எபி 11:13 ன் உண்மையான அர்த்தம் என்ன?
உங்கள் சிந்தனைக்கு:
எபி 11:13 ன் உண்மையான அர்த்தம் என்ன?
தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி ஆணையிட்டுக் கொடுத்த ஆசீர்வாதம் என்றால் என்ன?
"இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்'”
தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி ஆணையிட்டுக் கொடுத்த ஆசீர்வாதம் என்றால் என்ன?
இதை புரிந்து கொள்ள ஆதி. 22:16-18 மற்றும் கலா. 3:16 ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து நீங்கள் பார்க்க வேண்டும்.
இதில் சொல்லப்பட்ட மூன்று பதங்களை கவனிக்கவேண்டும்.
1.உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
2. உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
3.என்பேரில் ஆணையிட்டேன்.
உன் சந்ததி என்று சொல்லப்படுவது இயேசுவினுடைய சந்ததியை குறிப்பதாகும்.
இதுகுறித்து பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில்(3:16) தெளிவாக விளக்குகிறார்.
"ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே."
கலாத்தியர் 3:16
இது கிறிஸ்துவின் மூலமாக பிறக்கும் ஒரு புதிய ஆவிக்குரிய சந்ததி. ஆபிரகாமின் சந்ததியில் திரித்துவத்தின் இரண்டாவது நபரான தேவகுமாரன் மனிதனாக பிறந்தார்.
இதற்கு பிறகுதான் ஆதி 17:8 ல் சொல்லப்பட்ட" நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்கிற வாக்குத்தத்தத்தை பார்க்கவேண்டும்.
இந்த கானான்தேசத்தை ஆபிரகாம். ஈசாக்கு ,யாக்கோபு , மற்றும் அவனுடய பிள்ளைகள் யாரும் அவர்கள் இருக்கும் வரை சொந்தமாக கொள்ளவில்லை.
சுமார் 500 ஆண்டுகள் கழித்துதான் ஆபிரகாமுக்கு பின்வந்த சந்ததி கானான் தேசத்தை சொந்தமாக்கி கொண்டார்கள்.
எபி 11:13 என்பது எதை குறிப்பது என்றால் அவர்களுடைய சந்ததி பெறப் போகிற கானான் தேசத்தை பற்றியது அல்ல.
தன்னுடைய வம்சத்தில் தேவன் தன்னுடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் சந்ததியில் பிறப்பார். அதன் மூலம் உலகத்திற்கு மிகப்பெரிய இரட்சிப்பு வரும் என்பதைதான் அவர்கள் தூரத்திலிருந்தே கண்டு அணைத்து அதை நம்பி விசுவாசத்தில் மரித்தார்கள் .
இது முழுக்க முழுக்க ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை குறிக்கிறது.
இதைத்தான் இயேசுகிறிஸ்து யூதர்களுக்கு "உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
மோசேயும் இந்த ஆசிர்வாதத்தை தான் (இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து,) எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை எதிர் நோக்கி அவைகளை தூரத்திலே கண்டு அணைத்து அவர்கள் விசுவாசத்தில் மரிக்கவில்லை
. நம் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆவிக்குரிய ஆசிர்வாதத்தை உலக ஆசிர்வாதத்தோடு இணைத்து கொச்சை படுத்தக்கூடாது.
Ref – 1.THE DAILY STUDY BIBLE. THE LETTER TO THE HEBREWS” BY W.BARCLAY
2 AN EXPOSITION OF HEBREWS A.W.PINK
3.AN EXPOSITION OF THE EPISTLE TO THE HEBREWS-JOHN BROWN