Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் . வேத பாடம் 1
உங்கள் சிந்தனைக்கு:

1 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 1
படிக்க முதலாவது அதிகாரம்.

வயதான தேவனுடைய பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வல்லமையை குறைத்து மதிப்பிடக் கூடாது.

தாவீதின் இறுதிக்காலம்.
அப்போது அவருடைய வயது 70 இருக்கும்.

தாவீதின் மூத்த புதல்வர்கள் அம்மோன், அப்சலோம் கொலை செய்யப்பட்டு விட்டபிறகு அடுத்தவன் அதோனியா தாவீதுக்கு பிறகு அரசாள நினைத்தான்.
தாவீதின் வயதை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களை வகுத்தான்.
தன் தகப்பனுடைய வயது மூப்பை மனதில் கொண்டு அவனுடைய ஆவிக்குரிய திறமையை, வல்லமையை, ஞானத்தை குறைத்து மதிப்பிட்டான்.

வயது சென்றாலும் தன் தகப்பன் தேவனால் முன் குறிக்கப்பட்டவன், பயன்படுத்தப்பட்டவன் என்கிற சிந்தையை மறந்து விட்டான்.

அதோனியா மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான்.

அவனுடைய தாயின் பெயர் ஆகீத் அவனுக்குத் தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது மனிதரையும் அவனுக்கு முன் செல்வதற்கு கொடுத்து அவனை அரசனாய் ஆக்குவதற்கு உற்சாகப்படுத்தினாள்.1:5
ஆரம்பத்தில் தாவீதும் இவனுடைய செயல்களை, திட்டங்களைத் தடுக்கவில்லை.

அது மாத்திரம் அல்ல அவனுக்கு உதவியாகத் தாவீதினுடைய தளபதி யோவாபும், ஆசாரியன் அபியத்தாரும் கூட இருந்தனர்.
ஆனால் ஆசாரியனான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சீமேயியும், ரேயியும் தாவீதின் விசேஷ காவலனும் அதோனியாவுடன் சேரவில்லை.
1 இராஜாக்கள் 1:8

மேலும்‌தேவனுடைய சித்தம் தாவீதுக்கு பிறகு சாலமோன் அரசாள வேண்டும் என்பதே.

அதோனியா தன்னையே அரசனாக அறிவித்து ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான்.
நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த நாத்தான், சாலமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், அதோனியா தாவீதுக்குத் தெரியாமலேயே அரசனாகத் தன்னை அறிவித்த காரியத்தைத் தெரிவித்தான்.
1 இராஜாக்கள் 1:11

தனது மகன் சாலமோன்‌தான் தாவீதுக்கு பிறகு அரசன் ஆவான் என்று தாவீது தனக்கு கொடுத்த வாக்குறுதியைத் தாவீதுக்கு நினைவுருத்தும்படி‌ அவளைத் தாவீதிடம் அனுப்பினான்.
அவளும் அதை வலியுறுத்திக் கேட்கும் சமயத்தில் நாத்தானும்
தாவீதிடம் சாலமோனை அரசனாக வலியுறுத்தினான்.
பிறகு தாவீது சாலமோனை அரசனாக்க ஆசாரியனான சாதோக்கை அழைத்து
சாலமோனை அபிஷேகம் பண்ண கட்டளையிட்டான்.
சாலமோன் அரசன் ஆக்கப்பட்டான்.
மக்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்தார்கள்.
மிக விரைவில் காரியம் மாறுதலாய் முடிந்தது.
தாவீது துரிதமாக நடவடிக்கை எடுத்துத் தன் ஆளுமையை வெளிப்படுத்தினான்.

இதை அதோனியா எதிர்பார்க்கவில்லை.
இதைக் கேள்விப்பட்டதும் அதோனியா சிதறி ஓடிவிட்டான்.
வயதான காலத்திலும் 70 வயது ஆனபோதும் தன்னுடைய அதிகாரத்தைத் தாவீது நிலை நிறுத்தினான்.

தாவீது தேவனுடைய திட்டத்தைச் சாலமோனை அரசனாக்கினதன் மூலம் நிறைவேற்றினான்‌.

நாமும் பல நேரங்களில் வயதான தேவனுடைய பிள்ளைகளுடைய ஆவிக்குரிய திறமைகளை, அவர்கள் தேவனோடு இருக்கின்ற உறவைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை அற்பமாக எண்ணிவிடுகிறோம்.
அவர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை
முக்கியமான ஆலோசனைகளில் அவர்களுக்குரிய மதிப்பு அளிப்பதில்லை.
அவர்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை. இது தேவனுடைய பார்வையில் சரியில்லை.

என்னதான் அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருந்தாலும்
வயதான தேவனுடைய பிள்ளைகளுடைய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டுப் பின்பற்றி நடக்கிற விசுவாசிகள் பாக்கியவான்கள்.

வயதான விசுவாசிகள் தேவனோடு வைத்திருக்கின்ற அந்த ஐக்கியத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாவீதின் வயது, அவன் சாதித்த வெற்றிகள், தேவனால் பயன்படுத்தப்பட்ட காரியங்கள், தேவனிடம் அவனுக்குள்ள உறவு இவற்றை அலட்சியம் செய்து அதோனியா எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
தன் விருப்பத்தைத் தாவீதிடம் சொல்லி ஆலோசனை கேட்டிருக்கலாம்.
இறுதியில் அவன் செய்த இன்னொரு சதி திட்டத்தால் சாலமோன் கட்டளைப்படி கொலை செய்யப்பட்டான்.2:13-26

வயது முதிர்ந்த ஆவிக்குரிய விசுவாசிகளை யாரும் அற்பமாக எண்ணக் கூடாது. இதுவே நாம் கற்றுக் கொள்ளும் ஆவிக்குரிய பாடம்.