பண ஆசை
*உங்கள்* *சிந்தனைக்கு !*
இரவும் பகலும் வேலை செய்து. இரவும் பகலும் வேண்டுதல் செய்து சபையாரை பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி பவுல் முயற்சிசெய்தார்.
ஆனால் இன்று சில ஊழியர்கள் இரவும் பகலும் பிரசங்கம் செய்து நம்மை உலகின் மிக சிறந்த செல்வந்தர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
1 தெச 1:9.2:11-13
கடவுள் கொடுத்த வாழ்க்கையில் திருப்தியடையாமல் அழைப்பில் மகிழ்ச்சி அடையாமல்
தங்கள் அழைப்பை மறந்து
பண ஆசையால் வீழ்ந்த பல நபர்களை வேதத்தில் பார்க்கலாம்.
*1. யூதாஸ் காரியோத்*
இயேசுவை 30 வெள்ளி நாணயங்களுக்கு விற்றான்.
(மத்தேயு 26:14–16; 27:3–5)
பண ஆசை காரணமாக தன் இரட்சகரைத் துரோகமிட்டான், பின்னர் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டான்.
*2.கேயாசி*
தீர்க்கதரிசி எலிசாவின் ஊழியக்காரன்.
நாகமான் கொடுத்த பரிசுகளை எலிசா மறுத்தபோது, கேயாசி பொய் சொல்லி அதை எடுத்துக்கொண்டான்.
அதன் விளைவாக நாகமானின் குஷ்டம் அவனுக்கு வந்தது.
(2 இராஜாக்கள் 5:20–27)
*3.பிலேயாம்*
மோவாபின் ராஜா பாலாக் கொடுத்த பரிசுகளுக்காக தேவனுடைய கட்டளையை மீற முயன்றான்.
(எண்ணாகமம் 22–24; 2 பேதுரு 2:15; யூதா 1:11)
அவன் ஆசை அவனை வழிதவறச்செய்தது.
*4.ஆகான்*
எரிகோவிலிருந்து கொள்ளையாக எடுத்துக்கொண்டு வரப்பட்ட பொருட்களை (தங்கம், வெள்ளி, அழகான ஆடை) கடவுளின் கட்டளையை மீறி எடுத்துக்கொண்டான்.
(யோசுவா 7:20–25)
அதனால் இஸ்ரவேல் தோல்வியைச் சந்தித்தது; பின்னர் அவன் குடும்பத்தோடு தண்டிக்கப்பட்டான்.
பண ஆசை குறித்து வேதம் விரிவாக எச்சரிக்கிறது.
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும், அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோத்தேயு 6:9,10
எபி.13:5 ல் நாம் பண ஆசை இல்லாதவர்களாக நடக்க வேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது.
இயேசு கிறிஸ்துவை போல் பண ஆசையை கடுமையாக விமரிசனம் செய்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது .
“ஒரு செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது ஒட்டகமொன்று ஊசியின் கண்ணிலே போவது போல கடினம்.” என்கிற இந்த ஒரு வார்த்தையே நாம் பணக்காரனாக மாறுவது எவ்வளவு அவசியமற்றது தேவையற்றது என்பதை உணர்த்துகிறது.
செல்வத்தை கடவுள் கொடுத்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம்
ஆனால் அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொண்டு அழைப்பை இழந்து ஆவிக்குரிய தரித்திரனாக வாழ்வதைவிட ஆவிக்குரிய பரிதாபம் வேறு ஒன்றும்இருக்க முடியாது.
ஆனால் இன்று சில போதகர்கள் இதைப்பற்றி அதிகமாக போதிப்பதில்லை.
பொருளாசையை பாவம் என்று உணர்த்துவதில்லை
கடவுள் நமக்கு அளித்திருக்கிற ஆவிக்குரிய செல்வத்தை முக்கியப்படுத்தாமல் உலக மக்கள் நாடுகின்ற, தேடுகின்ற செல்வத்தை முக்கியப்படுத்தி பேசுவதன் மூலமாக கிறிஸ்தவம் தடம் மாறி சென்று கொண்டிருப்பது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்க தேசம் ஒரு காலத்தில் கிறிஸ்தவ நாடு என்று பெயர் பெற்றிருந்தாலும் அதனுடைய பொருளாதார வளர்ச்சி அதன் மேன்மை இன்று அதனை ஆவிக்குரிய பாதாளத்தில் தள்ளி விட்டது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
நாம் ஒரு காரியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்கிற சிந்தனை நம்மில் ஒருபோதும் ஆட்சி செய்யாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தீர்மானத்தில் வைராக்கியமாக இருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.