யோசேப்பு அரிமத்தேயா — ஒரு மாற்றுப் பார்வை
*உங்கள்* *சிந்தனைக்கு* .
யோசேப்பு அரிமத்தேயா — ஒரு மாற்றுப் பார்வை
யோசேப்பு அரிமத்தேயாவைப் பற்றி ஒரு விதமான துயரம் உள்ளது.
அவர் இயேசுவுக்கு ஒரு கல்லறையை வழங்கிய மனிதர். அவர் யூதர்களின் அதிகாரம் மிக்க குழுவான ஆலோசனைச் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அந்தச் சபை இயேசுவுக்கு எதிராக எடுத்த தீர்ப்புக்கும் தண்டனைக்கும் அவர் உடன்படவில்லை என்று வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது.
ஆனால், அந்த அநீதியான தீர்ப்புக்கு எதிராக அவர் தனது குரலை உயர்த்தினார் என்று எங்கும் சொல்லப்படவில்லை.
இதுதான் வாழ்க்கையின் ஒரு பெரிய துயரம்.
உயிரோடு இருக்கும்போது கொடுக்க வேண்டிய மலர்களை, மரணத்திற்குப் பிறகு அவர்களின் கல்லறைகளில் வைக்கிறோம்.
உயிரோடு இருக்கும்போது சொல்ல வேண்டிய பாராட்டுகளையும் நன்றிகளையும், அவர்கள் இறந்த பிறகு வெளியிடப்படும் மரண அறிவிப்புகளிலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளிலும் தான் சொல்லுகிறோம்.
உயிரோடு இருக்கும் ஒருவரிடம் சொல்லப்படும் ஒரு நல்ல வார்த்தை, அவர் இறந்த பிறகு சொல்லப்படும் ஏராளமான புகழ்ச்சிகளைவிட அதிக மதிப்புடையது
.
— *வில்லியம் பார்க்லே.* William Barclay
அநீதியை எதிர்க்காமல் மௌனம் காப்பதும் ஒருவிதமான பாவமே.
நம்முடைய வசதிக்காகவும், வாய்ப்புகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பெரும்பான்மையான மக்களோடு இணைந்து, நீதிக்காகக் குரல் கொடுக்காமல் இருப்பதும் தவறே.
*பாராட்ட வேண்டிய* *நேரத்தில்,*
*பாராட்ட வேண்டிய* *இடத்தில்* ,
*பாராட்ட வேண்டிய விதத்தில்* ,
*பாராட்ட வேண்டிய நபரைப்* *பாராட்டாமல் கடந்து செல்வதும் ஒருவிதமான அநீதியே* .
*இது கிறிஸ்தவத்தில் சர்வசாதாரணமாகக் காணப்படும் ஒரு தொற்றுநோயாகிவிட்டது* .
எந்தவிதத்திலும் பாராட்டுக்குத் தகுதியில்லாத ஒருவரை, அவர் சமுதாயத்தில் வகிக்கும் பதவிக்காகவும் அந்தஸ்திற்காகவும் முகஸ்துதி செய்பவர்கள் ஆவிக்குரிய கோழைகள்.
அதே நேரத்தில், எளியவர்களை, உண்மையுள்ளவர்களை, நேர்மையானவர்களை, பாராட்டுக்குத் தகுதியானவர்களைப் பாராட்டத் தயங்குகிறோம்.
இப்படிப்பட்ட இரட்டை வேடம் போடும் மாய்மாலக்காரர்கள் கிறிஸ்தவத்தில் நிறைந்து காணப்படுகிறார்கள்.
ஒருவரின் பதவியைப் பார்த்துப் பாராட்டுவது கிறிஸ்தவத்தின் அடையாளமல்ல; ஒருவரின் பண்பையும் நேர்மையையும் பார்த்துப் பாராட்டுவதுதான் கிறிஸ்தவத்தின் அடையாளம்.
*எளியவர்களை உயர்த்திப் பேசவும், நேர்மையானவர்களை அடையாளம் காட்டவும், உண்மைக்கு* *குரல் கொடுக்கவும், அநீதிக்கு எதிராக நிற்கவும்* *கிறிஸ்தவம் எப்போது முன்வருகிறதோ, அன்றுதான் கிறிஸ்தவத்தின்* *உண்மையான வளர்ச்சி உலகத்திற்கு வெளிப்படும்* .
யோசேப்பு அரிமத்தேயா இயேசுவின் மரணத்திற்குப் பிறகு துணிச்சலுடன் முன்வந்தார். அது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது. *ஆனால்* , அவரது வாழ்க்கை நமக்கு இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது:
“ *உண்மைக்காக நான் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் நான் மௌனமாக இருந்துவிட்டேனா* ?”
நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி இதுதான்.
“ *சரியானதைச் செய்ய வேண்டிய நேரத்தில் மௌனம் காப்பது, தவறைச் செய்வோருக்கு ஆதரவாக நிற்பதற்குச் சமம்.”*
எனவே, உயிரோடு இருப்பவர்களை உயிரோடு இருக்கும்போதே மதிப்போம்.
பாராட்ட வேண்டியவர்களை அவர்கள் வாழும்போதே பாராட்டுவோம்.
நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் குரல் கொடுப்போம்.
உண்மைக்காக நிற்க வேண்டிய நேரத்தில் துணிந்து நிற்போம்.
*கல்லறைகளில் மலர்களை வைப்பதற்கு முன், உயிரோடு இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நமது* *அன்பையும் பாராட்டையும் நன்றியையும் வைப்போம்* .