Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 4
உங்கள் சிந்தனைக்கு:

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 4

சாலமோனுக்கு தாவீது கூறிய‌ ஆலோசனையின் சிறப்பு அம்சம்.

தாவீது தான் மரணமடைவதற்கு முன்பாகத் தன் மகன் சாலமோனுக்கு கூறிய ஆலோசனைகள் இந்தப் புத்தகத்தின் இரண்டாவது அதிகாரத்தில் 1-9 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முதல் ஆலோசனை அவன் திடமனதாக இருக்க வேண்டும்.

அடுத்தது அவன் எல்லா காரியத்திலும்புத்தி மானாக இருக்க வேண்டும்.
சாலமோன் தாவீதை போல் போரை நடத்தியவன் அல்ல

சாலமோன் தாவீதை போலப் போர்க்களத்தை பார்த்தவனும் அல்ல.

நிர்வாக அமைப்பைத் தெரிந்தவனும் அல்ல.

இளம் வயது முதல் போராட்ட வாழ்க்கையை நடத்தியவனும் அல்ல.

தகப்பன் நிழலிலே வாழ்ந்தவன்.
முதல் முதலாக மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய பொறுப்பு மட்டுமல்ல தேவனுக்கு முதல் முதலாக ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்கிற மிகப் பெரிய பொறுப்பும் அவனுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றிலும் தகுதி பெற்ற தாவீதை தேவனுடையஆலயத்தை கட்ட வேண்டாம் என்று தேவன் தடுத்து விட்டார். தேவனுடைய ஆலயத்தைக் கட்டக்கூடிய மிகப்பெரிய பொறுப்பைப் பெற்ற சாலமனுக்கு தாவீது கூறிய இந்த ஆலோசனைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம்.

இன்றைக்கு வாலிபர்களுக்கு நாம் கூறும் ஆலோசனைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் அதில் சில குறைபாடுகளை நாம் பார்க்கலாம்.
பொதுவாக வாலிபர்களுக்குக் கூறும் அறிவுரைகள் வேதத்தைப் படிக்க வேண்டும், ஆராதிக்க வேண்டும், ஊழியம் செய்ய வேண்டும் என்ற மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில் இருக்கும்.

இவைகள் முக்கியம்தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் அது போதாது என்பதை தாவீது சாலமனுக்கு கூறிய அறிவுரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இளைஞர்களுக்கு நாம் வலியுறுத்திக் கூற வேண்டிய இரண்டு ஆலோசனைகள்.
ஒன்று அவர்கள் மன தைரியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அடுத்தது அவர்கள் ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஆவிக்குரிய விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இந்த அறிவுரைகள் வாலிபர்களுக்கு மிகவும் அவசியம்.

இன்றைய வாலிபர்கள் புதிதாக மனம் திரும்பி ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள்.

அந்த வாலிபர்கள் ஆவிக்குரிய போராட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்.
‌ சாத்தானுடைய சதிகளை, ஆவிக்குரிய சுழல்களை, சுனாமிகளை, கண்ணிகளை, புதைகுழிகளை அவர்களால் நிதானிக்க முடியாது.
எதையும் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக் கூடியவர்கள். மேடையில் பேசுகின்ற பிரசிங்கிமார்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பவர்கள். சபை மேய்பர்களை கடவுளைப் போல் நினைப்பவர்கள்.
ஆவிக்குரிய உறவுகளை‌ உண்மையாக நம்புபவர்கள்.
இவர்கள் சாத்தானை நேரடியாக எதிர்க்க ஆவிக்குரிய தைரியம் கொண்டவர்கள்.
ஆனால்
சாத்தான் எப்பொழுதும் பட்சிக்கிற சிங்கம்போல் வரமாட்டான்.
சில நேரங்களில் வஞ்சிக்கும் சர்ப்பத்தை போல் வருவான்.
ஏமாற்றும் சர்ப்பத்தையும் இளைஞர்களால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
அதுவும் ஆண்டவருக்காக வைராக்கியமாக இருக்கும் வாலிபர்களை அவன் வீழ்த்துவதற்கு தந்திரங்களைத் தான் பயன்படுத்துவான்.
திருமண காரியங்களில் ஆவிக்குரிய உறவுகளில் தலைவர்களோடு ஏற்படக்கூடிய நட்புகளில் சபை உறவுகளில் பலவித ஆவிக்குறிய மறைமுக வலைகளை, சுழல்களை, சுனாமிகளை உருவாக்குவான்.
‌ இதை அடையாளம் கண்டு கொண்டு வாலிபர்கள் எல்லா காரியங்களிலும் ஞானம் உள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் எடுக்கும் தீர்மானங்களில் கர்த்தருடைய சித்தம் வெளிப்பட வேண்டும். தேவனுடைய நோக்கம் நிறைவேற வேண்டும். இதைப் பற்றி வாலிபர்களுக்கு நாம் போதிக்க வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் தாங்கள் எடுக்கும் தவறான தீர்மானங்கள், முடிவுகள், சரிகட்ட முடியாத ஆவிக்குரிய வீழ்ச்சிகளை அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தி விடும்.
வாலிப வாழ்க்கை மகிழ்ச்சியான தைரியமான வாழ்க்கை. ஆனால் அதில் பல்வேறு சாத்தானுடைய சதி திட்டங்களும் அடங்கியிருக்கும். இதை அறிந்து கொண்டு ஒவ்வொரு வாலிபனும் எந்தக் காரியத்திலும் புத்திமானாக நடக்க அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆவிக்குரிய தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு காரியத்தைத்தான் தாவீது சாலமனுக்கு முதல் அறிவுரையாகச் சொன்னான் என்பது இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே வாலிபர்களுக்கு நாம் எப்படி ஞானமாக ஆவிக்குரிய போராட்டங்களைக் கையாள வேண்டும் என்கிற அடிப்படை சத்தியங்களை சொல்லிக் கொடுத்தால் பின்னாட்களில் அவர்கள்‌ தங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
எதையோ தவற விட்டு விட்டோம் இழந்து விட்டோம் என்று வருத்தப்பட மாட்டார்கள்.