாமின் வழியைப் பின்பற்றுபவர்களைப் பற்றி எச்சரிக்கிறார். உண்மையில், இவர்கள் நவீனகால பாலேயாம்களின் பாதையில் நடப்பவர்கள்.
எனவே, பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து, *வயிற்றை நிரப்புவதே ஊழியத்தின் நோக்கம் என்று கருதி வாழ்கிறவர்களுக்கும்* , *போதிக்கிறவர்களுக்கும், மற்றவர்களை வழிநடத்துகிறவர்களுக்கும்* *யோபு 20 வது அதிகாரம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது* .
இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்திருக்கும் இந்தக் குறுகிய வாழ்க்கை, பூமிக்குரிய செல்வத்தைச் சேர்ப்பதற்காக அல்ல; நித்திய பலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே. இந்த உலகப் பணத்திற்காக நாம் விலைபோனால், தேவன் நமக்காக வைத்திருக்கும் நித்திய ஆசீர்வாதங்களை இழந்து விடுவோம்.
ஜான் வெஸ்லி கூறிய இந்த வார்த்தைகள் எப்போதும் நினைவில் இருக்கட்டும்:
" *Money is an excellent servant, but a terrible master."*
" *பணம் ஒரு சிறந்த வேலைக்காரன்; ஆனால் மிகவும் கொடூரமான எஜமானன்* ."
நம்மை மீட்பதற்காக தம்மையே நமக்குக் கொடுத்த ஆண்டவரை விட்டுவிட்டு, பணம் என்னும் கொடூரமான எஜமானனுக்கு நம்மை அடிமையாக்கிக் கொள்வது எவ்வளவு பெரிய இழப்பு!
எனவே,
"போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயமாயிருக்கிறது." (1 தீமோத்தேயு 6:6)
பண ஆசையை வெறுப்போம். திருப்தியுள்ள மனதோடு தேவன் கொடுத்த வாழ்க்கையை வாழ்வோம். அப்பொழுது பூமியிலும் சமாதானத்தையும், பரலோகத்திலும் நித்திய பலனையும் பெற்றுக்கொள்வோம்.
கிறிஸ்துவுக்குள் சன்மார்க்கமாக வாழ்ந்து விட்டு துன்மார்க்கனாக மாறுவதை தவிர்ப்போம்.