தேவனுடைய இறையாண்மையில் ராகப்
தேவனுடைய இறையாண்மையில் ராகப்
ராகாபை இரண்டு ஒற்றர்கள் சந்தித்த காரியம் தற்செயலாக நடந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எரிகோ பட்டணத்தில் எத்தனையோ வேசிகள் இருந்தாலும் இந்த வேசியின் வீட்டில் ஒற்றர்கள் நுழைந்தது தேவனுடைய திட்டத்தின் படி நடந்த காரியம்.
இந்த எரிகோ பட்டணம் என்பது எட்டு அல்லது ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஒரு இடம்.
மதில்களால் பாதுகாக்கப்பட்டஇடம்.
இந்தப் பட்டிணத்தில் தேவனை விசுவாசித்த ஒரே பெண்மணி இவள்தான்.
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இஸ்ரவேலின் தேவன் ஒருவனே மெய்யான தேவன் என்று உணர்ந்து கொண்டவள் இந்த பெண்மணி.
எல்லோருடைய உணர்வுகளை புரிந்து கொண்ட தேவன் இவளுடைய வீட்டிற்கு செல்ல ஒற்றர்களை வழிநடத்தினார்.
இது தேவனுடைய இறையாண்மையின் முதல் பகுதி.
தேவனுடைய குமாரனின் வம்ச வரலாற்றில் இவள் இணைக்கப்பட்டது என்பது தேவனுடைய முன்குறித்த செயல்.
இந்த இணைப்பைக் கொண்டு தேவன் உலகத்திற்கு அவருடைய குமாரனின் மூலமாக கிடைக்கும் மிகப்பெரிய அருட்செய்தியை 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே முன் அறிவித்து விட்டார்
அதேபோலத்தான் நாமும் தற்செயலாக தேவனுடைய சரீரமாகிய சபையில் இணைக்கப்படவில்லை.
தேவனுடைய அனாதி தீர்மானத்தின்படி, அவருடைய இறையாண்மையின்படி, அவருடைய தெரிந்து கொள்ளுதலின்படி நாம் அவருடைய சரீரமாகிய சபையில்இணைக்கப்பட்டிருக்கிறோம். விசுவாசிகள் தாங்கள் தேவனோடு இணைக்கப்பட்ட காரியத்தை ஒரு சாதாரண நிகழ்வாக கடந்து போய் விடுகிறார்கள் இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய ஆவிக்குரிய தப்பு கணக்கு .
ஒவ்வொரு மனம் திரும்பிய விசுவாசியை குறித்தும் மிகப்பெரிய தேவனுடைய நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உணர தவறும் போது தேவனுடைய பரிபூரண சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் செய்ய தவறுகிறோம் என்பதுதான் தான் அர்த்தம்
. இன்றைக்கு விசுவாசிகள் செய்கிற மிகப்பெரிய பிழை என்ன தெரியுமா? போதகர்கள் நற்செய்தி பணியாளர்கள் மேய்ப்பர்கள் இவர்களுக்கு மட்டும்தான் தேவனைக் கொண்டு மிகப்பெரிய நோக்கம் இருக்கிறது என்றும் விசுவாசிகளுக்கென்று மிகப்பெரிய திட்டம் எதுவும் தேவனுடைய பார்வையில் இல்லை என்றும் நினைப்பதுதான்.
இதை சபை போதகர்கள் சரியாக உணர்த்தி போதிப்பதில்லை.
விசுவாசிக்கும் எல்லோரைப் போன்று ஒரு மிகப்பெரிய திட்டம் நோக்கம் பணி இருக்கிறது என்பதை உணர்ந்து அதை அறிந்து அந்தப் பயணத்தில் நாம் கடந்து போக வேண்டும்..
ராகாப் அதை சரியாக புரிந்து கொண்டு விசுவாசத்தோடு தன்னுடைய அழைப்பை செய்து முடித்தாள். வேவு பார்க்க வந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்ததை சரீர சுகத்திற்காக வந்ததாக கருதாமல் அதில் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது என்பது அறிந்து அவர்களை காப்பாற்றி தன்னைப் பற்றிய தேவனின் திட்டத்தை பொறுப்பாக நிறைவேற்றினாள்.
அந்த ராகாபுக்கு இருந்த தைரியம் ,விசுவாசம், கூரிய ஆவிக்குரிய சிந்தனை விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும்போது தேவனுடைய திட்டம் நம் தேசத்தில் நிறைவேறும்.
விசுவாசிகளே நீங்கள் உங்களைக் குறித்த தேவனுடைய திட்டத்தை அறிந்திருக்கிறீர்களா? உணர்ந்திருக்கிறீர்களா? அதை செயல்படுத்த விரும்புகிறீர்களா அல்லது பத்தோடு பதினொன்றாக இதுதான் என் ஊழியம் என்று இருக்கிறீர்களா?
ராகாபைப் போன்று தைரியம் உள்ளவர்களாக மாறுங்கள்
தேவனுடைய பரிபூரண சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுங்கள்.
எசேக்கியேல் சண்முகவேல்