இயேசு கிறிஸ்து பிதாவிடமிருந்து பெற்ற முதல் வெளிப்பாடு.
உங்கள் சிந்தனைக்கு:
இயேசு கிறிஸ்து பிதாவிடமிருந்து பெற்ற முதல் வெளிப்பாடு.
வேதத்தில் காணப்படுகின்ற புத்தகங்களை 40 பேர் எழுதியிருக்கிறார்கள்.
அந்த 40 நபர்களில் லூக்கா மட்டுமே யூதர் அல்லாதவர். புற இனத்தை சேர்ந்த இவர் இரண்டு நூல்களை எழுதி இருக்கிறார்.
ஒன்று இயேசுவைப் பற்றிய நற்செய்தி.
மற்றொன்று அப்போஸ்தலருடைய நடபடிகள்.
இந்த இரண்டு புத்தகங்களின் பக்கங்கள் பவுல் எழுதிய 13 நூல்களை விட அதிகமானது.
இவருடைய நற்செய்தி நூல் மத்தேயு மாற்க்கு எழுதிய நூல்களை விட வித்தியாசமானது.
அதில் சொல்லப்படாத சில முக்கிய தகவல்களை இந்த நற்செய்தியில் பார்க்கலாம். உதாரணத்திற்கு இயேசு கிறிஸ்து பேசிய முதல் வார்த்தையை லூக்கா குறிப்பிடுகிறார்.
அதுவும் எப்போது என்றால் 12 வயதில் எருசலேம் தேவாலயத்தில் வேத போதகர்களோடு உறவாடிய அந்த நிகழ்வு.
இயேசு சொன்ன அந்த முதல் வார்த்தையை கவனியுங்கள்.
" அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்'.
லூக்கா 2:49
இந்த வார்த்தையை சாதாரணமாக கடந்து போக முடியாது.
யூதர்களுடைய பாரம்பரியத்தில் 12 வயது ஆன ஒருவன் பூரணமாக ஆணாக மாறிவிடுகிறான்.
மரியாள் நானும் உன் தகப்பனும் தேடினோமே என்று சொன்னபோது அவர் யோசேப்பை தன் தகப்பனாக கருதாதபடி தன்னுடைய தகப்பனை பரலோகத்தின் தகப்பனாக சொல்கிறார்..
அதனுடைய அர்த்தம் என்னவென்றால் இனி நான் உங்களுக்கு சொந்தமல்ல நான் பரலோக பிதாவுக்கு சொந்தமானவன் என்பதுதான்.
இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் நாம் என்றைக்குஆண்டவரை ஏற்றுக் கொள்கிறோமோ அந்த வினாடி முதல் 'நாம் யார்' என்கிற பார்வை நமக்கு வர வேண்டும்.
நாம் யார், நாம் யாருக்கு சொந்தம், நாம் யாருக்காக வாழ வேண்டும், நம்முடைய இலக்கு என்ன, நம்முடைய சத்ரு யார் போன்ற பல அடிப்படை வெளிப்படுத்தல்களை நாம் பெற்றுக் கொள்ளாத வரை ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.
தேவன் நம்மை அழைத்த நோக்கத்தை ஒருபோதும் இந்த பூமியில் நிறைவேற்ற முடியாது. இயேசு கிறிஸ்து 12 வயதில் இந்த வெளிப்படுத்தலை பெற்றுக்கொண்டு ஏறக்குறைய 21 ஆண்டுகள் தேவன் தன்னை அழைத்த நோக்கத்தை இந்த உலகத்தில் நிறைவேற்றினார். நமக்கும் 'நாம் யார்' என்கிற பார்வையை தேவன் நமக்கு தருவாராக..