2 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம் வேத பாடம் 11
*உங்கள் சிந்தனைக்கு.*
*2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* .
*வேத பாடம் 11.*
*யோவாசின்* *மறுபக்கம்*
குழந்தையாக இருக்கும்போது தன்னை கொலை செய்து தாவீதின் வம்சத்தை அழிப்பதற்கு முயற்சி செய்த அத்தாலியாளின் சதியிலிருந்து தன்னைக் காப்பாற்றியவன் ஆசாரியன் யோய்தா.
அவன் மரிக்கும் வரை யோவாசுக்கு உறுதுணையாக இருந்தான்.
யோய்தா உயிரோடு இருந்தவரை யோவாஸ் பாதுகாப்பாக இருந்தான்.
ஆனால் அவன் மரித்தபிறகு யோவாஸ் கடவுளுடைய வழிகளில் பிரியமாக நடக்கவில்லை. இதை அறிந்த அவனுடைய குமாரன் அதைக் கண்டித்து கடவுளுடைய வார்த்தைகளைக் கூறி அவனை எச்சரித்தபோது அரசனின் கட்டளைப்படி யெகோவாவின் ஆலய முற்றத்தில் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
அரசன் யோவாஸ் சகரியாவின் தகப்பன் யோய்தா தன்னில் காட்டிய தயவை நினைவில் கொள்ளாமல் அவனுடைய மகனைக் கொன்றான்.
*2 நாளாகமம் 24:22*
இது அவனுடைய மிகப் பெரிய நன்றியில்லாத செயல்.
அதன் விளைவு,
அவனுக்கு விரோதமாக வந்த
சீரியாவின் இராணுவம் சிறு கூட்டமாக வந்திருந்தாலும். யெகோவா யூதாவின் பெரிய இராணுவப் படையைச் சீரியரின் கையில் கொடுத்தார்.
யூதா தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டிருந்ததால் யோவாஸிற்கு நியாயத்தீர்ப்பு வந்தது.
*2 நாளாகமம் 24:24*
இந்தப் போரிலே அவன் படுகாயம் அடைந்தான். பின்பு மரித்துப் போனான்.
அவனது சரீரம் தாவீதின் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனாலும், அரசர்களுடன் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.
இந்த நிகழ்வுகள்மூலம் கடவுள் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
1.நாம் கடவுளோடு வாழும்பொழுது மிகப்பெரிய எதிரிகள் நமக்கு விரோதமாக வந்தாலும் நமக்கு சேதாரம் அதிகமாக இருக்காது.
ஆனால் கடவுளின் வழிகளை விட்டு விலகிப் போகும்போது நாம் எவ்வளவு பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு சிறிய எதிரியும் நம்மை வீழ்த்தி விடுவான் என்பதற்கு யோவாஸின் வாழ்க்கை ஒரு பாடம்.
2.கடவுளை விட்டு விலகிப் போகும் போது நாம் அதற்கு முன்பாக செய்த அனைத்து ஊழியங்களின் பலனை இழந்து விடுவோம்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் செய்த ஊழியங்களின் பலன்களை முழுமையாக பெற வேண்டுமென்றால் முடிவு மட்டும் கர்த்தருடைய வழிகளில் நடக்க வேண்டும். வழி விலகிப் போவோமென்றால் அதுவரை செய்த ஊழியங்களின் பலனை முழுமையாக பெற முடியாது.
புதிய ஏற்பாட்டில் இதைப் பற்றி யோவான் தெளிவாக எழுதுகிறார்.
"ஆகவே நீங்கள் உங்கள் கடும் உழைப்பின் பலனை இழந்து போகாமல் கவனமாயிருங்கள். அந்த வெகுமதியை நீங்கள் முழு நிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்."
*2 யோவான் 1:8*
யோவாஸ் யோய்தாவுக்கு நன்றி இல்லாதவனாக காணப்பட்டது மட்டுமல்லாமல் கடவுளுடைய வழிகளை விட்டு விலகி அதுவரை அவன் செய்த நன்மையான காரியங்களின் பலனை அடைய முடியாமல் போய்விட்டான்.
நம்முடைய ஆவிக்குரிய ஆரம்பம் எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டுமோ அது போல் நம்முடைய ஓட்டமும் அதன் முடிவும் மகிமையாய் இருக்க வேண்டும்.
அவன் இறந்து தாவீதின் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆனாலும், அரசர்களுடன் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.
இதுவே நம்மைக் குறித்து தேவனுடைய சித்தம்.
அப்போஸ்தலனாகிய பவுலுடைய வார்த்தைகளை இங்கே குறிப்பிட்டு முடிக்க விரும்புகிறேன்.
"நீங்கள் இவ்வளவு மூடத்தன முள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா?
கலாத்தியர் 3:3*
நல்ல ஆரம்பம் சிறப்பான முடிவுக்கு உத்திரவாதம் அல்ல.