யோசேப்பின் எலும்புகள் சொல்லும் பாடம் என்ன?
மோசே இஸ்ரவேல் ஜனங்களோடு எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்ட அந்த நேரத்தில் யோசேப்பின் எலும்புகளையும் எடுத்து சென்றான் என்று பார்க்கிறோம் .
யாத் 13:19
யோசேப்பு மரிக்கும் பொழுது தன் சகோதரர்களிடம் தேவன் முற்பிதாக்களுக்கு அளித்த வாக்குத்தத்தின்படி அவர்களை கானான் தேசத்திற்கு நிச்சயமாக அழைத்துச் செல்வார். அப்படி அழைத்துச் செல்லும்போது தன்னுடைய எலும்புகளையும் கொண்டு செல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.ஆதி50:24-25
இதுதான் யோசேப்புனுடைய வாழ்கையில் விசுவாசத்தினுடைய சிறந்த பகுதி என்று எபிரேய நிருபத்தில் பார்க்கலாம் .எபி11:22
.
இது யோசேப்பின் விசுவாச வாழ்க்கையின் ஒரு சிறப்பான பகுதி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை .
ஆனால் அதைப்போல வேறொரு சிறந்த பகுதி என்னவென்றால் எகிப்து தேசத்தை விட்டு புறப்படுகின்ற அந்த நெருக்கடியான அந்த நேரத்திலும் கூட மோசே மறவாமல் யோசேப்பின் எலும்புகளை எடுத்துச் சென்ற அந்த காரியம் தான்.
மோசே அரண்மனையில் வளர்ந்ததாக இருந்தாலும் அவனை குறிப்பிட்ட காலம் வரை வளர்த்தது அவனுடைய தாய் .அவன் தன் தாயின் மூலமாக தன் இனத்தினுடைய வரலாற்றை அறிந்து கொண்டு தங்களுடைய முற்பிதாக்களுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தங்களை
புரிந்து கொண்டான்.
யோசேப்பு மறைத்து 400 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட தேவன் தங்களை சந்திப்பார் என்கிற விசுவாசம் அந்த யூத மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டதுதான் மிக சிறப்பான ஒரு காரியம்.
மிக நெருக்கடியான நேரத்திலும், அடிமைத்தனத்திலும் ,கஷ்டப்பட்ட நேரத்திலும் யோசேப்பு சொன்னது போல தங்களை தேவன் சந்திப்பார், தங்களுக்கு உதவி செய்வார் ,யோசேப்பின் எலும்புகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்கிற விசுவாசத்தோடு அந்த ஜனங்கள் காத்திருந்த அந்த காரியம் உண்மையிலேயே ஆச்சரியப்படத்தக்க காரியம்.
நாமும் கூட நம்முடைய அடுத்த தலைமுறைக்கு கர்த்தருடைய மகத்துவங்களை, நமக்கு செய்த அதிசயங்களை, கடத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
நமக்கு ஒப்புவிக்கப்பட்ட சிறந்த சத்தியங்களை நம்முடைய தலைமுறைக்கு கடத்த நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்.
அப்படிபட்ட ஒரு காரியத்தை நாம் செய்யத் தவறினால் அடுத்த தலைமுறை கிறிஸ்தவத்தை நாம் உருவாக்க முடியாது .
யூத மக்கள் அவ்வளவு நெருக்கத்திலும் அடிமைத்தனத்திலும் தங்கள் தலைமுறைக்கு அந்த விசுவாசத்தை கடத்தினார்கள். அதை மோசேயும் பற்றிக் கொண்டு தவறாமல் ,மறந்து விடாமல் யோசேப்பின் எலும்பை கானானுக்கு எடுத்துச் சென்றான்.
யோசேப்பின் சரீரம் புதைக்கப்படாமல் கல்லறைக்குள் வைக்கப்பட்டு 400 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது தேவனுடைய அதிசயம்.
யோசேப்பின் எலும்புகளை பாதுகாத்து தேவன் யோசேப்பின் விசுவாசத்தை கனம் பண்ணினார்.
சரியான சத்தியங்கள் போதிக்கப்படாத இந்த காலகட்டத்தில் நாமும் நாம் அறிந்த சத்தியங்களை, உயர்ந்த கருத்துக்களை, போதனைகளை நம்முடைய குழந்தைகளுக்கு போதித்து அவர்களை அடுத்த தலைமுறைக்கு வளர்க்க நாம் கடமைப்பட்டவர்களாக , இருக்கிறோம்.
இதுவே குடும்பம் என்கிற முறையில் பெற்றவர்கள் செய்கின்ற மிகப்பெரிய ஊழியம்
எசேக்கியல் சண்முகவேல்