Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1. அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 20

உங்கள் சிந்தனைக்கு:
1. அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 20
ஒருமைப் பட்ட யூத தேசம் இரண்டாகப் பிளந்தபோது, பத்து கோத்திரங்களை உடைய இஸ்ரவேல் அரசாங்கத்தின் முதல் மன்னனாக யெரொபெயாம் முடிசூட்டப்பட்டான்.
ஆனால், அவனுடைய ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் எருசலேம் நகரம் இல்லை. எனவே, தன் கீழ் உள்ள மக்கள் எருசலேம் நகரத்திற்கு சென்று தேவனை ஆராதிக்கும்போது அங்கே ஆளும் ரெகொபெயாமுக்கு ஆதரவாகச் சென்றுவிடுவார்கள் எனப் பயந்தான்.
அதனால், யெரொபெயாம் இரண்டு தங்கக் கன்று குட்டிகளைச் செய்து, ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்து மக்களை அவற்றை வழிபடச் செய்தான். மேலும், அந்த வழிபாட்டுக்கு லேவியர்கள் அல்லாதவர்களை ஆசாரியர்களாக நியமித்தான். தானும் பலிகளைச் செலுத்த பலிபீடத்திற்குப் போனான்.
அப்பொழுது, யெகோவாவின் வார்த்தையின்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு ஒரு தேவனுடைய மனிதன் வந்து,
“பலிபீடமே, பலிபீடமே, யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் சந்ததியில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான். இம்மேடையில் பலிசெய்யும் பூசாரிகளை அவன் உன்மேல் பலியிடுவான். உன்மேல் மனித எலும்புகள் எரிக்கப்படும்” என்று தீர்க்கதரிசனம் சொன்னார்.
(1 இராஜாக்கள் 13:1–2)
இது நடந்த ஒரு வரலாற்று சம்பவம். இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய உண்மைகள்:
1.
இங்கே அரசனை எதிர்த்து மிகத் தைரியமாகத் தீர்க்கதரிசனம் சொன்ன தேவ மனிதனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
பெயர் குறிப்பிடப்படாத ஒருவரைப் பயன்படுத்தி தேவன் ஒரு அரசனை எச்சரித்தார்.
அதாவது, தேவன் ஒரு உண்மையுள்ள மனிதனைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
அவன் பெயர் குறிப்பிடப்படாத போதிலும், அவன் சொன்ன யெகோவாவின் வார்த்தை 200 அல்லது 300 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது என்றால், அந்தத் தீர்க்கதரிசனத்தின் வல்லமை எவ்வளவு பெரிது என்பதை உணரலாம்.
இந்த இடத்தில் அவன் ஒரு நபரின் பெயரைக் தீர்க்கதரிசனமாகக் குறிப்பிட்டான்– யோசியா.
அவன் யூத தேசத்திலிருந்து எழுவான் என்று தீர்க்கதரிசனம் கூறப்பட்டது.
இப்படி முன்கூட்டியே பெயர் சொல்லப்பட்டு தீர்க்கதரிசனம் செய்யப்பட்ட மற்றொரு நபர் கோரேசு மன்னன் –
(ஏசாயா 44:28)
2.
இந்தப் பெயர் குறிப்பிடப்படாத தேவ மனிதன் சொன்ன தீர்க்கதரிசனம் 200 அல்லது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது.
(வியர்சிபி மற்றும் William MacDonald அவர்கள் 300 ஆண்டுகள் என்றும், Harold L. Willmington அவர்கள் 200 ஆண்டுகள் எனவும் கூறுகிறார்கள்.)
இந்தத் தீர்க்கதரிசனம் 2 இராஜாக்கள் 23:15-16 வசனங்களில் நிறைவேறியது என்பதை நாம் பார்க்கலாம்.
ஒரு தீர்க்கதரிசனம் உண்மையாக இருக்குமெனில், அது காலம் கடந்தாலும் நிறைவேறும் என்பதை இதில் அறிந்து கொள்ளலாம்.
பெயர் குறிப்பிடப்படாத தீர்க்கதரிசி ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும், தேவன் அவனைப் பயன்படுத்தினார்.
நாமும் புதிய ஏற்பாட்டில் தேவனால் தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்பட்டுள்ளோம்.
நாம் உண்மையுடன், வசனத்தின் படி நடக்கும்போது, தேவன் நம்மை நன்மைக்காகவும், சபைகளில் நடக்கும் தவறுகளை எச்சரிக்கவும் பயன்படுத்த விரும்புகிறார்.
அதற்காகத் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது – பயமற்ற, சமரசம் இல்லாத தைரியம்.
அந்தத் தைரியம், அந்தத் தேவ மனிதனிடம் இருந்தது.
அதனால்தான் தேவன் அவரைப் பயன்படுத்தினார்.
Ezekiel Shanmugavel