வேதம் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை பற்றி உள்ள ஒரு புரிதல் எல்லா விசுவாசிகளுக்கும் அவசியம்
உங்கள் சிந்தனைக்கு:
வேதம் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை பற்றி உள்ள ஒரு புரிதல் எல்லா விசுவாசிகளுக்கும் அவசியம்.
சாலமோன் அரசன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்ல்கள் ஆயிரத்து ஐந்து.
1 இராஜாக்கள் 4:32
ஆனால் அந்த 3000 நீதிமொழிகளில் சில நூறுகள்தான் வேத புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது
சங்கீதங்கள் புத்தகத்தில் இரண்டு சங்கீதங்கள் மட்டும் சாலமோன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது (72,127)
வேத புத்தகத்தில் சாலமனை போல் கடவுளிடமிருந்து ஞானத்தை அறிவைப் பெற்றவர் எவரும் கிடையாது.
நிர்வாகத்தை நடத்துவதற்கு ஏற்ற ஞானத்தையும், உலக ஞானத்தையும் அளவு இல்லாமல் தேவன் அவனுக்குக் கொடுத்தார்.
அதன் விளைவாக அவன் எழுதிய நீதிமொழிகள், பாடல்கள் அனேகம்.
ஆனாலும் அவைகள் எல்லாம் வேத புத்தகத்தில் இடம் பெறவில்லை.
அவைகள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
அதைத் தேவன் அனுமதித்தார். எவ்வளவு ஞானத்தை தேவன் அவனுக்குக் கொடுத்திருந்தாலும் எவ்வளவு சிறந்த சங்கீதங்களை, நீதி மொழிகளை எழுதி இருந்தாலும் அவைகள் அக்கால ஜனங்களுக்குப் பயனுள்ளவைகளாக இருந்தாலும் கடவுள் எல்லாவற்றையும் தேவனுடைய வார்த்தைகளாக அங்கீகரிக்க அனுமதிக்கவில்லை.
எவைகள் எக்காலத்திற்கும் தேவனுடைய வார்த்தைகளாகப் பொருந்துமோ அவைகளை மட்டுமே கடவுள் கால வெள்ளத்தில் நிலை நிற்கச் செய்தார்.
இதில் தேவனுடைய அனாதி ஞானம் வெளிப்படுகிறது.
புதிய ஏற்பாடு காலத்திலும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் பேதுரு, பவுல், யோவான் ,யாக்கோபு பெயர்களில் சபைகளில் படிக்கப்பட்டு வாசிக்கப்பட்டு காணப்பட்டாலும் இவைகள் எல்லாம் திருச்சபை தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆவியானவரால் அருளப்பட்ட வார்த்தைகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவற்றைத் தீர்மானிக்க ஏறக்குறைய 300 ஆண்டுகள் சபைத் தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள். விவாதித்து விவாதித்து தியானித்து தியானித்து ஜெபித்து ஜெபித்து இவைகள் தான் தேவனுடைய வார்த்தைகள் என்று சபைத் தலைவர்கள் கிபி 393ல் தான் 27 புத்தகங்களைக் கடவுளால் அருளப்பட்ட வார்த்தைகள் என்று முடிவு செய்தார்கள்.
எவைகள் தேவனுடைய வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற அறிவு சபை தலைவர்களுக்கும் விசுவாசிகளுக்கும் கட்டாயம் அவசியம்.
இதை ஒரு இறையியல் பாடமாகக் கருதக் கூடாது.
தவறான உபதேசங்களை சபைகள் நிராகரிப்பதற்கு இந்தப் புரிதல் மிகவும் அவசியம்.
தள்ளுபடி ஆகமங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை பற்றி உள்ள புரிதல் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆதி திருச்சபை மக்கள் ஏன் புதிய ஏற்பாட்டில் இந்த 27 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்தார்கள் என்கிற சத்தியம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த அடிப்படை அறிவை சபைத் தலைவர்கள் போதகர்கள் தங்கள் விசுவாசிகளுக்குப் போதித்தால் மிகவும் நலம். அப்பொழுதுதான் விசுவாசிகளுக்கும் இந்தக் கடைசி காலங்களில் இந்த உபதேசங்களை நிராகரிக்க வேண்டும் என்கிற தெளிவு ஏற்படும்.
சபைத் தலைவர்கள் இதனைப் போதிக்க தவறும்பொழுது நூதனமான உபதேசங்கள் எவைகள் என்று விசுவாசிகள் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். வஞ்சகத்தில் விழுந்து விடுகிறார்கள், திசை மாறிப் போய்விடுகிறார்கள் அழைப்பை இழந்து விடுகிறார்கள்
The knowledge of the canon of the Scripture is a must for every believer.