யோபுவின் புத்தகம் Expository Commentary on the Book of Job. வேதபாடம் – 7
*உங்கள் சிந்தனைக்கு.*
யோபுவின் புத்தகம்
*Expository Commentary on the Book of Job.*
*வேதபாடம் – 7*
யோபு புத்தகத்தில் 3ஆம் அதிகாரம் முதல் 31ஆம் அதிகாரம் வரை, யோபுவும் அவனுடைய நண்பர்களும் நடத்திய உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
*இந்த உரையாடல்கள் மூன்று சுற்றுகளாக (* *Three Rounds) அமைந்துள்ளன* .
முதல் சுற்று: 3–11 அதிகாரங்கள்
இரண்டாவது சுற்று: 12–20 அதிகாரங்கள்
மூன்றாவது சுற்று: 21–31 அதிகாரங்கள்
Three Rounds of Talks Job Had with His Friends
*இந்தப் பகுதியில் எலிப்பாஸ் யோபுவோடு பேசிய காரியங்களைச் சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.*
இவன் தனது பேச்சில் கடவுளைப் பற்றி பல காரியங்களைப் பேசுகிறான். *ஆனால், இவன் பேசிய எல்லா வார்த்தைகளையும் தேவனுடைய வார்த்தைகளாக* *நாம் கருதக்கூடாது. வேதாகமத்தில்* *இவை பதிவு செய்யப்பட்டுள்ளதால் மட்டுமே, அவனுடைய எல்லா* *கூற்றுகளையும் தேவனுடைய வார்த்தைகளாக அங்கீகரிக்க முடியாது.*
*பரிசுத்த ஆவியானவர் இந்த உரையாடல்களை* *உண்மையாக வேதாகமத்தில் பதிவு செய்ய ஏவினார். ஆனால்* , *அந்த உரையாடல்களில் கூறப்பட்ட ஒவ்வொரு* *கருத்தையும் அவர் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமல்ல* . எனவே, ஒவ்வொரு கருத்தையும் வேதாகமத்தின் முழுமையான வெளிப்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.
வேதாகமத்தில் தேவனுக்கு விரோதமாக மனிதர்கள் பேசிய வார்த்தைகளும், சாத்தான் கூறிய வார்த்தைகளும், கடவுளைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் யோபுவின் நண்பர்கள் கூறிய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
ஆகையால், அவற்றைப் பின்னணி, சூழ்நிலை மற்றும் வேதாகமத்தின் முழுமையான போதனையின் அடிப்படையில் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.
*இந்தப் புரிதல் ஒவ்வொரு விசுவாசிக்கும் மிகவும் அவசியமானது.*
இப்போது 4 மற்றும் 5ஆம் அதிகாரங்களில், தேவனைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாமல், யோபுவின் உண்மையான மனநிலையை அறியாமல் எலிப்பாஸ் கூறிய வார்த்தைகளைப் பார்ப்போம்.
எலிப்பாஸ் கூறிய தவறான கருத்துக்கள்
1. " *விதைத்ததைத்தான் அறுக்க முடியும்." (யோபு* 4:7–8)
யோபுவின் பாடுகள் அவனுடைய பாவத்திற்காக தேவன் கொடுத்த தண்டனை என்று எலிப்பாஸ் கூறுகிறான் (யோபு 5:17–18). ஆனால், யோபுவின் வாழ்க்கையைப் பற்றிய தேவனுடைய நோக்கத்தை அவன் அறியாததால், இந்த முடிவு தவறானதாக அமைந்தது.
2. யோபுவை மட்டம் தட்டிப் பேசினான்
மற்றவர்களை ஆறுதல்படுத்திய யோபு, தனக்குக் கஷ்டம் வந்தபோது மனம் கலங்கிவிட்டான் என்று கூறி, அவனுடைய பாடுகளை இகழ்ந்தான்.
*இவனுடைய பேச்சில் அன்பு காணப்படவில்லை. சரியான நேரத்தில், சரியான விதத்தில்* , *சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தினால்தான் ஒரு மனிதனை* *ஆறுதல்படுத்த முடியும். அப்படிப்பட்ட* *வார்த்தைகளை எலிப்பாஸ் பேசவில்லை.*
3. எலிப்பாஸ் கூறிய சில உண்மைகள்
எலிப்பாஸ் கூறியவற்றில் சில பொதுவான இறையியல் உண்மைகள் காணப்படுகின்றன.
" *அவர் ஆராய முடியாத அதிசயங்களையும், எண்ணிக்கையிட முடியாத* *அற்புதங்களையும் செய்கிறார்." (யோபு* 5:9)
இந்தக் கூற்று *வேதாகமத்தின் மற்ற பகுதிகளுடனும் ஒத்துப்போகும் உண்மையாகும்* .
ஆனால், இந்த உண்மைகளையே யோபுவின் தனிப்பட்ட சூழ்நிலைக்குத் தவறாகப் பயன்படுத்தியதால், எலிப்பாஸின் முடிவுகளும் அறிவுரைகளும் தவறாகிவிட்டன.
4. ஆதாரமில்லாத குற்றச்சாட்டு
எந்த ஆதாரமும் இல்லாமல், யோபு தன் பாவத்திற்காகத்தான் கஷ்டப்படுகிறான் என்று மறைமுகமாகக் கூறுகிறான்.
இது வேதாகமத்தின் வெளிப்பாட்டின்படி சரியானது அல்ல.
5. *தனிப்பட்ட ஆன்மீக அனுபவத்தை அதிகாரமாக்குகிறான்*
யோபு 4:12–21-ல், ஒரு தரிசனத்தை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்துக்களை முன்வைக்கிறான்.
தனிப்பட்ட தரிசனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கவோ, அவர்களைப் பற்றி தீர்ப்பு கூறவோ கூடாது. *ஒவ்வொரு ஆன்மீக அனுபவமும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் சோதிக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும். இல்லையெனில்* *தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
சுருக்கமாக
*எலிப்பாஸின் அறிவுரையில் உண்மையான Empathy* (உள்ளுணர்வுடன் பிறருடைய துயரைப் பகிர்ந்துகொள்ளுதல்) *காணப்படவில்லை.* *ஆரம்பத்தில் Sympathy (பரிதாப உணர்வு) இருந்தாலும்,* *உரையாடல் முன்னேறியபோது அதுவும் மங்கிப்போயிற்று* .
*Sympathy, Empathy-ஆக மாறாவிட்டால், அந்த Sympathy-க்கு உண்மையான* *பயன் இல்லை.*
எலிப்பாஸ் கூறியவற்றில் சில பொதுவான இறையியல் உண்மைகள் இருந்தாலும், அவற்றை யோபுவின் சூழ்நிலைக்குத் தவறாகப் பயன்படுத்தியதால், அவனுடைய அறிவுரைகள் ஆறுதலாக இல்லாமல் குற்றஞ்சாட்டுவதாக மாறின.
இதன் மூலம் தேவன் உணர்த்தும் பாடல்கள்.
அனேக நேரங்களில் அனுபவபூர்வமாக எதையும் புரிந்து கொள்ளாமல் வழங்கும் பிறருடைய ஆறுதல்கள் நம்முடைய பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு பதிலாக
நம்மை காயப்படுத்தி விடும்.
எனவே மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்கின்ற அந்தப் பணியில் மிகவும் எச்சரிக்கையாக அன்புடன் அணுக நமக்கு கடவுள் கிருபை தருவாராக.