1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 8
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 8
வேதத்தில் தாவீதை போல ஆலய கட்டுமான பணிகளுக்குச் செல்வத்தை வாரி இறைத்தவன் வேறு எவரையும் பார்க்க முடியாது.
கூடாரத்தில் ஆராதித்த தேவனை நிலையான கட்டடத்துக்குள் வைத்துத் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று அவனுடைய வாழ்நாள் ஆசையாக இருந்தது. அதை வேதத்தில் பல்வேறு இடங்களில் நாம் பார்க்கலாம்
அவன் தன் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை என்றும் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை என்றும் தான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
தன் கண்களுக்கு நித்திரையையும், இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று
கர்த்தருக்கு ஆணையிட்டு பொருத்தனைபண்ணினான்.
(சங்கீதம் 132:3-5)
கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், தன் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே விரும்பினான் (சங்கீதம் 27:4).
அதை எதிர்நோக்கி தான் போர்க்களத்தில் அடைந்த பொருட்களில் பெரும் பகுதியை ஆலயப் பணிகளுக்கெ ன்று ஒதுக்கினான்.
ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தான்
1 நாளாகமம் 22:14
இவைகள் 3750டன் எடையுள்ள தங்கத்திற்கும், 37500 தன் எடையுள்ள வெள்ளிக்கும் சமம் என்று வியர்ஸ்பி என்கிற வேத பண்டிதர் கூறுகிறார். இதைத் தவிர ஆலயப் பணிகளுக்கு அவன் சேர்த்து வைத்ததை 1 நாளா29:1-5ல் நாம் சற்று விவரமாகப் பார்க்கலாம்.
இது தவிர தன்னுடைய சொந்த கருவூலத்திலிருந்தும் அதிகமாகக் கொடுத்தான். ஆக மொத்தம் அவன் 4050 டன் எடையுள்ள தங்கத்தையும் 38000 டன் எடையுள்ள வெள்ளியையும் ஆலயப் பணிகளுக்காகச் சேர்த்து வைத்தான்.
அப்பப்பா எவ்வளவு பிரம்மாண்டமான காணிக்கை பாருங்கள்.
தாவீதை போல இவ்வளவு அதிகமாகத் தேவனுக்கு கொடுத்தவர்கள் வேதத்தில் இதுவரை யாரும் சொல்லப்படவில்லை. தேவனுக்கு ஆலயம் கட்ட வேண்டும் அதிலே ஆராதிக்க வேண்டும் என்கிற ஆசை எவ்வளவு உச்ச நிலையில் இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆம் தாவீதைப் போல் கடவுளுக்குக் கொடுத்தவர் எவரும் கிடையாது. அது பழைய ஏற்பாடு.
ஆனால் அதைவிட மேன்மையான ஒரு அனுபவத்தை மறுபடியும் பிறந்த நமக்குத் தேவன் கிருபையாகக் கொடுத்திருக்கிறார்.
ஆம் நம்முடைய சரீரத்தையே அவர் ஆலயமாகத் தங்கி நம்மில் வாசம் செய்கிறார். கடவுள் நம்மில் தங்கி வாசம் செய்கிறார் என்கிற சிந்தனயை கருத்தை ஆவிக்குரிய சத்தியத்தை நாம் எந்த அளவுக்கு அதிகமாக உணர்கிறோமோ அந்த அளவுக்கு நாம் தேவனுடைய சாயலாகப் பரிசுத்த வாழ்க்கையில் நாம் உச்சநிலையை அடைய முடியும்
எந்த ஒரு காசு பணத்தையும் செலவழிக்காமல் இலவசமாகத் தேவன் நமக்குக் கொடுத்த இந்த விலையேறப் பெற்ற ஆசிர்வாதத்தை நாம் எவ்வளவு அலட்சியமாகக் கருதுகிறோம் என்பது இன்றய கிறிஸ்தவ உலகத்தைப் பார்த்தால் தெரியும்.
பரிசுத்தம் இல்லாமல் தேவனை ஒருக்காலும் ஒருவனும் தரிசிக்க முடியாது. வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல உள்ளான மனதிலும் நாம் பரிசுத்த வாழ்க்கையை எப்படி நிலைநிறுத்துகிறோம் என்பதை தேவன் மட்டுமே அறிந்திருக்கிறார்.
அன்றைக்கு தாவீது தன்னுடையதை எல்லாம் இழந்து தேவனுக்கு ஆலயம் கட்ட முற்பட்டான்.
இன்று நாம் நம்மை அர்ப்பணித்து தேவன் நமக்குள் இருக்கிற அந்த உண்மையை ஒவ்வொரு நாளும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேவனை தேடி நாம் எங்கும் ஓடி அலைய வேண்டாம் அவர் நம்மைத் தேடி வந்து நமக்குள்ளே இருக்கிறார். எவ்வளவு மகிமையான தேவன். இந்தத் தேவனை தன்னுடைய சொந்த கடவுளாகப் பெற்ற மக்கள் பாக்கியவான்கள்.
என்பது இன்றைக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆலயமாக இருக்கிறது.
இந்த ஆலயத்திற்காகப் பக்தி விருத்திக்காக முன்னேற்றத்திற்காக நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோம் கொடுக்கிறோம் அர்ப்பணிக்கிறோம் நம்மை இழக்கிறோம் என்பதையும் தேவன் பார்க்கிறார். தேவனுடைய பணிக்கு ஓய்வு என்பதே இல்லை. நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தேவனுடைய ஆலயக் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்க தேவன் விரும்புகிறார். இந்த இரண்டு சத்தியங்களையும் சம நிலையில் நாம் பார்க்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டில் ஒவ்வொருவருக்கும் தாவீதைப் போல ஆலயத்தைப் பற்றிய ஒரு புரிதல் நமக்குத் தேவை