எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்?
1 சாமுவேல் வேத பாடம் 7
எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களைப் பார்க்கிலும் நான் உனக்கு மேலானவன் அல்லவா”என்றா ன்.
1 சாமுவேல் 1:8
கணவன் மனைவியினிடையே உள்ள அன்பை, உறவை மிக அருமையாக விவரிக்கின்ற வேதப் பகுதிகளில் இதுவும் ஒன்று.
கணவன் மனைவி மீது காட்டக்கூடிய அன்பை விவரிக்கிற முதல் இடம், வேதத்தில் இந்த இடம் தான்.
தாயின் அன்பு சிறந்ததுதான் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு மனைவி மனைவியாகவும் அதே வேளையில் தாயாகவும் மாற முடியும்.
அதைப் போல
கணவன் என்பவன் ஏதோ மனைவிக்கு சரீர சுகத்தை கொடுப்பவனாகவோ அதன் மூலம் பிள்ளைகளை அவளுக்கு அளித்து அவளை சந்தோஷப்படுத்துகிற நபராகவோ அல்லது கடைசி வரை பாதுகாக்கின்ற நபராக மட்டும் காணப்படக் கூடாது.
மனைவி என்பவளை ஒரு தனி நபராக பிரித்துப் பார்க்கக் கூடாது. ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் தோன்றினபடியினால் அவனுடைய சரீரத்தின் ஒரு பகுதியாகவே அவளை நினைக்க வேண்டும்.
என்றைக்கு இறைவனின் சன்னதி முன்பாக வாக்குறுதி கொடுத்து கைப்பிடித்தார்களோ அந்த வாக்குறுதிகளை இருவரும் நிறைவேற்ற வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவர்கள்.
அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாக நிறைவேற்றும் பொழுது கடவுள், வேதத்தில் குடும்பத்திற்கு சொல்லப்படும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார்.
ஒரு கணவனோ ஒரு மனைவியோ திருமண ஒப்பந்தத்தை மீறும்பொழுது
அந்தக் குடும்பம் தேவனுடைய பாதுகாப்பை இழந்து விடுகிறது.
இந்தப் பகுதியில் எல்க்கானா சொல்லிய வார்த்தைகளை மனைவிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஒரு மனைவிக்கு, கடவுளுக்கு
அடுத்தபடியாக தனிப்பட்ட முறையில் உறவாக, முதலில் வருபவன் கணவன்தான்.
அதற்குப் பிறகுதான் அவளுடைய வாழ்க்கையில் அவளுக்கு கடவுள் கொடுக்கும் பிள்ளைகள்.
குடும்பத்தில் முதலில் கடவுள். இரண்டாவது குடும்பம். மூன்றாவது ஊழியம் என்கிற வரிசை எவ்வளவு முக்கியமோ
அதேபோல மனைவிகளை பொறுத்த அளவில் முதலில் கடவுள். அடுத்தது கணவன். அதற்குப் பிறகுதான் பிள்ளைகள். இந்த வரிசையை மாற்றக்கூடாது. இன்றைக்கு அநேக குடும்பங்களில் கடவுள் குழந்தைகள் இறுதியாக கணவன் என்ற வரிசை காணப்படுகின்றது.
அதைத்தான் எல்க்கானா இப்படி கூறுகிறார்.
"பத்து மகன்களைப் பார்க்கிலும் நான் உனக்கு மேலானவன் அல்லவா?”
ஆம் ஒரு மனைவிக்கு பத்து பிள்ளைகள் இருந்தாலும் அவர்களிலும் முதல் பிள்ளையாக அல்லது 10 பிள்ளைகளை விட மேலானவனாகத்தான் கணவனை மனைவி கருத வேண்டும்.
இதுதான் மனைவியைக் குறித்த தேவனின் சித்தம் என்று கருதுகிறேன்.
எல்க்கானா, அன்னாள் குழந்தை பெறவில்லை என்கிற காரணத்திற்காக அவளை புறக்கணிக்கவில்லை. அதற்கு மாறாக அவளை ஆறுதல்படுத்தி நான் உனக்கு குழந்தைளைவிட மேலானவன் என்று சொல்லி தைரியப் படுத்துகிறான்.
இதில் கணவனுடைய அன்பு விளங்குகிறது.
இன்னொரு வார்த்தையை சொல்ல வேண்டுமானால் நீ எனக்கு பிள்ளைகளைப் பெறாவிட்டாலும் பத்து பிள்ளைகளை விட நீ மேலானவள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த வார்த்தையை போல ஆறுதல் தரக்கூடிய வார்த்தை வேதத்தில் வேறு எங்கும் இல்லை.
அதற்காகவே தேவன் இதை எழுதி வைத்திருக்கிறார். குழந்தை இல்லாத தம்பதியர் ஒருவரை ஒருவர் குழந்தையாக நேசித்தால் குடும்பத்தில் வருத்தங்கள் ஏற்படாது.
ஒரு மனைவி தன் பிள்ளைகளை கணவனுக்கு அடுத்தபடியாக தான் வைக்க வேண்டும். இதுதான் மனைவியைக் குறித்து தேவனுடைய திட்டம்.
குடும்பத்தின் தலைவன் கணவனே.
கிறிஸ்தவ குடும்பங்களில் மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு கர்த்தர் வைத்திருக்கும் இடத்தை கொடுக்க வேண்டும். அந்த இடத்தை பிள்ளைகளுக்கு கொடுத்து விடக்கூடாது.
மனைவியின் வாழ்க்கையில் பிள்ளைகளுக்கு உரிய இடம் வேறு, கணவனுக்கு உரிய இடம் வேறு.
இவை இரண்டையும் சம அளவில் பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்காக கணவனை உதாசீனம் பண்ணுவதோ புறக்கணிப்பதோ அதுவும் வயதான காலங்களில் கணவனை விட பிள்ளைகளை மிகவும் அதிகமாக கனம் பண்ணி நேசிப்பது ஏற்றதல்ல.
வேதம் அனுமதித்த, அவரவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பது கணவனுக்கும் மனைவிக்கும் நல்லது. வயதான காலங்களில் இந்த புரிதல் மிகவும் அவசியம்.
இது கணவன் மனைவி பற்றிய வேதத்தின் அடிப்படையில் நான் புரிந்து கொண்ட காரியங்கள்.
எசேக்கியல் சண்முகவேல்