பவுலும் *கொரிந்து சபையும்
பவுலும் *கொரிந்து சபையும்
பவுல் உருவாக்கிய சபைகளில் அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது கொரிந்து சபையே. அந்தச் சபையை ஆரம்பித்து நிலைநிறுத்துவதுவரை அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் ஏராளம்.
கொரிந்து ஒரு பெரிய வணிக நகரமாக இருந்தது. கடற்கரையை ஒட்டிய இந்த நகரம் செல்வச் செழிப்பில் வளர்ந்திருந்தாலும், அதே நேரத்தில் விபச்சாரம், வேசித்தனம், மதுபோதைகள் மற்றும் ஒழுக்கக்கேடுகள் நிறைந்த நகரமாகவும் அறியப்பட்டது. மேலும், *சரீரத்தைத் தாழ்வாகவும் ஆவியை உயர்வாகவும் கருதிய* சில கிரேக்க தத்துவ சிந்தனைகள் அந்நகர மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தின.
இதனால்தான் பவுல் கொரிந்தியர்களிடம் இவ்வாறு கேட்கிறார்:
“உங்கள் சரீரமானது, நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?”
— 1 கொரிந்தியர் 6:19
கொரிந்து நகரத்தில் அப்ரோடைட் (Aphrodite) தேவியின் கோயிலும் இருந்தது. அந்த நகரம் பாலியல் ஒழுக்கக்கேட்டிற்குப் பெயர்பெற்றதாகப் பழைய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதில் 1000க்கும் மேற்பட்ட “தேவதாசிகள்” (sacred prostitutes) மாலை நேரங்களில் விபசாரத்திற்காக வந்து செல்லும் நிலைமை இருந்தது
இப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய மிகக் கடினமான பொறுப்பை பவுல் ஏற்றுக்கொண்டார்.
இத்தகைய இருண்ட சூழ்நிலையிலும் தேவனுடைய சபையை நிறுவியது மிகப்பெரிய ஆவிக்குரிய கிரியையாகும். கொரிந்து நகரத்தைச் சந்தித்த தேவன், எந்த நகரத்தையும் சந்திக்க வல்லமையுள்ளவரே. பவுல் அந்த நகரத்தில் பதினெட்டு மாதங்கள் தங்கி ஊழியம் செய்து பலரை கிறிஸ்துவினிடத்தில் நடத்தினார்.
ஆனால் அவர் அங்கிருந்து சென்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சபை பல பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டது. பிரிவினைகள், ஒழுக்கக்கேடுகள், பெருமைகள், குழப்பங்கள் ஆகியவை சபையின் சாட்சியை பாதித்தன. பவுல் வளர்த்த, ஆதரித்த, இடைவிடாமல் ஜெபித்த அந்தச் சபையே, பின்னர் அவரது தோற்றம், பேச்சு, அப்போஸ்தல அதிகாரம், நேர்மை ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கியது.
*மற்ற எந்தச் சபையிலும் பவுல் இவ்வளவு மனமுடைந்து* *அவமானமுற்றதில்லை*
2 கொரிந்தியர் 10–13 அதிகாரங்களை வாசிக்கும் போது, பவுலின் உள்ளத்துயரம் மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் ஒரு அப்போஸ்தலராக மட்டுமல்ல, ஒரு உடைந்த இருதயமுள்ள ஆவிக்குரிய தந்தையாகவும் அங்கே காணப்படுகிறார்.
கொரிந்து சபையின் முக்கிய குழப்பங்கள்
1. பிரிவினைகள் நிறைந்த சபை.
*A divided church*
கிறிஸ்துவை மையமாக வைத்துப் பின்பற்றுவதற்குப் பதிலாக, மனிதத் தலைவர்களை மையமாக்கினர்.
“நான் பவுலைச் சேர்ந்தவன்”,
“நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்”,
“நான் கேபாவைச் சேர்ந்தவன்”,
“நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்”
என்று பல பிரிவுகள் உருவாயின.
2. ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்ட சபை
*Defiled church*
பவுல் எழுதும் போது:
“ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறான்; இது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறது”
— 1 கொரிந்தியர் 5:1
என்று கடுமையாகக் குறிப்பிடுகிறார்.
ஆச்சரியமாக, ஆவியின் வரங்களைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்ட சபை கொரிந்துவே. ஆனால் அதே சபை குழப்பங்களிலும் பாவங்களிலும் சிக்கியிருந்தது.
“ *The exercise of spiritual gifts does not necessarily prove spiritual maturity.”*
ஆவியின் வரங்கள் இருப்பது மட்டும் ஆவிக்குரிய முதிர்ச்சிக்கான சான்றல்ல.
கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய பாடங்கள்
நல்ல ஆவிக்குரிய தலைவர்கள் ஒரு சபையை ஆரம்பித்தாலும், அந்தச் சபை பாவம் அல்லது பிரிவினைகளிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும் என்று கூற முடியாது.
ஒரு சபை அதன் ஆரம்ப உபதேசங்களில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் உறுதி செய்ய முடியாது. (உதாரணம்: காலாத்திய சபை)
*ஒரு சபையின் எல்லா குறைகளுக்கும் அதன்* *ஸ்தாபகரையே காரணமாகக் கருதுவது தவறு.*
ஒரு தலைவர் வழிகாட்டலாம், போதிக்கலாம், முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சி ஒவ்வொருவரின் தனிப்பட்ட கீழ்ப்படிதலையும் பொறுப்பையும் சார்ந்ததே.
சபையில் களைகளும் பயிர்களும் ஒன்றாகவே காணப்படும்.
ஒரு சபையின் வெற்றிக்குப் போதகர் மட்டும் காரணம் என்று சொல்வதும், அதன் வீழ்ச்சிக்கும் அவர் ஒருவரே காரணம் என்று கூறுவதும் சரியான அணுகுமுறை அல்ல.
“ *Ministry is like a joint venture. All the members of the church — whether visible or invisible — are complementary, of equal value and dignity and status in God’s sight, but with different roles, responsibilities, and functions before God.”*
*தேவனுடைய பார்வையில், சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் மதிப்புமிக்கவர்களே. பொறுப்புகள்* *வேறுபட்டாலும், அனைவரும் தேவனுடைய கிரியையில் பங்காளிகளே.*
(Main inspirations: F.F. Bruce, William Barclay, Warren Wiersbe)