எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 11. Expository Commentary on the Book of Esther.
*உங்கள் சிந்தனைக்கு* .
எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 11.
Expository Commentary on the Book of Esther.
இந்தப் பகுதியில் எஸ்தர் புத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் காணப்படும் சில முக்கியமான வார்த்தைகளைக் குறித்து சற்று விரிவாகத் தியானிப்போம்.
மொர்தெகாய் தன்னிடம் முழங்காற்படியிடாமலும், தன்னைக் கனப்படுத்தாமலும் இருப்பதைக் கண்ட ஆமான் மிகுந்த கோபமடைந்தான். ஆயினும், மொர்தெகாய் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்தபின், அவனை மட்டும் கொல்ல விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, அகாஸ்வேருவின் ராஜ்யம் முழுவதிலும் வாழ்ந்த மொர்தெகாயின் மக்களான யூதர்களையெல்லாம் அழிப்பதற்கே வழி தேடினான்.
“அகாஸ்வேரு அரசனின் ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தின் முதலாம் மாதமாகிய நிசான் மாதத்திலே, யூதர்களை அழிப்பதற்கான நாளையும் மாதத்தையும் தெரிவுசெய்வதற்கு ஆமான் முன்னிலையில் பூர் எனப்பட்ட சீட்டைப் போட்டார்கள். பன்னிரண்டாம் மாதமாகிய ஆதார் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது.”
(எஸ்தர் 3:6–7)
யூத நாட்காட்டியில் நிசான் முதல் மாதமும், ஆதார் பன்னிரண்டாம் மாதமும் ஆகும். பொதுவாக பெர்சியர்கள் எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்வதற்கு முன், அதற்கான நாளை அறிந்து கொள்ள சீட்டுப் போடுவது வழக்கமாக இருந்தது. அது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
*ஆனால் உலகத்தைப் படைத்த தேவன், அவர்களுடைய இந்த நம்பிக்கையின் நடுவிலும் தம்முடைய இறையாண்மையை வெளிப்படுத்தினார். சீட்டு போடப்பட்ட காலத்திலிருந்து அது ஆதார் மாதத்தில் விழுந்த கால இடைவெளி சுமார் பதினொரு* *மாதங்கள்* . ஆமான் உடனடியாக யூதர்களை அழிக்க விரும்பினான். ஆனால் அவனுடைய திட்டம் பதினொரு மாதங்கள் தள்ளிப் போனது.
இது ஆமானுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆனால் தேவனுடைய ஜனங்களுக்கு அது ஒரு கிருபையான காலமாக அமைந்தது. சீட்டு உடனடியாக நிசான் மாதத்திலோ அல்லது அதற்கடுத்த மாதத்திலோ விழுந்திருந்தால், ஆமான் தன்னுடைய திட்டத்தை உடனே நிறைவேற்றியிருப்பான். யூதர்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேவன் ஏற்படுத்திய இரட்சிப்பை அனுபவிக்கவும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருக்கும்.
ஆனால் கர்த்தர் அதை அனுமதிக்கவில்லை. இதன் மூலம், பிற மதத்தவர்களின் நம்பிக்கைகளையும் சூழ்நிலைகளையும் கூட தம்முடைய நோக்கத்திற்காக பயன்படுத்தி, தம்முடைய இறையாண்மையையும் செயல்பாட்டையும் தேவன் வெளிப்படுத்துகிறார் என்பதை அறிகிறோம். தேவனுடைய இறையாண்மை செயல்பட முடியாத இடமோ, அரசாங்கமோ, அதிகாரமோ இல்லை.
ஆமான் பயன்படுத்திய ஆயுதம்
எஸ்தர் 3:8–9-ல், யூத இனத்தை அழிப்பதற்காக ஆமான் பயன்படுத்திய முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால்:
“அவர்கள் அரசரின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை; அவர்களைச் சகித்துக்கொண்டிருப்பது அரசரின் நலனுக்கு உகந்ததல்ல.”
மேலும், அவர்களை அழிப்பதற்காக 10,000 தாலந்து வெள்ளியை அரச கருவூலத்தில் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினான்.
கிரேக்க வரலாற்றாசிரியரான Herodotus கூறுவதன்படி, அக்காலத்தில் பெர்சிய அரசின் ஆண்டு வருமானம் சுமார் 15,000 தாலந்து வெள்ளி மட்டுமே. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, யூதர்களை அழிப்பதற்காக ஆமான் தன்னுடைய பெரும் செல்வத்தைச் செலவிடத் தயாராக இருந்தான் என்பதை அறியலாம்.
அவன் முன்வைத்த குற்றச்சாட்டு — “யூதர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்; அரசின் சட்டங்களுக்கு கீழ்ப்படியாதவர்கள்” — என்பது உண்மையல்ல.
வேதாகமம், நாம் வாழும் நாட்டிற்காக ஜெபிக்கும்படியும், அதற்கு உண்மையுள்ள குடிமக்களாக இருக்கும்படியும் போதிக்கிறது. பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் இதை வலியுறுத்தியிருக்கிறார்.
கிறிஸ்தவர்கள் தாங்கள் வாழும் தேசத்திற்கு உண்மையுள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். அதைத்தான் வேதாகமமும் எதிர்பார்க்கிறது. *அதிகாரங்களுக்கு கீழ்ப்படிந்து, அவற்றை மதிக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களை நையாண்டி செய்வது, கேலி செய்வது, பரிகாசிப்பது ஆகியவை தேவன் ஏற்படுத்திய ஒழுங்கை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.*
நமது மதநம்பிக்கைக்கு எதிராக இல்லாத எல்லா அரசாங்க உத்தரவுகளுக்கும் கீழ்ப்படிவது நமது கடமையாகும்.
அரசன் பணத்தை வாங்கினானா?
எஸ்தர் 3:11-ஐ மேலோட்டமாக வாசிக்கும்போது, அரசன் அந்தப் பணத்தை வாங்காமல் ஆமானிடமே விட்டுவிட்டதாகத் தோன்றலாம். ஆனால் வேதாகம அறிஞர்கள் இதைப் பற்றி இரண்டு விதமான கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
1. முதல் கருத்து:
அரசன் அந்தப் பணத்தை வாங்காமல், “யூதர்களை அழிக்கும் காரியத்திற்காக இதைப் பயன்படுத்திக்கொள்” என்று ஆமானிடமே விட்டுவிட்டான்.
2. இரண்டாம் கருத்து:
இந்த வசனத்தை எஸ்தர் 7:4 உடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
“நானும் என் ஜனமும் அழிவுக்கும், கொலைக்கும், நாசத்திற்கும் விற்கப்பட்டிருக்கிறோம்” என்று எஸ்தர் கூறுகிறாள்.
இதன் அடிப்படையில், அரசன் அந்தப் பணத்தை ஏற்றுக்கொண்டு, அதையே யூதர்களை அழிக்கும் நடவடிக்கைக்காக ஆமானிடம் திருப்பிக் கொடுத்தான் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துகளில் எது சரியானதாக இருந்தாலும், இறுதியில் நடந்தது என்ன?
*யூதர்களை அழிப்பதற்காக சீட்டு போட்டு நாளைத் தேர்ந்தெடுத்த ஆமான், அந்த நாளை அடைவதற்கும் முன்பாகவே, சுமார் இரண்டு மாதங்களுக்குள் தூக்கிலிடப்பட்டான்.*
இதுவே வரலாறு.
நாம் கற்றுக்கொள்ளும் பாடம்
இன்றும் தேவனுடைய ஜனங்களுக்கு எதிராக பலர் திட்டங்கள் தீட்டலாம். சிலர் நமக்கு “மரண சாசனம்” எழுத முயற்சிக்கலாம். ஆனால் எஸ்தர் புத்தகம் நமக்குக் கற்பிக்கும் முக்கியமான உண்மை என்னவென்றால்:
மனிதர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு கெடு வைத்தாலும், தேவன் அவர்களுக்கே முன்னதாக கெடு வைத்து, தம்முடைய ஜனங்களைப் பாதுகாக்க வல்லவராக இருக்கிறார்.
அவருடைய இறையாண்மை எந்தச் சூழ்நிலையாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றி, தமது ஜனங்களை உரிய காலத்தில் காத்து நடத்துகிறார்.