Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 11
உங்கள் சிந்தனைக்கு:

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 11

சாலமோன் அரசன் கடவுளுடைய திட்டத்தின் படியும் தாவீதின் விருப்பத்தின்படியும் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவிலான ஒரு ஆலயத்தைத் தேவனுக்காகக் கட்டினான்.
அந்த ஆலயம் கட்டி முடித்துப் பதினோரு மாதங்கள் கழித்து தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள தளவாடங்களையும் கொண்டு வந்து அந்த ஆலயத்தில் நிலை நிறுத்தினான்.

சாலமோன் கட்டின ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியில்
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
(I இராஜாக்கள் 8:9)

ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
(எபிரெயர் 9:4,
யாத்16:33,எண்ணா17:10)

ஏலி‌ பிரதான ஆசாரியனாக இருந்த காலத்தில் பெலிஸ்தியரோடு ஏற்பட்ட போரில் உடன்படிக்கை பெட்டி எதிரிகளால் கைப்பற்றப்பட்டது.
பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியுமாக அது தாவீதின் நகரத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஆரோனுடைய தளிர்த்த கோலும் மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் அல்லது காணாமல் போய் இருக்கலாம்.
ஆனால் தேவனுடைய வார்த்தைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் பாதுகாக்கப்பட்டது.

இதை ஒரு சாதாரண நிகழ்வாக நாம் பார்க்கக் கூடாது.
தேவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு நிகழ்வும் நடக்க முடியாது. தேவனுடைய வார்த்தைகள் பொறிக்கப்பட்ட
கற்பலகைகளை தேவன் பாதுகாக்க முடியுமானால்
ஆரோனுடைய துளிர்த்த கோலையும், மன்னா வைக்கப்பட்ட
பொற்பாத்திரத்தையும் அவரால் பாதுகாத்திருக்க முடியும்.
ஆனால் புதிய தேவாலயத்தில் அவைகள் வைக்கப்பட அவசியமில்லையெனக் கடவுள் கருதி இருக்கலாம். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திர வாழ்க்கையை கடந்து ஒரு புதிய பரிமாணத்திற்குள் வந்து விட்டார்கள். அவர்களுக்கென்று ஒரு ஒரு அரசையும் மன்னனையும் ஏற்படுத்தி விட்டார்கள்.
கூடாரத்தில் தங்கின தேவ சமூகம் இப்பொழுது ஆலயத்திற்கு வந்து விட்டது.


வனாந்தர வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்த அந்தப் பொருள்கள்‌ இந்தப் புதிய மாறுபட்ட அமைப்பிற்கு தேவை இல்லை என்று கர்த்தர் கருதி இருக்கலாம்.

இனி அவர்களுக்கு வேண்டியது ஆண்டவருடைய வார்த்தைகள் மட்டுமே. அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் நமக்குத் தேவை வேத வாக்கியங்கள்தான் என்பதற்கு அடையாளமாகக் கற்பனைகள் தேவனுடைய ஆலயத்தில் வைக்கப்பட்டது.

இதன் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.

சபை பாரம்பரியங்கள், ஒழுங்குகள், பண்டிகை, காலங்கள், நேரங்கள் அவைகள் உருவாக்கப்பட்ட காலங்களுக்குத் தேவையாக இருந்திருக்கலாம்,
பயனுள்ளவைகளாக இருந்திருக்கலாம்.
ஆனால் காலங்களும் நேரங்களும் சூழ்நிலைகளும் மாறுகின்றபொழுது அதே பாரம்பரியங்களை, பண்டிகைகளைச் சபை ஒழுங்குகளை நாம் பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

நாம் கடைபிடிக்க வேண்டியது வேத வசனத்தை மட்டும் தான்
அவைகள் போதிக்கின்ற காரியங்கள்தான்.
பாரம்பரியங்களும் சடங்குகளும் வசனத்தில் போதிக்கப்படும், வலியுறுத்தப்படும் சத்தியங்களுக்கு இணையானவைகள் அல்ல. அவைகளை கடந்து நாம் செல்ல வேண்டும்.
சடங்குகள், பண்டிகைகள் நம்மைச் சிறை படுத்தக் கூடாது.
எவ்வளவு உயர்ந்த நோக்கத்திற்காக அவைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவைகள் வசனங்கள் போதிக்கின்ற உபதேசங்களுக்கு இணையானவைகள் அல்ல.
சாலமோன் தேவாலயத்தில் தேவன் பாதுகாத்த கர்த்தருடைய வார்த்தைகள் இன்றைக்கும் சபைகளில் உயர்த்தப்பட வேண்டும். பாரம்பரியங்கள் அல்ல.

கடவுள் தான் ஏற்படுத்திய ஒழுங்கு முறைகளையே காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும்பொழுது மனிதர்களுடைய பாரம்பரியங்கள், ஒழுங்குகள் எம்மாத்திரம்? இவைகளை சபை சிந்திக்க வேண்டும்.

மனிதர்கள் ஏற்படுத்திய பாரம்பரியங்களை, சடங்குகளை, வல்லமையுள்ள ஜீவனுள்ள வசனத்திற்கு கீழாக வைக்கும்பொழுது தேவன் அந்தச் சபைகளை விட்டுக் கடந்து போய் விடுவார்.
சாலமன் கட்டிடன தேவாலயம் பாபிலோனியர்களால் தகர்க்கப்பட்டபோது அந்த உடன்படிக்கை பெட்டியும் காணாமல் போய்விட்டது. மறுபடியுமாகப் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் உடன்படிக்கைப் பெட்டி இல்லாத ஆலயமாகத்தான் அந்த ஆலயம் காணப்பட்டது.
இதுவும் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய வசனங்களுக்கு எவ்வளவு விலகி இருந்தார்கள் என்பது ஒரு அடையாளம்.
இன்று நமது வீடுகளில் வேதம் ஒரு அலங்கார பொருளாகக் காட்சியளிக்கின்றன.
அல்லது ஞாயிற்றுக்கிழமை தோறும் எடுத்துச் செல்லுகின்ற ஒரு பொருளாகக் காணப்படுகின்றது.
இன்னும் சிலருக்கு ஏதோ கடமைக்காகப் பாடத்தைப் படிக்கின்ற மாணவன் கையில் உள்ள புத்தகத்தைப் போல் இருக்கிறது.
இன்றைய கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் மகத்துவங்களை பற்றிய ஒரு புரிதல் காலத்தின் கட்டாயம்.