மன்னாவின் மீது ஏற்பட்ட சலிப்பு
உங்கள் சிந்தனைக்கு:
மன்னாவின் மீது ஏற்பட்ட சலிப்பினால் ஏற்பட்டகொள்ளை நோய்
உணர்த்தும் பாடம் என்ன ?
இஸ்ரவேல் ஜனங்களுக்கு 40 வருட வனாந்திர வாழ்க்கையில் அவர்களுடைய சரீர உணவுக்காக கடவுள் வானத்திலிருந்து மன்னாவை பொழியப் பண்ணினார்.
அந்த மன்னாவை அவர்கள் அதிகாலையில் தேட வேண்டும்.
நேரம் கழித்து தேடினால் அந்த மன்னா வெயிலினால் உருகிப் போய்விடும்.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு கானானைநோக்கி புறப்பட்ட இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அவர்களுக்கு மன்னாவை குறித்து சலிப்புத் தட்டியது.
மன்னா மூலம் பெற்றுக்கொண்ட சரீர பலத்தை அலட்சியம் செய்து அவர்களோடு பயணம் செய்த இஸ்ரவேலர் அல்லாத அடிமைகளின் பேச்சைக் கேட்டு தங்களுக்கு இறைச்சி வேண்டும் என்று கேட்டார்கள்.
எண்ணா11:4
அவர்கள் இறைச்சியை இச்சித்தது கூட தவறு என்று கூட சொல்ல முடியாது .
ஆனால் மன்னாவை மட்டம் தட்டி அதன் மேல் சலிப்பு ஏற்பட்டு இறைச்சியை கேட்டது தான் தவறு.
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட நிகழ்வு விசுவாசிகள் பாவத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாகமாறின நிகழ்வுக்கு அடையாளமாக இருக்கிறது.
மன்னா என்பது
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி உலகத்திற்கு ஜீவனை கொடுத்த அப்பத்திற்கு அடையாளமாக இருக்கிறது .யோவா 6:33
அந்த ஜீவ அப்பம் இன்று வார்த்தையாக ,வேதமாக நம்முடைய கைகளில் இருக்கிறது.
அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் மன்னாவின் மீது சலிப்பு ஏற்பட்டு இறைச்சியை கேட்டது போல இன்று நாம்
வேதம் போதிக்கும் ஆரோக்கிய உபதேசங்களை கேட்பதற்கு மனதில்லாமல், வேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நம் செவிகளுக்கு தேவையான
வினோதமான காரியங்களை நோக்கி ஓடுகிறோம் .
நாம் இரட்சிக்கப்பட்ட மக்களாக இருக்கலாம். ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட மக்களாக இருக்கலாம்.
ஆனால் வேதத்தை தேடாமல், வேதத்தை தினமும் ஆராய்ந்து பார்க்காமல், அதை நேசிக்காமல் நாம் இருப்போம் என்றால் இஸ்ரவேல் மக்கள் இறைச்சியை நோக்கி ஓடினது போல நாமும் வேறுவிதமான உபதேசங்களுக்கு நேராக நடத்தப்பட்டு விடுவோம்.
வேதத்தை தியானிக்காத, நேசிக்காத, அதன்படி நடக்காத எவரும் தங்களுக்கு தேவன் வைத்த இலக்கை அடைய முடியாது.
இஸ்ரவேலர் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் .
ஆனால் அவர்கள் மன்னாவின் மீது சலிப்படைந்து அவர்களோடு இணைந்து வந்த அடிமைகள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் பாணியில் இறைச்சியை கேட்டார்கள்.
அதுபோல நாமும் வேதத்தை புறந்தள்ளிவிட்டு உலக மக்கள் விரும்புகின்ற காரியங்களை, ஆசீர்வாதங்களை இச்சைகளை நிறைவேற்றுகிற மக்களாக காணப்படக் கூடாது .
அன்றைக்கு அந்த இஸ்ரவேலர் மன்னாவை புறக்கணித்த காரணத்தினால் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.
இன்றைக்கு வேதத்தை மறந்த திருச்சபை ஆவிக்குரிய கொள்ளை நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளது .
செழிப்பின் உபதேசம், கிருபையை மட்டுப்படுத்தி கிரியை மேன்மை படுத்துகின்ற உபதேசங்கள்,
விசுவாசிகளை பரவசத்திற்கு நேராக நடத்தும் காரியங்கள்,
ஆன்மீகத்தோடு அரசியலை இணைக்கும் உபதேசங்கள்,
அரசியல் அதிகாரங்களை இச்சிக்கும் உபதேசங்கள்
போன்ற கொள்ளை நோய்கள் சபைகளை பாழாக்கி கொண்டிருக்கிறது.
இந்த ஆசிர்வாதங்களை உலக மக்கள் தேடுவதில் தவறில்லை.
ஆனால் ஒளியின் ராஜ்யத்திற்கு சொந்தமான மக்கள் இருளின் ஆதிக்கத்திற்கு சொந்தமானவற்றை இச்சிப்பதுதான் பாவம் .