Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நமது வேத அறிவு  மற்றவர்களுடைய ஆவிக்குரிய கண்களை திறக்கட்டும்

நாம்(விசுவாசிகள்) எத்தனை ஆராய்ச்சி வேதங்களைப் (Study Bible)படித்தோம், எவ்வளவு வேத வியாக்கியானங்களை (commentaries)படித்தோம், எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்தோம், எவ்வளவு பெரிய ஆசிரியர்களின் கருத்துக்களை படித்தோம்  என்பதல்ல முக்கியம்.

நாம்(விசுவாசிகள்) அறிந்த சத்தியத்தை, விவரங்களை, கருத்துக்களை எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு கடத்தி அவர்களின் ஆவிக்குரிய சிந்தனைகளை   வளர்த்தோம் , அவர்களின் ஆவிக்குறிய கண்களை திறந்தோம் என்பதுதான் கர்த்தருடைய பார்வையில் முக்கியம்.

நாம் படித்த சிறந்த புத்தகங்களை ஆராய்ச்சி நூல்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோமா ?அவர்களை அதை படிக்க ஊக்குவித்தோமா?
பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு அதை வாங்கிக் கொடுத்தோமா ?இவைகள் தான் கர்த்தருடைய பார்வையில் சிறந்த ஊழியங்கள்.

நாம் (விசுவாசிகள்)எந்த அளவுக்கு நம்முடைய ஆவிக்குரிய அனுபவங்களை, அறிவை மற்றவருடைய வளர்ச்சிக்கு   பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு  தேவன் நமக்கு கொடுத்த கிருபைகள்  வளரும் .

நம்முடைய செல்வங்களை வறியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது போல, உதவி செய்வது போல, ஆவிக்குரிய தரித்திரத்தில் இருக்கும் விசுவாசிகளுக்கு நம்மால் முடிந்த அளவு நம்முடைய ஞானத்தை,  தேவன் கற்றுக்கொடுத்த அறிவை, நாம் அறிந்த தகவல்களை, வேத விளக்கங்களை புரியாத சத்தியங்களை புரிய வைக்கக் கூடிய காரியங்களை, செய்யும்போது அதில் தேவன் மிகவும் பிரியப்படுகிறார்.

ஆவிக்குரிய செல்வத்தை பகிர்ந்து கொடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய ஊழியம்.

அது சிறிய அளவில் இருந்தாலும் பெரிய அளவில் இருந்தாலும், நம்முடைய திராணிக்கு ஏற்ப நம்முடைய கைகளுக்கு எது வாய்க்கிறதோ, அதை செய்யும் பொழுது தேவனுடைய நாமம் மகிமைப்படும்.

இந்த ஊழியங்களை முழு நேரப் பணியாளர்கள் தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.

இது முழு நேர பணியாளருக்கு போட்டியும் அல்ல.

மற்றவருக்கு போதிக்கும் சத்தியங்கள் சரியாக, வேத வசனத்தின் படி இருக்கிறது என்று நாம் உறுதியாக நம்பும் பட்சத்தில் எதிர்ப்பை குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .

நாம் பெற்ற இரட்சிப்பை அடக்கி மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருப்பது எவ்வளவு தவறோ அதுபோல நாம் அறிந்த சத்தியங்களை ,தகவல்களை நம்மோடு பழகுகின்ற கிறிஸ்தவ நண்பர்களுக்கும் விசுவாசிகளுக்கும் பகிர்ந்து கொள்ளாமல்
இருப்பதும் பாவம்.

தேவன் நம்மோடு இருக்கிறார்.
I கொரிந்தியர் 12 அதிகாரத்தை தியானிக்கவும். எசேக்கியல் சண்முகவேல்