Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 12

"கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்."
(I இராஜாக்கள் 8:21)

The art of the covenant had now a settled abode.

இந்தத் தேவனுடைய பெட்டி இருக்கும் இடம்தான் மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

புதிய ஏற்பாட்டைப் பொறுத்த அளவில் நாம் கூடுகின்ற திருச்சபையும் தேவனுடைய ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது.
1கொரி3:16

விசுவாசிகளாகிய நாமும் கூடத் தேவனுடைய ஆலயமாகக் கருதப்படுகிறோம்.
2 கொரி 6:16

இவைகள் இரண்டிலும் மையமாக இருக்க வேண்டியது தேவனுடைய வார்த்தைகளே.

எந்த ஒரு திருச்சபை தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகத் தியானித்து, ஆராய்ந்து வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து,  தேவனுடைய வார்த்தைகளைச் சிங்காசனத்தில் வைத்திருக்கிறதோ அந்தச் சபை கர்த்தருடைய பார்வையில் ஒரு மகிமையான சபையாகக் கருதப்படும்.

எந்தச் சபை ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேதப் பாட வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசுவாசிகளை வரவழைத்து அவர்களுக்கு வசனத்தைப் போதிக்கின்றதோ நிச்சயமாக அந்தச் சபை அடுத்த தலைமுறையைத் தாண்டிச் செல்லும்.
அப்படி இல்லாவிட்டால் வெறும் கட்டடங்கள் தான் காலத்தைக் கடந்து செல்லும்.

அப்.20:7 ல் சொல்லப்பட்ட நிகழ்வுகள் இன்றைக்கு சபைகளில் நடக்கின்றதா?

(வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பிட்கும்படி ஒன்று கூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததினாலே, நடு இரவுவரை பேசிக்கொண்டேயிருந்தான்.
(அப்போஸ்தலர் 20:7)


முழு இரவு ஜெபம் என்று பேசுகிறோம்.ஆனால்
முழு இரவு வேத பாடம் அல்லது வேத ஆராய்ச்சி அல்லது பிரசங்கம் என்று இன்றைக்கு சபைகளில் வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து   வேத போதனைகள்‌ நடைபெறுகிறதா?

புதிய ஏற்பாட்டின் ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது என்பது இன்றைக்கு எத்தனை விசுவாசிகளுக்குத் தெரியும்?

வேத ஆராய்ச்சி தியானம் என்பது மிகவும் மகிழ்ச்சியான காரியம்.
தேவனை மணிக்கணக்கில் ஆராதிக்க கூடுமானால் தேவனுடைய வேதத்தையும் அதைவிட மணிக்கணக்கில் தியானம் செய்ய நம்மால் முடியும். 
இப்படி சபைகளில் காரியங்கள் நிகழும்போது தான் அந்தச் சபையில் வேதம் தன்னுடைய இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல் விசுவாசியும் தங்களுடைய வாழ்க்கையில் ஆராதனையைப் போல வேத ஆராய்ச்சியையும் மகிழ்ச்சியாகச் செய்யும்பொழுது அவன் ஒருக்காலும் இடறமாட்டான். அனேக மக்களுக்கு ஆசீர்வாதமாகக் காணப்படுவான்.
தன் இதயத்திலே வேதத்தை வைத்துத் தியானிக்க கூடிய விசுவாசிகளை இன்றைக்கு பார்ப்பது அரிதாக இருக்கிறது.
இன்றைக்கு வேத தியானம், வேத ஆராய்ச்சி போன்ற சொற்கள் விசுவாசிகளுக்கு ஒரு கசப்பான மருந்தாக இருக்கிறது.
எத்தனை விசுவாசிகள் தங்கள் போதகர்களை வேத பாடம் நடத்த சொல்லி நிர்பந்திக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

எப்படி சாலொமோன்  கட்டின ஆலயத்தில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி இருந்த இடம் தேவனுடைய சமூகம் இருந்த இடமாகக் கருதப்பட்டதோ அதுபோல் தேவனுடைய வசனத்தைத் தன் இருதயத்தில் வைத்து அதன்படி  வாழ்கிறவன் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்பவனாகக் கருதப்படுவான்.
போதகர்கள் அப்படி நடத்த இயலாவிட்டால் அனுபவம் வாய்ந்த  நன்கு கற்றறிந்த முதிர்ந்த விசுவாசிகள் வேத தியானத்தில் ஆர்வம் உள்ள இளம் விசுவாசிகளை வைத்துப் போதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. நோக்கங்கள் கடவுளுடைய பார்வையில் சீராக இருக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சில இரவு வேத பாடங்களை அடியேனும் நடத்தியிருக்கிறேன். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவங்கள். இன்றைக்கு வேதத்தைத் தூக்கிப் பிடிக்கிற சபையும் விசுவாசிகளும் தேவை.