தாவீதின் நிறைவேறாத ஆசை.
உங்கள் சிந்தனைக்கு:
தாவீதின் நிறைவேறாத ஆசை.
இஸ்ரவேல் ஜனங்கள் 400 ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்தார்கள்.
அந்தக் காலங்களில் அவர்கள் ஆராதிக்க அவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரம் இல்லை.
எகிப்து தேசத்தை விட்டுப் புறப்பட்டபோது வனாந்திரத்தில் ஆசரிப்பு கூடாரத்தை உருவாக்கும்படி மோசேக்கு தேவன் கட்டளை இட்டார். அதன்படி வனாந்தரத்தில் அவர்கள் 40 ஆண்டுகள் ஆசரிப்பு கூடாரத்தில் தேவனை ஆராதித்தார்கள். தேவனுக்கு ஒரு நிரந்தரமான ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்பது தாவீதின் மன விருப்பமாக இருந்தது.
அவன் தன் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை என்றும் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்ல என்றும் தான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
தன் கண்களுக்கு நித்திரையையும், இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று
கர்த்தருக்கு ஆணையிட்டு பொருத்தனைபண்ணினான்.
(சங்கீதம் 132:3-5)
கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், தன் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே விரும்பினான் (சங்கீதம் 27:4).
ஆனாலும் அந்த விருப்பத்தை, வாஞ்சையை தேவன் அவனுக்கு நிறைவேற்றவில்லை
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான சகல ஆயத்தத்தையும் பொருளாதார சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்தி அதை நிறைவேற்றும் பொறுப்பைக் கடவுளின் கட்டளையின்படி தன் மகனிடம் ஒப்படைத்தான்.
தாவீதை பொறுத்த அளவில் இது அவனுக்கு ஒரு நிறைவேறாத விருப்பம்.
அதே போல் தான் மோசேயின் வாழ்க்கையில் பார்ப்போமென்றால்
பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து,
அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
40 வருடங்கள் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திய அவன் இறுதியில் ஒரு கீழ்படியாமையினாலே தேவன் வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்ட கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை.
இது மோசேக்கு ஒரு நிறைவேறாத ஆசையாக மாறிவிட்டது.
இந்த இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கும்பொழுது ஒன்றை புரிந்து கொள்ளலாம்.
நம்முடைய காலத்திலேயே எல்லாம் செய்து முடித்து விடலாம் என்பது கூடாத காரியம். நம்முடைய குடும்பத்திலோ ஊழியத்திலோ நம்முடைய வாழ்நாள் முடிவதற்குள் எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம். ஒரு சில பேருக்கு அது நிறைவேறலாம் அநேகருக்கு அவர்கள் அஸ்திபாரத்தை மட்டுமே போட முடியும். அதனுடைய இறுதிப் பணியை மற்றவர்கள் செய்து முடிப்பார்கள்.
We need not have any regret for what we have done.
தேவன் நம்முடைய வாழ்க்கையில் அனுமதித்த காரியத்தை மட்டுமே நாம் செய்ய முடியும். நாம் விரும்பியதெல்லாம் ஊழியத்திலும்,குடும்ப வாழ்க்கையிலும் நாம் செய்து முடிக்க முடியாது. அவைகளை முடிக்க யாரை தேவன் முன் குறித்தாரோ அவர்கள்தான் செய்து முடிப்பார்கள்.
நாம் மோசேயா யோசுவாவா என்பதை தேவன் தான் முடிவு செய்வார்.
தாவீதாக அழைக்கப்பட்டால் சாலமோனாக மாற முயற்சிக்கக் கூடாது
"தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். "
1 கொரிந்தியர் 7:17
கடவுளின் பார்வையில் மோசேயும், யோசுவாவும், தாவீதும் தங்கள் வாழ்க்கையில் பரிபூரண சத்தத்தை நிறைவேற்றியவர்களே.
சாலமோனை பொறுத்த அளவில் ஆலயம் கட்டுகிற பணியில் தேவனுடைய பரிபூரண சித்தத்தை செய்து முடித்தான்.
தேவன் அழைத்த அழைப்பைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம். அழைத்த அழைப்பில் நாம் எப்படி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறோம் என்பதுதான் முக்கியம்.