Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

காதேஸ்பர்னேயா அனுபவம்
உங்கள் சிந்தனைக்கு:

வேண்டாம் வேண்டாம் காதேஸ்பர்னேயா அனுபவம் வேண்டாம்.

இஸ்ரவேலருடைய வாழ்க்கையில் காதேஸ் பர்னேயா ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது .
இந்த இடம் அவர்களின் வரலாற்றின் போக்கையே மாற்றி விட்டது.

இந்த இடத்தில் தான் மயிரிழையில் அவர்கள் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை,தேவன் வாக்குத்தத்தம் பண்ணின இடத்தை அடையாமல் போனார்கள்.
It was a just miss.

இன்னும் 150 மைல்கள் கடந்து சென்றால் அவர்கள் கானானை
அடைந்திருப்பார்கள்.

ஆனால் பத்து நபர்களுடைய பிழையான, தவறுதலான இறையியல் கோட்பாட்டை நம்பி அவர்கள் லட்சக்கணக்கான யூதர்களை வழி விலகச் செய்து விட்டார்கள்.

இறையியல் என்றால் என்ன? அது தேவனை பற்றிய அறிவு.
தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை விசுவாசத்தோடு கடந்து போக மனம் இல்லாமல் அந்த நாட்டை வேவு பார்க்க அனுமதி கேட்டார்கள்.
மோசேயும் அதற்கு சம்மதித்தான்.
அனுப்பப்பட்ட 12 பேரில் 10 பேருடைய இறையியல் பார்வை மனித புரிதலின் அடிப்படையில், மனித ஞானத்தை கொண்டு சூழ்நிலை கொண்டு அமைந்தது.

ஆனால் மற்ற இரண்டு பேருடைய இறையியல் பார்வை கர்த்தருடைய வாக்குத்தத்தை அடிப்படையாகக் கொண்டு, விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்தது.

எப்பொழுதுமே பெரும்பான்மையான மக்கள் சொல்கிற கருத்துக்கள் தவறுதலாக இருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற காரியம்‌ இன்று நேற்றுஅல்ல ஆதி முதல் இருந்திருக்கிறது என்பதற்கு காதேஸ்பர்னேயா நிகழ்வு ஒரு உதாரணம்.

இஸ்ரவேல் மக்கள் தங்களை தேவன் எகிப்தில் இருந்து மீட்டெடுத்து அதுவரைக்கும் அவர்களை தேவன் நடத்தின அடையாளங்கள் அற்புதங்கள், பாதுகாப்பு இவற்றை மறந்து தேவனுடைய வல்லமையை குறைவாக மதிப்பிட்டு அவருடைய வல்லமையை விசுவாசிக்காமல் தாங்கள் கானானில் நேரில் கண்ட காட்சிகளின் அடிப்படையில் கானானை தங்களால் அடைய முடியாது என்கிற தவறான செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.
ஆனால் காலேபு , யோசுவா
இவர்களின் கடவுளைப் பற்றிய பார்வை, அவர்களுடைய இறையியல் தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பத்து நபர்களைப் போல உலகத்தின் ஆவியை பெறாமல் வேதத்தின் அடிப்படையிலான வேறு ஆவியை பெற்ற மனிதர்களாய் தேவன் வாக்களித்த கானானை அடைந்தார்கள்.

இன்னொரு வார்த்தை சொல்லப் போனால் அவர்களுடைய சரியான இறையியல் கோட்பாடு அவர்களுடைய விசுவாசத்தை காப்பாற்றியது.

தவறான இறையியல் கோட்பாடு லட்சக்கணக்கான யூதர்களை வனாந்தரத்தில் மடிய செய்தது.

இன்றைக்கும் கிறிஸ்தவத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
அநேக போதகர்கள் வழி விலகி பிழையான உபதேசங்களை போதித்து மக்களை தேவன் இந்த உலகத்தில் அவர்களுக்கு வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாமல் செய்து விடுகிறார்கள்.

சிறுபான்மையான‌ போதகர்கள் சரியான உபதேசத்தை போதித்தாலும் அவர்களை இந்த கிறிஸ்தவ உலகம் ஏற்றுக் கொள்வதில்லை.
2/12 என்கிற அளவீடு இன்றைக்கும் பொருத்தமாய் இருக்கிறது. கர்த்தர் மகிமைப்படுவாராக.
படிக்க எண்ணாகமம் 14 வது அதிகாரம் மற்றும் உபாயம் 1வது அதிகாரம்.

இந்த கருத்து Believer's Bible commentaryஐ அடிப்படையாகக் கொண்டது.