இஸ்ரவேல் ஜனங்களின் போர்யுக்தி.
யோசுவாவின் புத்தகத்தில் பத்தாவது அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக கானான் தேசத்தின் தெற்கு பகுதியில் இருந்து 5 ராஜாக்கள் ஒன்று கூடி யுத்தம் செய்தார்கள்.
அதேபோல் 11 ஆவது அதிகாரத்தில் கானான் பிரதேசத்தின் வடக்கில் உள்ள அரசர்கள் ஒன்று சேர்ந்து போரிட வந்தார்கள். இவர்கள் பெரும் கூட்டமாக வந்தார்கள். யோசபாஸ் (Josephus)என்கிற வரலாற்று ஆசிரியர் இதைப்பற்றி எழுதும்போது ஏறக்குறைய மூன்று லட்சம் காலட்படைகளும், 20 ஆயிரம் ரதங்களும், 10 ஆயிரம் குதிரை படைகளும் இணைந்து இஸ்ரேல் ஜனங்களுக்கு எதிராக வந்ததாக எழுதுகிறார்.
இந்த இரண்டு இடங்களிலும் இஸ்ரேல் ஜனங்கள் ஒரு போர் யுக்தியை கடைப்பிடித்தார்கள். இந்த இரண்டு போர்க்களத்திலும் அவர்கள் எதிரிகளை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தாக்கியதாக பார்க்கலாம்.யோசு10;10,11:7
ஆங்கிலத்தில் suddenly என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் இன்னொரு பெயர் Ambush. இந்த போர்க்கள யுக்திக்கு இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாள் வரைக்கும் பெயர் பெற்றவர்கள்.
ஏன் இந்த யுக்தியை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்கள் 40 ஆண்டுகள் வனாந்தரத்திலேயே கழித்து விட்ட காரணத்தினால் அவர்களுக்கு குதிரைப்படை என்பது கிடையாது. ஆனால் எதிராளியான அரசர்கள் இந்தப் படைகளை உடையவர்களாக இருந்தார்கள்.இஸ்ரவேல் ஜனங்களிடம் காலாட்படைகள் மட்டுமே இருந்தது. எனவே குதிரை படைகள் இஸ்ரவேல் ஜனங்களை தாக்குவதற்கு முன்பாக குதிரைப்படைகளை செயல்படாமல் தடுப்பதற்காக இஸ்ரவேல் ஜனங்கள் இந்த திடீர் தாக்குதலை பயன்படுத்தினார்கள். இஸ்ரவேல் ராணுவத்தில் சாலமோன் அரசன் தான் குதிரை படைகளையும் இரதங்களையும் இணைத்ததாக பார்க்கலாம் (1 இராஜா4:26,10:26)
எனவே தான் ஆண்டவர் இந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை இஸ்ரவேல் ஜனங்கள் செய்ய சொல்கிறார். அது என்னவென்றால்
"நீ அவர்கள் குதிரைகளின் குதிக்கால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார். " என்பதுதான்
யோசுவா 11:6
காரணம் குதிரைகளை செயலிழக்கச் செய்தால் மறுபடியுமாக அவர்கள் இஸ்ரவேலரை தாக்குவது கடினம்.
நமது ஆண்டவர் நம்மை விட நம்முடைய பலத்தையும் எதிரியின் பலத்தை நன்கு அறிந்தவர்.
அவர் யோசனையில் பெரியவர். யுத்தத்தில் வல்லவர். நமக்காக யுத்தம் செய்பவர்.
இந்த புத்தகத்தில் பத்தாவது அதிகாரத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட இரண்டு அதிசயங்களை செய்து தம்முடைய ஜனங்களுக்கு வெற்றியை கொடுத்தார்.
ஆனால் பதினோராவது அதிகாரத்தில் முழுக்க முழுக்க இஸ்ரவேல் ஜனங்களுக்கு போர் யுக்தியை கற்றுக் கொடுத்து எதிரிகள் மீது வெற்றி சிறக்க செய்தார்.
கானான்தேசத்தில் குடியிருந்தவர்களை வெளியேற்ற இஸ்ரேல் ஜனங்களுக்கு தேவன் பல்வேறு வழிகளை கற்றுக் கொடுத்தார்.
எரிகோ பட்டணம் கைப்பற்றப்பட்ட விதம் வேறு.
ஆயி பட்டினத்தை கைப்பற்றிய விதம் வேறு.
தெற்கு பகுதியில் உள்ள அரசர்களை வெற்றி கொண்ட விதம் வேறு. வடக்கில் உள்ள பெரும் சேனையை தோற்கடித்த விதம் வேறு.
நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் நம்முடைய விரல்களை யுத்தத்துக்கு பயிற்றுவிக்கும் தேவனாய் இருக்கிறார்.
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சங்கீதம் 144:1
அவருக்கு முழுமையாக கீழ்ப்படியும் பொழுது வெற்றி நமக்கு முழுமையாக சொந்தமாகும்.
இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள்.
1. Devotional commentary by
Lawrence O. Richard
2. Believer's commentary
By William McDonald
3.South Asia Bible commentary
4. The Bible exposition commentary.Wiersbe
எசேக்கியல் சண்முகவேல்