Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*யோபுவின் புத்தகம் – Expository Commentary on the Book of Job* வேதபாடம் – 10.
*உங்கள் சிந்தனைக்கு.*

*யோபுவின் புத்தகம் – Expository Commentary on the Book of Job*
வேதபாடம் – 10.

பில்தாத்தின் ஆலோசனை: சரியான இறையியல், தவறான பயன்பாடு ( *Right Theology, Wrong Application)*


கடவுளுடைய அனுமதியின்படி சாத்தானால் துன்புறுத்தப்பட்ட யோபு, தன்னுடைய பிள்ளைகளையும், சொத்துக்களையும் அனைத்தையும் இழந்தான். இறுதியில் அவனுடைய உடலும் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவனுடைய உடல் புழுக்களாலும் புழுதிப்படலத்தாலும் மூடப்பட்டது; தோல் வெடித்து சீழ் வடிந்தது. அவன் அனுபவித்த வேதனை மனிதனால் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது.
அவனுடைய நிலையை அறிந்து அவனை ஆறுதல்படுத்த மூன்று நண்பர்கள் வந்தனர்: எலிப்பாஸ், பில்தாத், சோப்பார். *ஆனால், அவர்கள் யாரும் யோபுவின் வேதனையின் ஆழத்தை* *உணரவில்லை. ஒவ்வொருவரும்* *தாங்கள் அறிந்திருந்த இறையியல் புரிதலின்* *அடிப்படையில் அவனுக்கு ஆலோசனை கூறினர்கள்*
எலிப்பாஸ், யோபுவின் துன்பத்திற்குக் காரணம் அவனுடைய மறைவான பாவங்களாக இருக்கலாம் என்று கருதி, பாவத்தை அறிக்கையிட்டு தேவனுடைய இரக்கத்தை நாடும்படி அறிவுறுத்தினான். அவனுடைய முக்கிய வாதம்: "தேவன் நீதியுள்ளவர்; அவர் தவறு செய்யமாட்டார்."
அதன்பிறகு பில்தாத் பேசத் தொடங்கினான். இப்போது *அவனுடைய ஆலோசனையின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.*
பில்தாத், யோபுவின் பாரத்தையும் வேதனையையும் உணராமல், அவனுடைய புலம்பலை தேவனுக்கு விரோதமாகப் பேசப்பட்ட பலமான வார்த்தைகளாகக் குற்றம் சாட்டுகிறான். " *Your words are a blustering wind"* என்று அவன் கூறுகிறான்.
அவன் தேவனுடைய நீதியை மிகவும் உயர்த்திப் பேசினாலும், அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் உணரத் தவறுகிறான். மேலும், யோபுவின் பிள்ளைகளின் மரணத்திற்குக் காரணம் அவர்களுடைய பாவங்களே என்று கூறி, யோபுவின் மனவேதனையை இன்னும் அதிகப்படுத்துகிறான்.
பில்தாத்தின் வாதம்: "தேவன் ஒருபோதும் தவறு செய்யமாட்டார்." இது உண்மையே; ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. ஏனெனில், வேதாகமம் தேவன் நீதியுள்ளவராக மட்டுமல்ல, இரக்கமும் கிருபையும் நிறைந்தவராகவும் இருக்கிறார் என்று கற்பிக்கிறது.
பின்பு, மனிதனுடைய புரிதலைவிட முன்னோர்களின் அனுபவங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறான் (யோபு 8:8–10). அதாவது, மரபு (Tradition) மற்றும் முன்னோர்களின் அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு பேசுகிறான்.
அதன்பிறகு, இயற்கையில் காணப்படும் மூன்று உதாரணங்களை வைத்து யோபுவுக்கு அறிவுரை கூறுகிறான்.
1. கோரைப்புல்:
தண்ணீர் இல்லாமல் கோரைப்புல் வளராது; அது விரைவில் வாடிவிடும். அதுபோல, தேவனை மறந்தவர்களின் வாழ்க்கையும் நிலைக்காது என்று கூறுகிறான்.
2. சிலந்தி வலை:
சிலந்தி வலை மிகவும் பலவீனமானது; அதை நம்பினால் அது தாங்காது. அதுபோல, தேவபக்தி இல்லாதவர்களின் நம்பிக்கையும் வீணாகிவிடும் என்று வலியுறுத்துகிறான்.
3. வேரோடு பிடுங்கப்பட்ட செடி:
ஒரு செடி பசுமையாக வளர்ந்தாலும், வேரோடு பிடுங்கப்பட்டால் அதன் சுவடே இல்லாமல் போய்விடும். அதுபோல, துன்மார்க்கர்களின் செழிப்பும் தற்காலிகமானது என்று கூறுகிறான்.
பில்தாத்தின் ஆலோசனையின் சாராம்சம்
தேவன் நீதியுள்ளவர்; ஆகையால் குற்றமற்றவரை அவர் தண்டிக்கமாட்டார். யோபு மனந்திரும்பி தேவனை நாடினால், தேவன் மீண்டும் அவரை ஆசீர்வதிப்பார் (யோபு 8:5–7) என்று பில்தாத் வலியுறுத்துகிறான்.
ஆனால், யோபுவின் தற்போதைய துன்பம் ஏதோ ஒரு பாவத்தின் விளைவு என்ற தவறான முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்
பில்தாத் கூறிய இயற்கை உதாரணங்கள் பல உண்மையான ஆவிக்குரிய கொள்கைகளை எடுத்துரைக்கின்றன. *ஆனால், அந்த உண்மைகளை யோபுவின் சூழ்நிலைக்கு* **தவறாகப் பயன்படுத்தினான்* .
*வேதாகமம் நமக்குக் கற்பிப்பது என்னவென்றால்* , *சரியான சத்தியத்தைக்கூட தவறான நேரத்தில், சரியான ஒருவருக்கு *பயன்படுத்தினால், அது ஆறுதலாக இல்லாமல் காயப்படுத்தும்* .
எனவே, துன்பப்படுகிறவர்களை உடனடியாகக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்காமல், இரக்கத்துடனும் ஞானத்துடனும் அணுக வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால்:
" *சரியான இறையியல்; ஆனால் தவறான பயன்பாடு."*
*Right Theology, Wrong Application.*