Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோபுவின் புத்தகம் – Expository* *Commentary on the Book of Job.* *வேதபாடம் – 11*
*உங்கள் சிந்தனைக்கு.*

*யோபுவின் புத்தகம் – Expository* *Commentary on the Book of Job.*

*வேதபாடம் – 11*
*கடவுளை வழக்காட அழைத்த யோபு*

*யோபு புத்தகத்தின் ஒன்பதாவது அதிகாரம், அதன் ஆழமான இறையியல் சிந்தனைகளால்* *மிகவும் முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகும்.* இவ்வதிகாரத்தில், யோபு தன் துயரத்தின் மத்தியில் இரண்டு அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறார். அந்தக் கேள்விகளே அவனை தேவனோடு வழக்காட விரும்பும் நிலைக்கு கொண்டு செல்கின்றன.
அவன் அனுபவித்த அளவற்ற துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் காரணம் என்ன என்பதை அறிய வேண்டும் என்ற ஏக்கத்தில்தான் இந்தக் கேள்விகள் எழுகின்றன.
யோபுவின் இரண்டு முக்கியக் கேள்விகள்
1. மனிதன் தேவனுக்கு முன்பாக எவ்வாறு நீதிமானாக நிரூபிக்கப்பட முடியும்? (யோபு 9:1–13)
2. நான் தேவனை ஒரு நீதிமன்றத்தில் எவ்வாறு சந்தித்து என் வழக்கை எடுத்துரைப்பேன்? (யோபு 9:14–35)
இந்த இரண்டு கேள்விகளின் வெளிச்சத்தில் இந்த அதிகாரத்தைத் தியானிப்போம்.
இங்கு "நீதிமானாக இருப்பது" என்பது இரட்சிப்பைப் பற்றிய கேள்வி அல்ல. அது தன்னை நீதிமானாக நிரூபித்தல் ( *Vindication* ) பற்றிய கேள்வியாகும்.
அதாவது, "நான் குற்றமற்றவனாக இருந்தும் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன்? என் நிலையை தேவனிடம் எவ்வாறு விளக்குவது?" என்பதே யோபுவின் மனவேதனை.
தேவனோடு வழக்காடி வெற்றி பெற முடியாது என்பதை யோபு நன்றாக அறிந்திருந்தான். தேவன் ஆயிரம் கேள்விகள் கேட்டால், மனிதனால் ஒன்றுக்குக் கூட பதிலளிக்க முடியாது என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
இதையே பின்னர் யோபு புத்தகத்தின் இறுதியில் காண்கிறோம். தேவன் யோபுவிடம் பல கேள்விகளை எழுப்புகிறார்; அவற்றில் ஒன்றிற்குக் கூட யோபுவால் பதிலளிக்க முடியவில்லை. ஏனெனில்,
"இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவருக்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி வளமுடன் வாழ்ந்தவர் யார்?" (யோபு 9:4)
அப்படியிருந்தும், யோபு தேவனை வழக்காட அழைக்கிறான். அது தேவனை வெல்லும் நோக்கத்தில் அல்ல; *தன் நிலையை விளக்க வேண்டும் என்ற* ஆழ்ந்த ஏக்கத்தினாலே.
ஏன் யோபு ஒரு நடுவரை விரும்பினான்?
தனது நீதியை எடுத்துரைக்க மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு நடுவர் தேவை என்று யோபு உணர்ந்தான்.
அவனுடைய உள்ளத்தின் கேள்விகள் இவை:
"நான் செய்த குற்றம் என்ன?"
"ஏன் இந்த அளவுக்கு தண்டிக்கப்படுகிறேன்?"
"நான் அறியாத ஏதோ பாவத்திற்காக என்னைத் தண்டிக்கிறீரா?"
"என் வழக்கை எடுத்துரைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்."
இவை தேவனுக்கு எதிரான கிளர்ச்சியின் வார்த்தைகள் அல்ல. மாறாக, நீதியை அறிய ஏங்கிய ஒரு விசுவாசியின் மனவேதனையின் வெளிப்பாடுகள்.
*இந்த இடத்தில் யோபு ஒரு மிகப் பெரிய ஆவிக்குரிய சத்தியத்தை வெளிப்படுத்துகிறான். அதாவது,* *தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு நடுவர் அவசியம்* *என்பதை உணர்கிறான்.*
*புதிய ஏற்பாட்டில் அந்த இடத்தை ஆண்டவராகிய இயேசு* *கிறிஸ்து நிரப்புகிறார்* .
"தேவன் ஒருவரே; தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே; அவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு." (1 தீமோத்தேயு 2:5)
யோபுவின் இந்த ஏக்கத்திற்கான முழுமையான பதில் இயேசு கிறிஸ்துவிலேயே நிறைவேறுகிறது.
*கடவுள்* *யோபுவின் இந்தக் கேள்விகளை குற்றமாகக் கருதவில்லை* . காரணம்:
அவன் தேவனை மறுக்கவில்லை.
விக்கிரகங்களை நாடவில்லை.
தன் விசுவாசத்தை கைவிடவில்லை.
வேதனையின் மத்தியிலும் தேவனிடமே பேசினான்.
இந்த அதிகாரம் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள்
*துன்பத்தின் நேரத்தில் "ஏன்?" என்று தேவனிடம் கேட்பது பாவமல்ல;* *ஆனால் பணிவோடும் விசுவாசத்தோடும் கேட்க வேண்டும்.*
*தேவனுடைய நீதியை மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள* *முடியாது* .
நமக்குப் புரியாத சூழ்நிலைகளிலும் தேவன் நீதியுள்ளவராகவே இருக்கிறார்.
மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தர் அவசியம்; புதிய ஏற்பாட்டில் அந்த மத்தியஸ்தர் இயேசு கிறிஸ்து என்பதை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
விசுவாசம் என்பது எல்லாப் பதில்களும் கிடைத்த பிறகு தேவனை நம்புவது அல்ல; பதில்கள் இல்லாதபோதும் அவரை நம்பித் தொடர்வதே உண்மையான விசுவாசமாகும்.
முடிவுரை
*எனவே, யோபு 9ஆம் அதிகாரம் தேவனுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின்* *பதிவு அல்ல. மாறாக, நீதியை நாடிய ஒரு வேதனையுற்ற விசுவாசியின் ஆழமான உரையாடலாகும்* .
*வேதாகமத்தில், "தேவனோடு வழக்காட விரும்புகிறேன்* " *என்ற எண்ணத்தை வெளிப்படையாக வெளிப்படுத்திய முதல் நபர் யோபுதான். அது அவனுடைய அவிசுவாசத்தின் அடையாளமல்ல* ; *மாறாக, அவனுடைய வேதனை எவ்வளவு உண்மையானது*என்பதற்கான சாட்சியாகும்.
அவனுடைய கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லை. ஆனால், இறுதியில் அவன் தேவனை* இன்னும் ஆழமாக அறிந்தான். அதுவே யோபுவின் வாழ்க்கையும், இந்த அதிகாரமும் நமக்குக் கற்பிக்கும் மிகப் பெரிய பாடமாகும்.