பார்வோனும் தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம்தான்
உங்கள் சிந்தனைக்கு:
மோசே எவ்வாறு தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாக இருந்தாரோ, அதேபோல் பார்வோனும் தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம்தான் என்பதைக் ரோமர் 9:17,18 வசனங்கள் நமக்குப் புரியவைக்கின்றன.
தேவன் பார்வோனுடைய இருதயத்தை ஏன் கடினப்படுத்தினார் என்பது குறித்து இவ்வசனங்கள் விளக்கமாகவும் ஆழமாகவும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
மோசே, தேவனால் அழைக்கப்பட்டபோது ஊழியத்திற்கு வரத் தயங்கினாலும், தேவன் அவன்மேல் இரக்கம் காட்டி, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தும் பாத்திரமாகப் பயன்படுத்தினார். அதுபோலவே, பார்வோனுடைய இருதயத்தை கடினப்படுத்தி, "கர்த்தரே தேவன்" என எகிப்தியருக்குள் தெளிவாக விளங்கும்படி தேவன் அவனையும் பயன்படுத்தினார்.
வேதத்தில், சர்வாதிகாரியாகவும் கொடுங்கோலனாகவும் காணப்படும் முதலாவது மன்னன் யார் என்றால், அது யாத்திராகமத்தில் சொல்லப்படுகின்ற எகிப்தின் அதிபதி பார்வோனே. அவன் லட்சக்கணக்கான யூதர்களை அடிமைப்படுத்தி, சித்திரவதை செய்த கொடுங்கோல்மன்னன்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களைத் தன்னைக் ஆராதிக்க அனுப்பும்படி, மோசே பார்வோனிடம் கேட்டபோது, அவன் தனது இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டான். வேதத்தில் பார்வோன் தன் இருதயத்தை 11 தடவைகள் கடினப்படுத்தியதாகவும், தேவனும் அவனுடைய இருதயத்தை ஏழு தடவைகள் கடினப்படுத்தியதாகவும் பார்க்கலாம்.
தேவன் ஏன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார்?
முதலான ஐந்து வாதைகள் வரைக்கும் பார்வோன் தான் தன்னுடைய இருதயத்தை கடினப்படுத்தினான். ஆறாவது வாதையில் தேவனே அவனுடைய இருதயத்தை மேலும் கடினப்படுத்தினார். இது தேவனுடைய இறையாண்மையை எடுத்துக் காட்டுகிறது — படைத்தவர் நம்மை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவருடைய உரிமை.
இங்கு இரண்டு முக்கியமான காரியங்களைக் கவனிக்க வேண்டும்:
பார்வோன் தன் கடவுள்களில் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து வெறுமையாக நிற்க வேண்டிய நிலைக்கு வர வேண்டும். தேவன் அனுப்பிய பத்து வாதைகளும் எகிப்தின் கடவுள்களோடு தொடர்புடையவை. அவ்வகையில், அவர்களது தெய்வங்கள் அவனைக் காப்பாற்ற முடியாது என்பதை நிரூபித்தன.
யூதர்களால் வணங்கப்படும் கடவுளே மெய்யான சர்வவல்லமையுள்ள கடவுள் என்பதை பார்வோனுக்கும், உலகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டியது.
இந்த இரண்டு காரியங்களும் நிறைவேறும் வரை பார்வோனின் மனம் கடினமாகவே இருக்க வேண்டும்.
பழைய ஏற்பாட்டில், யூதர்களுக்குக் கானான் தேசத்தை வழங்கத் தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார். அதுபோலவே, இருபதாம் நூற்றாண்டிலும், யூதர்களுக்குத் தனி நாடு கிடைக்க ஹிட்லரின் இருதயமும் கடினப்படுத்தப்பட்டது. அவர் சாத்தானுடைய கருவியாக இருந்தாலும், தேவன் தம்முடைய மறைக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற அவர் ஹிட்லரையும் பயன்படுத்தினார்.
"ஆதலால், எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ, அவன்மேல் இரக்கமாயிருக்கிறார்; எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ, அவனைக் கடினப்படுத்துகிறார்."
– ரோமர் 9:18
மோசே எப்படி தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாக இருந்தாரோ, அதுபோல் பார்வோனும் ஒரு வகையில் தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம்தான் என்பதில் ஐயமில்லை.