1நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம். வேத பாடம் 2.
*உங்கள் சிந்தனைக்கு.*
1நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம்.
வேத பாடம் 2.
*தியானிக்க வேண்டிய* *பகுதி* *_அதிகாரம் 11_*
*தாவீதின் வளர்ச்சி;*
இஸ்ரவேல் தேசத்தின் முதல் அரசன் சவுல்.
ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தாவீதை பகைமை பாராட்டினான்.
சவுல் பெலிஸ்தியரால் கொல்லப்பட்ட பிறகு இஸ்ரவேல் மக்கள் தாவீதை அணுகி தங்களுக்கு ராஜாவாக வாழும்படி வேண்டுகோள் விடுத்தார்கள்.
அதுவரை தாவீதை நேரடியாக ஆதரிக்காத ஜனங்கள் சவுல் மரித்தவுடன் தாவீதை நோக்கி வந்தார்கள்.
ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறத் தொடங்கியது என்பது போல அந்தக் காலத்திலும் அப்படித்தான் நிகழ்ந்தது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்.
1. நம்மை நிராகரித்த ஜனங்கள் கடவுள் அனுமதிக்கும் நேரம் வரும்போது அவர்கள் நம்மை தேடி வருவார்கள்.
2. ஒரு மனிதனோடு தேவன் இருக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த அடையாளம், நம்மை நிராகரித்தவர்கள் நம்மை ஏற்றுக் கொள்கிற அந்த நிகழ்வுதான்.
*தாவீதின்* *படிப்படியான* *வளர்ச்சி*
ஒரே நாளில் கோலியாத்தை கொன்று புகழின் உச்சிக்கு சென்றாலும் பிறகு அவனுடைய உயர்வு சவுல் மரணம் அடைந்த பிறகு தான் நிகழ்ந்தது.
கடவுள் நம்மோடு இருக்கும் பொழுது நம்முடைய ஊழியங்களில் நம்முடைய பணிகளில் நிச்சயமாக முன்னேற்றம் ஏற்பட வேண்டும். .
நாம் நம்முடைய வாழ்க்கையில் அடிக்கடி உறுதி செய்யக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால் தேவன் நம்மோடு இருக்கிறாரா என்பதைத்தான்.
நாம் தேவனோடு இருப்பதை விட அவர் நம்மோடு இருக்கிற காரியம்தான் நமக்கு இருக்கிற மிகப்பெரிய பாதுகாப்பு.
எனவே எப்பாடுபட்டாவது கடவுள் நம்மோடு இருப்பதை ஒவ்வொரு வினாடியும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதுவரைக்கும் தாவீது வாழ்ந்த மறைமுக வாழ்க்கை மறைந்து.
அவன் தனக்கென ஒரு தலைநகரை ஏற்படுத்திக் கொண்டான்.
இந்த நிகழ்வு அவனுடைய அரசாங்கத்தின் விரிவாக்கத்திற்கு ஒரு அடித்தளம். பின்னால் இந்த எருசலேம் உலகத்தினுடைய வரைபடத்தில்
அழியாமல் இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது.
எருசலேமை கைப்பற்றிய பிறகுதான்
அவனைப்பற்றி வேதம் இப்படி சொல்லுகிறது.
"தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான், சேனைகளுடைய கர்த்தர் அவனோடுகூட இருந்தார்".
1 நாளாகமம் 11:9
அடுத்ததாக இந்த அதிகாரத்தில் நாம் பார்க்கக்கூடிய மிக முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் தாவீதுனுடைய சிறந்த தலைமை பண்பு,
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தாவீது மிகச்சிறந்த உதாரணம்.
தலைவன் என்பவன் தன் கீழ் உள்ள உடன் ஊழியர்களை அடிமைகளாக நடத்தாமல் அவர்களுடைய உயர்வில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை கட்டாமல் அவர்களுடைய இரத்தத்தை சுரண்டாமல் உழைப்பை சூறையாடாமல் அவர்கள் நம் மூலமாக கடவுளுக்கு செய்யும் பணியை நமக்கென்று அபகரித்துக் கொள்ளாமல் அதை ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கிற ஒரு மிகப்பெரிய மனப்பான்மைதான் தலைவனுக்குரிய சிறப்பு.
தாவீது பெத்லகேமில் கிணற்று நீரை கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டபோது தாவீதோடு இருந்த மூன்று பலசாலிகள்
பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லகேமின் வாசலின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி, கொண்டுவந்து தாவீதுக்குக் கொடுத்தார்கள்.
ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து அதை கடவுளுக்கு முன்பாக வெளியே ஊற்றினான்.
1 நாளாகமம் 11:18 அப்பொழுது தாவீது சொன்ன வார்த்தைதான் மிக முக்கியமானது..
“இறைவனே, நான் இதைச் செய்வதற்கு எண்ணியும் பார்க்கமாட்டேன். தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தண்ணீர் கொண்டுவந்த இந்த மனிதர்களின் இரத்தத்தை நான் குடிப்பேனோ?” என்றான்.
இவர்கள் தங்கள் உயிருக்கு வர இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அதைக் கொண்டுவந்ததால் தாவீது அதைக் குடிக்கவில்லை.
இத்தகைய துணிகரமான செயல்களை இந்த மூன்று வலிமைமிக்க மனிதர்களும் செய்தார்கள்.
1 நாளாகமம் 11:19. இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஒரு தலைவன் தன் உடன் ஊழியக்காரர்களுடைய உழைப்பை எப்படி மதிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
உடன் ஊழியருடைய உழைப்பை கடவுளுக்கு அர்ப்பணித்து அதை தான் எடுத்துக் கொள்ளாமல் அதன் மேல் தன் அரசாங்கத்தை கட்டாமல் அந்த உடன் ஊழியர்களை உயர்த்தி வாழ்பவனே சிறந்த தலைவன்.
இந்தப் பண்பு தாவீது னுடைய தலைமைத்துவத்தை மிக உன்னத நிலையில் கொண்டு நிறுத்துகிறது.
மற்றவர்களின் உழைப்பில், தியாகத்தில், அர்ப்பணிப்பில் தங்களுடைய ராஜ்யத்தை கட்டுகிற எவரும் தேவனுடைய ராஜ்யத்தை அடைய முடியாது