Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*ஆறுதல் சொல்பவர்கள் என்கிற பெயரில் அவதூறுகளை அள்ளி தெளிப்பவர்கள் யோபுவின் புத்தகம் – வேதப் பாடம் 24
உங்கள் சிந்தனைக்கு‌.

*ஆறுதல் சொல்பவர்கள் என்கிற பெயரில் அவதூறுகளை* *அள்ளி தெளிப்பவர்கள்*

யோபுவின் புத்தகம் – வேதப் பாடம் 24

யோபுவுக்கு ஏற்பட்ட திடீர் இழப்புகளையும், அவனுடைய உடல் வேதனையையும் அறிந்த மூன்று நண்பர்கள், அவனுக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தார்கள். ஆனால், ஆறுதல் கூற வந்த அவர்கள், பல சுற்றுகளாக யோபுவோடு விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

முதலில் பேசிய எலிப்பாஸ், ஆரம்பத்தில் யோபுவைப் பற்றி மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டவில்லை. யோபு நல்லவன் என்பதை முதலில் ஒப்புக்கொள்கிறான். ஆனால், "தேவன் தண்டிக்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ஏதோ ஒரு பாவம் இருக்க வேண்டும்" என்று மறைமுகமாகக் கூறுகிறான்.

மேலும், "தேவன் உன்னைச் சிட்சிக்கிறார்; ஆகையால் அதை ஏற்றுக்கொள்" என்று அறிவுரை கூறுகிறான் (யோபு 5:17).

இரண்டாவது முறை பேசும்போது, முன்பைவிட இன்னும் கடுமையாக யோபுவைக் குற்றம் சாட்டுகிறான். யோபு தன் பக்தியை வீணென்று கருதி, ஜெபிப்பதை விட்டுவிட்டான் என்றும், மனிதன் ஒருபோதும் தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்க முடியாது என்றும் கூறி, யோபு தவறு செய்தவன் என்ற முடிவுக்கு வருகிறான் (யோபு 15:4, 14).

இவை அனைத்தும் பொதுவான குற்றச்சாட்டுகள்.
ஆனால், 22-ஆம் அதிகாரத்தில், *யோபுவின் மீது தனிப்பட்ட முறையில் பல அபாண்டமான குற்றச்சாட்டுகளைச்* *சுமத்துகிறான்* .
மற்ற இரண்டு நண்பர்களான பில்தாதும் சோப்பாரும், இவ்வாறு தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை யோபுவின் மீது சுமத்தவில்லை.
எலிப்பாஸ், *யோபு செய்யாத பாவங்களைக்கூட அவன் செய்ததாகக் கற்பனை செய்து கூறுகிறான்* (யோபு 22:6–9).

*சகோதரரிடமிருந்து அநியாயமாக அடமானம் வாங்கினான்.*

*நிர்வாணரின் உடையை எடுத்துக்கொண்டான்* .

*தாகமாயிருந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை.*

*பசியாயிருந்தவர்களுக்கு உணவு கொடுக்கவில்லை*
.
*விதவைகளை வெறுமையாய் அனுப்பினான்.*
*அநாதைகளை ஒடுக்கினான்*
.
இறுதியாக, " *உன் அக்கிரமம் பெரிது" என்று (* யோபு 22:5) ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறான்.
யோபு அனுபவித்த வேதனையையும் இழப்புகளையும் புரிந்துகொள்ளாமல், அவனுக்கு ஆறுதல் கூறாமல், தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டிய இந்த மனநிலை மிகவும் கொடியது.

இவர்கள் ஆறுதல் கூறும் நண்பர்கள் அல்ல; நண்பர்களின் மனதைப் புண்படுத்தியவர்கள். *ஆறுதல் என்ற பெயரில், காயப்பட்டவர்களின் வேதனையை உணராமல், அவர்கள்* *மீது குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும்* *பொழிகிறவர்கள்* .
இன்றும் நமது ஆவிக்குரிய உலகத்தில், எலிப்பாஸைப் போன்ற ஆவிக்குரிய போலிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் பாடுகளை அனுபவிக்கும் நல்ல விசுவாசிகளுக்கு இடறலாக இருப்பவர்கள். கஷ்டங்களை அனுபவிக்கும் விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையை பலப்படுத்துவதற்குப் பதிலாக, அதைக் குலைக்கும் தடைக்கற்களாக மாறுகிறார்கள்.
இவர்களால் சபைக்கும் விசுவாசிகளுக்கும் எந்த நன்மையும் இல்லை.
*They are not assets to anyone.*

*They are liabilities to everyone.*
இவர்கள் யாருக்கும் பயனளிப்பவர்கள் அல்ல; மாறாக, சுமையாகவே காணப்படுகிறார்கள்.
எனவே, *நமக்கு ஆறுதல் கூற வருபவர்களைப் பற்றி விசுவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.* அனேக நேரங்களில் அவர்கள் நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவதற்குப் பதிலாக, நம்முடைய உத்தமத்தையே குற்றம் காண்பவர்களாக இருக்கக்கூடும்.
*விசுவாசிகளே,* *எலிப்பாஸைப் போன்றவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்* !