கிறிஸ்தவ உலகத்தில் உள்ளவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்
இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் உள்ளவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
முதல் வகை: கிறிஸ்தவ உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாமல் இருக்கிற ஒரு கூட்ட மக்கள்.
இரண்டாவது வகை: என்ன நடக்கிறது என்பதை பார்க்கக் கூடிய பார்வையாள
ராக மட்டுமே இருப்பவர்கள்.
மூன்றாவது வகை:
இந்தக் கூட்ட மக்கள் ஏதாவது ஒரு காரியத்தை ஆண்டவருக்காக நடப்பிக்கிற மக்களாக காணப்படுவார்கள்.
இன்றைய சபைகளில் குறிப்பாக விசுவாசிகளில் முதல் இரண்டு வகைகளை சேர்ந்தவர்கள்தான் 95 சதவீதம் காணப்படுகிறார்கள்.
ஒவ்வொரு விசுவாசியும் ஏதாவது ஒரு காரியத்தை ஆண்டவருக்காக நடப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று சும்மா இருப்பதற்காக விசுவாசிகளை ஆண்டவர் தெரிந்தெடுக்கவில்லை.
அவர்களுக்கு தெரிந்தது எதுவோ, கைக்கு கிடைத்தது எதுவோ, அறிந்தது எதுவோ, புரிந்தது எதுவோ, முடிந்தது எதுவோ அதை ஆண்டவருக்கு பயன்படுத்துகிற நபராக விசுவாசிகள் காணப்பட வேண்டும்.
விசுவாசிகள் சரீரமாகிய சபையில் ஒரு உறுப்பினர், அல்லது அங்கம் என்கிற சிந்தனையை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை உணர்த்துவது போதகருடைய முக்கிய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.
ஒன்று விசுவாசிகள் சபையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பார்கள்.
மற்றொரு பிரிவினர், எது நடந்தால் நமக்கு என்ன? நாம் உண்டு நமது வேலை உண்டு கோயிலுக்கு வந்தோமா காணிக்கை கொடுத்தோமா என்கிற அளவில் தம்முடைய ஆவிக்குரிய ஓட்டத்தை சுருக்கிக் கொள்வார்கள்.
இவர்களால் ஆண்டவருடைய ராஜ்ஜியத்திற்கு எந்த பயனும் கிடையாது. இப்படி இருப்பதற்கு காரணம் ஊழியம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கு மட்டுமே சொந்தம் என்கிற ஒரு சிந்தனை விசுவாசிகளின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
இந்த வேரை பிடுங்கி எறியாவிட்டால் எந்த சபையும்
ஆண்டவருக்கு முழுமையாக பயன்படுகிற சபை என்று சொல்ல முடியாது.
புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் எங்கும் காணப்படாத இப்படிப்பட்ட பிரிவினை சபையின் அதிகாரம் மட்டத்தில் மேலோங்கி நிற்கிறது.
ஒவ்வொரு விசுவாசியும் ஏதாவது ஒரு காரியத்தை ஆண்டவருக்காக நடப்பிக்கிற ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டும். ஆண்டவருக்கு முன்பாக நாம் கணக்கு ஒப்புவிக்கும் போது நாம் படித்த வேதம் தான் நம்மை நியாயம் தீர்க்கும்.
நமக்கு உதவியாக எந்த சபையோ, சபை போதகமோ ஊழியர்களோ உதவிக்கு வர முடியாது. இதை விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பரிசுத்த ஆவியானவர் ஒரு சில நபர்கள் மேல் இறங்குவார். அந்தப் பணி முடிந்ததும் அவர் அவர்களை விட்டு கடந்து போய் விடுவார். அந்தப் பணி முடிந்து விட்டது.
புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு விசுவாசிகள் மத்தியிலும் பரிசுத்த ஆவியானவர் கடைசி மட்டும் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியம் அவர்கள் மரிக்கும் வரை இருக்கிறது என்பதே.
அப்படி இல்லாவிட்டால் பரிசுத்த ஆவியானவர் ஊழியம் செய்கிற குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் ஊற்றப்படுவார். ஆனால் அப்படி அல்ல.
புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளும் இறுதிவரை ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு இணைந்து காணப்படுகிறார். நமக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியை விருதாவாக நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடாது.
இந்த சிந்தை விசுவாசிகள் உள்ளத்தில் காட்டுத்தீயைப்போல பற்றி எரிய வேண்டும்.
அப்பொழுது மட்டுமே சபைகளில் உண்மையான எழுப்புதல் ஏற்படும்.எசேக்கியேல் சண்முகவேல்